Dinamalar Logo


 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

PUBLISHED ON : பிப் 01, 2026 03:26 AM


Google News
Latest Tamil News
த.வெ.க., தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா: இந்நேரம், 32 மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணம் செய்திருக்க வேண்டும். அதை தடுக்கவே, கரூரில் சூழ்ச்சி செய்தனர். அதை, 30 நாட்களில் கரூர் மக்கள் துாக்கி எறிந்து விட்டனர். அதேபோல், ரவுடிகளை வைத்து அரசியல் செய்யும் தி.மு.க.,வையும் மக்கள் துாக்கி எறிவர். அ.தி.மு.க., ஏற்கனவே காணாமல் போய் விட்டது; எனவே, அவர்களை பற்றி பேச வேண்டாம்.



டவுட் தனபாலு: அ.தி.மு.க.,வை பற்றி நீங்க பேசாமல் இருக்கலாம்... ஆனா, அவங்க கூட்டணிக்கு நீங்க வரமாட்டேன்னு உறுதியா தெரிஞ்சிட்டதால, உங்க தலைவர் விஜயை பழனிசாமியே விமர்சிக்க துவங்கிட்டாரே... இனியும் நீங்க மவுனமா இருந்தீங்க என்றால், உங்க கட்சியை, 'அ.தி.மு.க., - பா.ஜ.,வின் பி டீம்'னு தி.மு.க.,வினர் திட்ட ஆரம்பிச்சிடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

தமிழக சபாநாயகர் அப்பாவு: மதுரை வடக்கு தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., தளபதி, கூட்டணி கட்சிகள் பற்றி பேசியது குறித்து, முதல்வர் ஸ்டாலின் கண்டித்துள்ளார். கூட்டணி கட்சிகளை சேர்ந்தோர், ஆளாளுக்கு கூட்டணி குறித்து கருத்து சொல்வது தவறு. தமிழக வெற்றிக் கழகமும், பா.ஜ.,வும் இணைந்து நாடகம் ஆடுகின்றன. கொள்கை இல்லாமல் இரு கட்சிகளும் இணைந்து, தி.மு.க.,வுக்கு எதிராக சிறுபான்மையினர் ஓட்டுகளை பிரிக்க முயற்சிக்கின்றன.



டவுட் தனபாலு: யாரும், யார் ஓட்டுகளையும் பிரிச்சிட்டு போகட்டும்... சபாநாயகர் என்ற பொறுப்பான, நடுநிலையான பதவியில் இருக்கும் நீங்க, தி.மு.க., மாவட்டச் செயலர் போல அரசியல் பேசுவது சரியா... அது, நீங்க வகிக்கும் பதவிக்கு அழகா என ஏகப்பட்ட, 'டவுட்'கள் எழுதே!

பத்திரிகை செய்தி: அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை நடத்தி வரும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தன் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தை, ராமநாதபுரம் கிழக்கு, ராமநாதபுரம் மேற்கு என இரண்டாக பிரித்துள்ளார். ராமநாதபுரம் கிழக்கு மாவட்டத்துக்கு அழகர்சாமி; மேற்கு மாவட்டத்துக்கு மூக்கையா ஆகியோரை மாவட்டச் செயலர்களாக நியமித்துள்ளார்.

டவுட் தனபாலு: அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தின் பெயரில் மட்டும் தான் தொண்டர்கள் என்ற சொல் இருக்கு... பன்னீர்செல்வம் பின்னாடி எந்த தொண்டரும் இருக்கிற மாதிரி தெரியலை... இவரது செயல்பாடுகளை பார்க்கிறப்ப, 'ஆளே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆத்துறார்' என்ற, 'டவுட்' தான் வருது!