UPDATED : ஜூன் 09, 2024 04:19 PM
ADDED : ஜூன் 08, 2024 11:53 PM

விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று சான்றிதழ், பதக்கம், பரிசுகளை குவித்து, 55 வயதை தொட்டும், றெக்கை கட்டி பறந்துக் கொண்டிருக்கிறார், திருப்பூரைச் சேர்ந்த சுமதி.
சங்கிலி குண்டெறிதல், குண்டெறிதல், வட்டெறிதல் விளையாட்டில் திறமை சாலியாக இருக்கிறார். இலங்கை - கொழும்புவில் நடந்த மாஸ்டர் அத்லெடிக் சாம்பியன் ஷிப் போட்டியில், பங்கேற்று, இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்று வந்துள்ளார்.
அவர் கூறியதாவது: ஸ்கூல் படிக்கும் போது வாலிபால் விளையாடுவேன்; என் மகன் தடகள வீரர். அவர் பயிற்சி பெறும் போது, நானும் சென்று பார்ப்பேன். அந்த ஆர்வத்தின் விளைவாக சங்கிலி குண்டெறிதல், குண்டெறிதல், வட்டெறிதல் போட்டியில் பயிற்சி பெற துவங்கினேன். மாவட்ட, மாநில, தேசிய அளவில் நடந்த பல போட்டிகளில் பங்கெடுத்து, பரிசும் வாங்கியிருக்கேன்.
கடந்த, 25 வருஷமா விளையாடிட்டு இருக்கேன். 12 வருஷத்துக்கு முன்னாடி எனக்கு இதய அறுவை சிகிச்சை செஞ்சாங்க. ஆனாலும், தன்னம்பிக்கையை வளர்த்துக்கிட்டு, அந்த வருஷத்துல இருந்தே விளையாட ஆரம்பிச்சுட்டேன். டில்லி, ஐதராபாத், மணிப்பூர், கோவா, சென்னை, கேரளா என, நிறைய இடங்கள்ல நடந்த போட்டிகள்ல பங்கெடுத்து, பரிசு வாங்கியிருக்கேன்.
முதன் முறையா வெளிநாடு போய், பரிசு வாங்கிட்டு வந்தது, பெருமையா இருக்கு. என்னை மாதிரி நிறைய பேரு இருக்காங்க. விளையாட்டு பயிற்சி பெறுவது, போட்டிகளில் பங்கெடுக்க வெளியூர் செல்வது, விளையாட்டு உபகரணம் வாங்குவதுன்னு அவங்களுக்கு நிறைய செலவு இருக்கு.
குறைந்தபட்சம், உள்ளூர் அளவில் உள்ள தொழிலதிபர்கள், வசதி படைத்தவர்கள், உதவிகளை செஞ்சா, இன்னும் திறமையை வளர்த்துக்குவாங்க. 'வெட்ரன்ஸ்' சங்கத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளராகவும் இருக்கேன். திருப்பூரில், மூத்தோருக்கான அதலெடிக் போட்டி நடத்த வேண்டும் என்பது நீண்ட நாளைய ஆசை.
மூத்தோர் விளையாட்டில் அக்கறை செலுத்துவதால், உடல், மனம் வலுப்பெறுகிறது; தன்னம்பிக்கை வளர்கிறது. பிரச்னைகளை எதிர்கொள்ளும் தைரியம் வருகிறது. ஆயுள் கூடுகிறது. இந்த அனுபவத்தை தங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.