PUBLISHED ON : பிப் 11, 2024 12:00 AM

'ஒரு காலத்தில் எவ்வளவு செல்வாக்காக இருந்தவர். இப்போது, அவரது பிள்ளைகள் இப்படி எலியும், பூனையுமாக செயல்படுவதை பார்த்தால் கவலையாக உள்ளது...' என்கின்றனர், குஜராத் மாநில காங்., கட்சியினர்.
காங்கிரஸ் தலைவர் சோனியாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாக செயல்பட்டவர், அகமது படேல். காங்கிரஸ் மேலிடம் எடுக்கும் எல்லா முக்கிய முடிவுகளின் பின்னணியிலும் இவர் இருப்பார்.
இவர், குஜராத் மாநிலம், பரூச் என்ற பகுதியைச் சேர்ந்தவர். இந்த தொகுதியில் அவர் ஏற்கனவே எம்.பி.,யாக வெற்றி பெற்றுள்ளார். அவரது மறைவுக்குப் பின், அவரது மகன் பைசல் படேல், மகள் மும்தாஜ் ஆகியோர் அரசியல் களத்திற்குள் வந்துள்ளனர்.
விரைவில் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் பரூச் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார், பைசல்.
அவரது சகோதரியும், 'தந்தையின் அரசியல் வாரிசு நான் தான். எனக்கு தான் அந்த தொகுதி வேண்டும்...' என, காங்கிரஸ் மேலிடத்துக்கு துாது விட்டுள்ளார். இங்கு ஆம் ஆத்மி கட்சிக்கும் செல்வாக்கு உள்ளதால், அந்த கட்சியும், 'இண்டியா' கூட்டணியில் இடம் பெற்றுள்ளதால் எளிதில் வெற்றி பெற்று விடலாம் என, இருவருமே நினைத்தனர்.
ஆம் ஆத்மி கட்சியோ, பரூச் தொகுதி வேட்பாளராக பழங்குடியினத்தில் செல்வாக்கு மிக்க ஒருவரை வேட்பாளராக அறிவித்து விட்டது. இதனால் பைசல், மும்தாஜ் ஆகியோர் மட்டுமல்லாமல், காங்கிரஸ் மேலிடமும், 'சகோதர யுத்தத்தால் தொகுதியை கோட்டை விட்டு விட்டோமே...' என, அதிர்ச்சி அடைந்துள்ளது.