PUBLISHED ON : ஜூலை 09, 2026 12:30 AM

தி.மு.க.,வை சேர்ந்த, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி: நம்முடன் இருந்த சிலர் இன்று, 'சோபா' வந்தவுடன் நம்மை விட்டு விலகி விட்டனர். ஆனாலும், முஸ்லிம்களுக்கும், தி.மு.க.,வுக்குமான உறவை யார் வந்தாலும் பிரிக்க முடியாது. யார் என்ன சொன்னாலும், எந்த அவதுாறுகளை பரப்பினாலும் முஸ்லிம்களுக்கும், பிற சிறுபான்மை மக்களுக்கும் தி.மு.க., என்றைக்கும் காவல் அரணாக இருக்கும். இப்போது ஏற்பட்டுள்ள அரசியல் பேரிடரில் இருந்து தமிழகத்தை தி.மு.க., நிச்சயம் மீட்கும்.
டவுட் தனபாலு: தமிழகத்தில் நீங்க ஆட்சியில் இருந்த காலம்தான் பேரிடர் காலம்னு, சமூக வலைதளங்கள்ல த.வெ.க., வினர் வறுத்தெடுத்துட்டு இருக்காங்க... தமிழகத்தை மீட்பது இருக்கட்டும்... தோல்வியில் துவண்டு கிடக்கும் உங்க கட்சியை எப்படி மீட்டெடுக்க போறீங்க என்ற, 'டவு ட்' வருதே!
காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர்: எந்த குற்றமும் செய்யாத, பட்டியலினத்தை சேர்ந்த உயர்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதனை களங்கப்படுத்த பா.ஜ., முயற்சிக்கிறது. பட்டியலினத்தவர் உயர்கல்வி அமைச்சர் பதவி வகிப்பதா என்ற பொறாமையில், ஆர்.எஸ்.எஸ்., சதி செய்கிறது. டில்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பின், தமிழக கவர்னரின் போக்கு மாறி விட்டது.
டவுட் தனபாலு: 'பள்ளி மாணவியரின் கால்களை வருடிய விஸ்வநாதன் மீது நடவடிக்கை எடுக்கணும்'னு கவர்னரிடம் பா.ஜ.,வினர் மனு குடுத்திருக்காங்க... இதுல, பட்டியலினம் எங்கிருந்து வந்துச்சு...? பல வருடங்களா தி.மு.க., கூட்டணியில் இருந்த சகவாச தோஷம் தான் உங்களை இப்படி எல்லாம் பேச வைக்குது என்பதில், 'டவுட்'டே இல்லை!
பா.ம.க., தலைவர் அன்புமணி: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் நடவடிக்கைகளை கர்நாடக அரசு நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருகிறது. ஆனால், இதை தடுப்பதற்கான அரசியல், சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளாமல் இருப்பது கவலையளிக்கிறது. இந்த விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.
டவுட் தனபாலு: இந்த பிரச்னை சம்பந்தமா, சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தில் பேசிய அனைத்து கட்சியினரும், அரசின் முடிவுகளுக்கு ஆதரவு தருவதா உத்தரவாதம் தந்துட்டாங்க... அனைத்து கட்சி கூட்டத்திலும் அதையே தான் சொல்ல போறாங்க... அதனால, சும்மா சும்மா கூடி பேசி நேரத்தை வீணடிக்காம, சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
