நீண்ட நாள் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு: 'தினமலர்' செய்தியால் ஏற்பட்ட விமோசனம்
நீண்ட நாள் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு: 'தினமலர்' செய்தியால் ஏற்பட்ட விமோசனம்
PUBLISHED ON : ஆக 12, 2026 12:01 AM

பொங்கலுார்:கொடுவாய் பகுதியில், 25 லட்சம் ரூபாய் செலவில் கழிவுநீர் கால்வாய்கள் கட்டப்பட்டுள்ளது. கழிவு நீர் ஓரிடத்தில் சென்று பூமியில் இறங்கும் வகையில் சந்தை கடை ரோடு, ஈஸ்வரன் கோவில் உள்ளிட்ட இடங்களில் சமுதாய உறிஞ்சு குழி அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், அளவுக்கு அதிகமான கழிவுநீர் வெளியேறுவதால், அவை பூமிக்குள் இறங்காமல் அது ரோட்டில் வழிந்தோடுகிறது. இதனால், அருகிலுள்ள சந்தை கடை, குடியிருப்புகள் வணிக வளாகங்கள், கடைகள் உள்ள பகுதியில், கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது.
இதனால், அப்பகுதியில் வசிப்போர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில், படத்துடன் செய்தி பிரசுரமானது. இதனை தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் தற்பொழுது கழிவு நீரை வெளியேற்றும் வகையில் அந்த இடத்தில் தரை மட்டப்பாலம் கட்டப்பட்டு வருகிறது. பாலம் வேலை முடிந்தபின் கழிவு நீர் அனைத்தும் பாலத்தின் வழியாகச் சென்று அருகில் உள்ள ஓடைக்குச் சென்று விடும். 'தினமலர்' செய்தியால், கொடுவாய் பகுதி மக்களின் நீண்ட நாள் பிரச்னை விரைவில் முடிவுக்கு வர உள்ளது.
