'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

PUBLISHED ON : ஏப் 07, 2026 03:10 AM


Google News
Latest Tamil News
காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே: புதுச்சேரியில், தே.ஜ., கூட்டணி அரசு எல்லா துறைகளையும் சுரண்டி வருகிறது. அனைத்து ஒப்பந்ததாரர்களிடமிருந்தும், 30 சதவீதம் கமிஷன் வாங்கப்படுகிறது. இந்த ஊழல் தான், புதுச்சேரி வளர்ச்சி அடையாமல் இருப்பதற்கு காரணம். புதுச்சேரியில் காங்., ஆட்சிக்கு வந்தால், ஒரு குடும்பத்துக்கு மாதம், 2,500 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்; தாலிக்கு தங்கம் வழங்கப்படும். ராகுல் பிரதமரானதும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.

டவுட் தனபாலு: 'புதுச்சேரிக்கு மாநில அரசு அந்தஸ்து தர முடியாது'ன்னு ஒரு வரியில சொல்லிட்டு போயிடலாமே... அதை விட்டுட்டு, 'ராகுல் பிரதமரானதும், மாநில அந்தஸ்து தரப்படும்'னு சொல்லி, புதுச்சேரி மக்களுக்கு 'அல்வா' தர பார்ப்பது, சரியா என்ற, 'டவுட்' வருது!

lll

பத்திரிகை செய்தி: ராமநாதபுரம் அரண்மனை பகுதியில், துணை முதல்வர் உதயநிதி பிரச்சாரம் செய்தார். அவர் பேசி முடித்த பின், அவருக்கு தி.மு.க., நிர்வாகிகள் பரிசுகள் வழங்கினர். அதில் ஒருவர் வேல் வழங்கிய போது, அதை வாங்கி அவரிடமே திரும்ப கொடுத்தார். அடுத்து, மற்றொரு நிர்வாகி புத்தர் சிலையை வழங்கியதும் மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டார். இது, அங்கிருந்தவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

டவுட் தனபாலு: முருக பெருமானின் ஆயுதமான வேல் வேண்டாம்னு மறுத்த உதயநிதி, அந்த முருகனை வணங்கும் ஹிந்துக்களின் ஓட்டுகளும் தனக்கு வேண்டாம்னு வெளிப்படையாக அறிவித்தால், அவரது பகுத்தறிவை, 'டவுட்' இல்லாம பாராட்டலாம்!

lll



வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: எம்.பி.,யாக இருக்கும் நான் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பினேன். உடனே, 'தேர்தலுக்கு பின் தொங்கு சட்டசபை உருவாகும் என்பதால், கூட்டணி ஆட்சி அமையும்; திருமாவளவன், துணை முதல்வராக யோசிக்கிறார்' என்றெல்லாம் அவதுாறுகளை பரப்புகின்றனர். இதனால், சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடவில்லை.

டவுட் தனபாலு: நீங்க எம்.பி.,யா இருக்கிறப்பவே, அப்பப்ப தமிழக அரசுக்கு எதிராக கருத்து சொல்லி, தர்மசங்கடத்தை ஏற்படுத்துறீங்க... இதுல, எம்.எல்.ஏ.,வாகி இங்கயே இருந்துட்டா, தங்களுக்கு இம்சை என யோசித்த தி.மு.க.,வினரே இப்படி அவதுாறுகளை பரப்பி, உங்களை ஒதுங்க வச்சுட்டாங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!

lll