PUBLISHED ON : மே 05, 2026 12:42 AM

'மாநில கட்சிகள் தான், மொழி அரசியல் செய்கின்றன என்றால், தேசிய கட்சியுமா இப்படி...' என கவலைப்படுகின்றனர், வட மாநிலங்களைச் சேர்ந்த மக்கள்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் மாநில அரசு, ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
'மஹாராஷ்டிராவில் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டும் டிரைவர்கள் அனைவரும், பயணியரிடம் மராட்டி மொழியில் தான் பேச வேண்டும்' என்பது, அந்த உத்தரவு; இது, மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஆட்டோ, டாக்சி டிரைவர்களிடையே கவலையையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
இங்கு வாடகை வாகனங்கள் ஓட்டும் டிரைவர்களில் பெரும்பாலானோர் உத்தர பிரதேசம், பீஹார் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு ஹிந்தி தவிர, வேறு எந்த மொழியும் சரியாக தெரியாது.
இதற்கு விளக்கம் அளித்துள்ள மஹாராஷ்டிர அரசு, 'மூன்று மாதங்களுக்குள் ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் மராட்டி மொழி பேச அவகாசம் அளிக்கப்படும். அதன்பின்னும் பேசவில்லை என்றால், நடவடிக்கை பாயும்...' என தெரிவித்துள்ளது.
இது குறித்து, மஹாராஷ்டிர மாநில பா.ஜ.,வினரிடம் கேட்டபோது, 'ராஜ் தாக்கரேயின் மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா, உத்தவ் தாக்கரேயின் சிவசேனா போன்ற கட்சிகள், மொழியை வைத்து தான் அரசியல் செய்கின்றன. அவர்களை சமாளிக்க, எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை...' என்கின்றனர்.





