
நடிகர் ராகவா லாரன்ஸ்: பலரும் என்னை திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுங்கள் என்கின்றனர். ஒரு கட்சியில் தொண்டராக இருந்து பணியாற்றிய பின்தான், தேர்தலில் போட்டியிட வேண்டும். திருச்சி கிழக்கு தொகுதியில் நான் போட்டியிட போவதில்லை. அதேசமயம், வேறு எங்கும் போட்டியிட மாட்டேன் என்றும் சொல்லவில்லை. நிதானமாக சிந்தித்து அரசியலுக்கு வருவேன்.
டவுட் தனபாலு: 'திருச்சி கிழக்கில் நீங்க போட்டியிட்டே தீரணும்'னு உங்க வீட்டு வாசல்ல பலரும் ஒற்றைக்காலில் நின்னு தவமிருக்கிற மாதிரியே பேசுறீங்களே... உங்க பிறந்த நாள்ல மாணவர்களுக்கு பேனா, பென்சில்னு குடுத்துட்டாலே முதல்வராகும் தகுதி வந்துட்டுன்னு நினைக்கிறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
பத்திரிகை செய்தி: கோவை தெற்கு தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வென்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தேர்தல் செலவுக்கு கட்சி தலைமை, 25 லட்சம் ரூபாய் வழங்கியதாகவும், 2 லட்சம் ரூபாய் சொந்த பணம் வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதில், 20.15 லட்சம் ரூபாய் செலவழித்ததாக தேர்தல் ஆணையத்துக்கு கணக்கு காட்டியிருக்கிறார்.
டவுட் தனபாலு: அடடா... தேர்தல் கமிஷனே, 40 லட்சம் ரூபாய் செலவழிக்கலாம்னு வரம்பு நிர்ணயம் பண்ணியிருக்கு... அதுல பாதியைக் கூட செலவழிக்காம ஜெயிச்சிட்டாரே... அப்படி என்றால், சென்னை கொளத்துாரில் தோற்று போன இவரது தலைவர் ஸ்டாலின், இந்த அளவுக்கு கூட செலவழிச்சிருக்க மாட்டாரோ என்ற, 'டவுட்'தான் வருது!
காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர்: 'எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசியிருப்பது, தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியின் வெளிப்பாடு. தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத ஒரு வகையான நோய் அது. ஸ்டாலின் சொன்னது போல, மூன்று மாதங்களில் உள்ளாட்சி தேர்தல், ஆறு மாதங்களில் இடைத்தேர்தல், மூன்று ஆண்டுகளில் லோக்சபா தேர்தல் வரும். அதிலும் வெற்றி பெறப்போவது நாங்களே.
டவுட் தனபாலு: 'எப்ப வேண்டும்னாலும் தேர்தல் வரும்'னு தி.மு.க.,வினர் ஜம்பமா பேசினாலும், அதை சந்திக்க தயாரா இருக்காங்களா என்பது, 'மில்லியன் டாலர்' கேள்வி... ஐந்தாண்டுகள் அவங்க நடத்திய ஆட்சியால, தமிழக மக்கள் நொந்து போயிருக்காங்க... அதனால, திரும்ப தேர்தல் வந்தாலும் தி.மு.க.,வுக்கு இப்ப இருக்கும் எதிர்க்கட்சி அந்தஸ்தாவது மிஞ்சுமா என்பது, 'டவுட்'தான்!
