PUBLISHED ON : ஜூன் 17, 2026 12:19 AM

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு நடிகை கவுதமி அனுப்பிய கடிதம்: தற்போதுள்ள அரசியல் சூழலை கருத்தில் கொண்டு, சமூக சேவை செய்ய ஏதுவாக, நான் வகித்து வரும், அ.தி.மு.க., அடிப்படை உறுப்பினர் மற்றும் கொள்கை பரப்பு துணைச் செயலர் பதவியில் இருந்து, கனத்த இதயத்துடன், ஜூன் 14ம் தேதி முதல் என்னை விடுவித்துக் கொள்கிறேன்.
டவுட் தனபாலு: 'அரசியலே சமூக சேவை தான்'னு அதுல இருக்கிற பலரும் சொல்றாங்க... ஆனா, 'உட்கட்சி பூசல்ல சிக்கிட்டு தவிக்கிறதால, சமூகத்துக்கு சேவை செய்யும் பணியில் இருந்து அ.தி.மு.க., விலகிடுச்சு... அதனால, இனியும் என்னால அங்க இருக்க முடியாது'ன்னு சொல்லாம சொல்றீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
த.மா.கா., தலைவர் வாசன்: எங்கள் கட்சியை துவங்கி, 12 ஆண்டுகளாகி விட்டன. 2014 முதல் 2026 வரை கூட்டணி அரசியலில் பங்கேற்றுள்ளோம். ஆயினும், தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம் இன்னும் நிறைவேறவில்லை. இதனால், கட்சியை மீண்டும் அடித்தளத்தில் இருந்து பலப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதற்காக, தே.ஜ., கூட்டணியில் இருந்து, த.மா.கா., நட்பு ரீதியாக விலகுகிறது.
டவுட் தனபாலு: கட்சி துவங்கி, 12 ஆண்டுகள்ல ரெண்டு முறை நீங்க ராஜ்யசபா எம்.பி., ஆனீங்களே தவிர, உங்க கட்சியினருக்கு எந்த பதவியாவது வாங்கி கொடுத்திருக்கீங்களா... கட்சியை பலப்படுத்தி, 2031 தேர்தலில் முதல்வராகணும் என்ற எண்ணத்தில் கூட்டணிக்கு, 'டாட்டா' காட்டிட்டீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன்: தேர்தலுக்கு பின், பெரும்பான்மை பலம் எங்களிடம் இருந்தபோதும், தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் கூட்டணி சேர்ந்து ஆட்சியை பிடிக்கலாம் என, சதி வலை பின்னின. அதை முறியடித்து தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்தது. அதனால், ஆள் பிடிக்க வேண்டிய நிலைமை த.வெ.க.,வுக்கு இல்லை; எங்கள் தலைவரான, முதல்வர் விஜயை நாடி பலரும் வருகின்றனர்.
டவுட் தனபாலு: பல கட்சிகளின் முன்னாள் அமைச்சர்களும், முக்கிய நிர்வாகிகளும் உங்க கட்சிக்கு தினமும் படையெடுத்து வர்றாங்க என்பதில், 'டவுட்' இல்லை... ஆனா, எத்தனை பெரிய தலைவர்கள் வந்தாலும், அவங்களை இருகரம் நீட்டி வரவேற்க விஜய் வராமல், இரண்டாம் கட்ட தலைவர்களை மட்டும் அனுப்புவது ஏன் என்ற, 'டவுட்' வருதே!
