PUBLISHED ON : ஆக 12, 2026 12:00 AM

பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார்:
என் ஆதரவாளர்கள் கைகளில், 'நாட்டாமை குடும்பம்' என பச்சை குத்திக் கொள்வது, நம் குடும்பத்தின் அடையாளமாக இருக்கும். என் சிந்தனையில் திடீரென தோன்றிய எண்ணம் இது. என் மீது பாசம் வைத்துள்ளவர்கள், விரும்பினால் பச்சை குத்திக் கொள்ளலாம். சினிமா படப்பிடிப்பு இருப்பதால், நான் இப்போது பச்சை குத்தவில்லை. என்னை நேரடியாக சந்திப்பதற்கு, 'கிரீன் கார்டு' போல் இது இருக்கும்.
டவுட் தனபாலு:
அது சரி... சினிமாக்கள்ல மட்டும் தான், நீங்க கட்டுமஸ்தான உடலுடன் கம்பீரமா நடிக்கிறீங்க... 'மேக்கப்'பை கலைச்சிட்டு, அரசியல் மேடைக்கு வந்துட்டா, வடிவேலு போல காமெடியில் கலக்குறீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
----
பத்திரிகை செய்தி:
பா.ஜ., தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகி, 'வீ த லீடர்ஸ்' என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். இதில், உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த, 'மிஸ்டு கால்' இயக்கத்தை அண்ணாமலை தொடங்க உள்ளார்; மிஸ்டு கால் கொடுப்போரை, அப்படியே உறுப்பினராக சேர்க்காமல், அவர்களை தொடர்பு கொண்டு விபரங்களை சேகரித்த பின், உறுப்பினர்களாக சேர்க்க திட்டமிட்டுள்ளார்.
டவுட் தனபாலு:
பா.ஜ.,வின் தமிழக அமைப்பிலும் இப்படித்தான், 'மிஸ்டு கால்' திட்டம் அறிவிச்சு, உறுப்பினர்களை சேர்த்தாங்க... தெரியாமல் கை பட்டு, மிஸ்டு கால் குடுத்தவங்களை எல்லாம் கட்சியில சேர்த்துட்டதா கணக்கு காட்டினாங்க... ஆனா, சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின் தான், அவங்க உண்மையான பலம் அம்பலமானது... அதே கதை, அண்ணாமலை இயக்கத்துக்கும் நடக்காம இருக்குமா என்ற, 'டவுட்' தான் வருது!
-----
காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர்:
தொகுதி மறுவரையறை விவகாரத்தில், தமிழகத்தின் உரிமை பறிபோகும் என தெரிந்தும், பிரதமர் மோடி சொல்வதைக் கேட்டு, அதை ஆதரிக்கும் அ.தி.மு.க.,வும், பா.ம.க.,வும் நவீன எட்டப்பர்கள். இன்னும் அறியப்படாத எட்டப்பர்களும் உள்ளனர்; அவர்களை விரைவில் வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம்.
டவுட் தனபாலு:
தொகுதி மறுவரையறைக்கு எதிராக, தமிழகத்தில் முதன்முதலில் ஆவேசமாக குரல் கொடுத்த தி.மு.க., இப்ப, இந்தப் பிரச்னையை கண்டுக்காம கமுக்கமா இருக்குதே... அதனால, 'அறியப்படாத எட்டப்பர்கள்'னு, அந்தக் கட்சியை தான் நீங்க குறிப் பிடுறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
