PUBLISHED ON : ஜூலை 07, 2026 12:00 AM

'மீண்டும் முதல்வர் பதவியில் அமர்ந்து விடலாம் என நினைத்தால், அதற்கு முட்டுக்கட்டை ஏற்படும் போலிருக்கிறதே...' என கவலையில் ஆழ்ந்துள்ளார், உத்தர பிரதேச மாநில முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான யோகி ஆதித்யநாத்.
இவர், 2017, 2022 என தொடர்ந்து இரண்டு சட்டசபை தேர்தல்களிலும் வெற்றி பெற்று, முதல்வராக இருக்கிறார்.
அடுத்தாண்டு துவக்கத்தில், உ.பி., சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதிலும், பா.ஜ.,வுக்கு வெற்றி கிடைக்கும்; ஆதித்யநாத் தான் மீண்டும் முதல்வராவார் என, அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.
இந்நிலையில், உ.பி.,யில் உள்ள பிரசித்தி பெற்ற அயோத்தி ராமர் கோவிலில், காணிக்கை மற்றும் நன்கொடையில் பெரும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. கோவிலில் பணியாற்றிய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம், முதல்வர் ஆதித்யநாத்துக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. 'ராமர் கோவில் என்பது, நாடு முழுதும் உள்ள ஹிந்துக்களின் உணர்வுப்பூர்வமான விஷயம். அறக்கட்டளை நிர்வாகிகளின் முறைகேடுகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்காதது ஏன்?' என, உ.பி., முதல்வருக்கு கட்சி மேலிட தலைவர்கள், 'டோஸ்' விட்டுள்ளனர்.
இதனால், 'மீண்டும் ஆதித்யநாத் முதல்வராவார் என்பது கனவாகவே போய் விடுமோ...' என, அவரது ஆதரவாளர்கள் கவலைப்படுகின்றனர்.
