PUBLISHED ON : பிப் 02, 2024 12:00 AM

'பாவம்; இவருக்கு பதவி யோகம் இல்லை போலிருக்கிறது...' என, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் பற்றி பரிதாபப்படுகின்றனர், அங்குள்ள அரசியல்வாதிகள்.
இங்கு, முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் இங்கு நடந்த அதிரடி அரசியல் மாற்றம் காரணமாக, ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
முதல்வராக நிதீஷ் குமார் தொடர்ந்தாலும், கூட்டணி ஆட்சியில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த ராஷ்ட்ரீய ஜனதா தளம் கழற்றி விடப்பட்டு, இப்போது பா.ஜ., இணைந்துள்ளது.
ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில் துணை முதல்வராக இருந்த, லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவுக்கு இப்போது பதவி பறிபோய் விட்டது; எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளார்.
ஏற்கனவே, ஒரு முறை இதே நிதீஷ் குமார் முதல்வராகவும், தேஜஸ்வி துணை முதல்வராகவும் பதவியில் இருந்தனர். அப்போதும் நிதீஷ் அடித்த, 'அந்தர்பல்டி' காரணமாக தேஜஸ்வியின் பதவி பறிபோனது.
தற்போது, இரண்டாவது முறையாக அவரது பதவி மீண்டும் பறிபோய், பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அவரது விசுவாசிகளோ, 'நம்ம ஆளுக்கு, துணை முதல்வர் பதவியே நிலைக்க மாட்டேன் என்கிறதே; முதல்வர் பதவியை எப்படி அடையப் போகிறார். அது, வெறும் கனவாகவே போய் விடுமோ...' என, புலம்புகின்றனர்.


