PUBLISHED ON : ஜூன் 02, 2024 12:00 AM

காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே: பிரதமருக்கு கடவுள் மீது அதீத நம்பிக்கை இருந்தால், அதை அவரது வீட்டுக்குள்ளே வைத்துக் கொள்ள வேண்டும். கன்னியாகுமரிக்கு போய், பிரதமர் ஒரு நாடகத்தை நடத்தியுள்ளார். இந்த நாடகத்துக்காக, எத்தனை எத்தனை போலீசார், களம் இறங்கி பணி செய்ய வேண்டியுள்ளது! அவர்களுக்கு தரப்படுவதெல்லாம், இந்த நாட்டு மக்களின் வரிப்பணம் தானே! இவ்வளவு செய்து, வரிப்பணத்தை, வீணடித்தே தான் ஆக வேண்டுமா! வேண்டுமானால், உங்கள் சொந்த காசில் இந்த செலவை செய்யுங்களேன்!
டவுட் தனபாலு: காங்., ஆட்சி காலங்களில் இருந்த பிரதமர்கள், அமைச்சர்கள் யாருமே கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டதே இல்லையா... அப்ப எல்லாம், அவங்க தங்களது சொந்த காசில் தான் சென்று வந்தாங்களா என்ற, 'டவுட்'டுக்கு தங்களிடம் பதில் இருக்குதா?
அ.தி.மு.க., பொது செயலர் பழனிசாமி: தி.மு.க., அரசு, தேர்தல் சமயத்தில் அரசு ஊழியர்கள் தொடர்பாக அள்ளி வீசிய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. எனவே, அரசு ஊழியர் சங்கங்களும், போக்குவரத்து ஊழியர் சங்கங்களும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. அனைத்து அரசு ஊழியர் சங்கங்களையும் அழைத்து பேசி, அவர்களின் குறைகளை உடனடியாக களைய வேண்டும். தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
டவுட் தனபாலு: அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை அவங்க நிறைவேற்றாமல் இருப்பது, எதிர்க்கட்சியான உங்களுக்கு தானே லாபம்... ஆளுங்கட்சி மீதான எதிர்ப்பு ஓட்டுகள் எல்லாம் உங்க கட்சிக்கு வரும்னு யோசித்து பார்க்காமல், வேண்டுகோள் விடுக்குறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்: நான் சிறைக்கு சென்றால், மக்களின் நிலையை எண்ணி வருந்துகிறேன். நான் சிறைக்கு சென்றால், என் வயதான பெற்றோரை பார்த்து கொள்ளவும், அவர்கள் நல்ல உடல்நலனுடன் இருக்க இறைவனிடம் பிராத்தனை செய்யுங்கள். இதேபோல், என் வாழ்வின் கடினமான கால கட்டங்களில் எனக்கு உறுதுணையாக இருப்பது என் மனைவி சுனிதா தான். உங்களின் ஆசிர்வாதத்தால், நான் நலமுடன் இருப்பேன். கடவுள் விரும்பினால், விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவேன்.
டவுட் தனபாலு: தமிழ் சினிமா கிளைமாக்ஸ்ல, ஜெயிலுக்கு போற ஹீரோ மாதிரி உருக்கமா பேசுறீங்களே... ஆனா, சட்டமும், நீதியும் இந்த உருக்கம், கண்ணீருக்கு எல்லாம் அடிபணியாது என்பதில், 'டவுட்'டே இல்லை!