PUBLISHED ON : ஜூன் 10, 2026 12:10 AM

'தொடர் தோல்விகளுக்கு அப்புறம், இப்போது தான் எங்கள் தலைவருக்கு விழிப்புணர்வு வந்துள்ளது...' என, ராகுல் பற்றி காங்., கட்சியினர் கூறுகின்றனர்.
தேர்தல் வியூகம் வகுப்பது, வேட்பாளர்களை அறிவிப்பது, பிரசாரத்தை துவங்குவது என, தேர்தல் தொடர்பான பணிகளில் எப்போதும் நத்தை வேகத்தில் பயணிப்பது தான் காங்., மேலிடத்தின் வழக்கம். இதன் காரணமாகவே, பல தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.
இந்நிலையில், சமீபத்தில் காங்கிரஸ் மேலிடம் எடுத்த சில அதிரடியான முடிவுகள், அந்த கட்சி நிர்வாகிகளுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளன. கேரளாவில் கடந்த ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது.
காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும், அந்த கட்சியின் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபாலை முதல்வராக தேர்வு செய்ய பரிந்துரைத்தனர். ஆனால் ராகுலோ, 'மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அதனால், சதீசன் தான் முதல்வராக தேர்வு செய்யப்பட வேண்டும்...' என, உறுதியாக தெரிவித்து விட்டார்.
வரும் 2028ல், கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதை அடுத்து, அதற்கு இப்போதே தயாராகும் விதமாக, சித்தராமையாவை துாக்கி விட்டு, சிவகுமாரை முதல்வராக நியமித்தார் ராகுல்.
இந்த நிகழ்வுகளுக்கு பின், 'எங்கள் தலைவர் ராகுல் களம் இறங்கி விட்டார். இனி, எங்களுக்கு வெற்றி மீது வெற்றி வந்து சேரும்...' என, காங்கிரசார் உற்சாகத்துடன் கூறுகின்றனர்.
