/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/தீனி போட முடியாத திருடனால் திரும்ப கிடைத்தது ஒட்டகம்தீனி போட முடியாத திருடனால் திரும்ப கிடைத்தது ஒட்டகம்
தீனி போட முடியாத திருடனால் திரும்ப கிடைத்தது ஒட்டகம்
தீனி போட முடியாத திருடனால் திரும்ப கிடைத்தது ஒட்டகம்
தீனி போட முடியாத திருடனால் திரும்ப கிடைத்தது ஒட்டகம்
ADDED : மே 29, 2025 12:59 AM

தஞ்சாவூர் : கரூர் மாவட்டம், நத்தமேடை சேர்ந்தவர் விஜய், 25. இவர் தன் குடும்பத்துடன் ஊர் ஊராக சர்க்கஸ் நடத்தி வருகிறார். இவர், நாய்கள், ஒட்டகம் மற்றும் பறவை வகைகளை வளர்த்து வந்தார்.
சமீபத்தில் இவர் குடும்பத்துடன், தஞ்சாவூர் கீழவஸ்தாசாவடியில் கூடாரம் அமைத்து சர்க்கஸ் நடத்தினார். மே 16 காலை, கூடாரத்தில் கட்டி வைத்திருந்த ஒட்டகத்தை காணாததால் அதிர்ச்சியடைந்த விஜய், பல்வேறு இடங்களில் தேடினார்.
தஞ்சாவூர் தாலுகா போலீசில் விஜய் புகார் அளித்தார். போலீசார் தேடியும் ஒட்டகம் கிடைக்கவில்லை. விஜய் குடும்பத்தினர் சர்க்கஸ் நடத்தாமல், கூடாரத்தை காலி செய்தனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் அருகே ரெட்டிப்பாளையம் கல்லணை கால்வாய் ஆற்றங்கரையில், ஒரு மரத்தில் ஒட்டகம் கட்டப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்று ஒட்டகத்தை மீட்டு, விஜயிடம் ஒப்படைத்தனர்.
ஒட்டகத்தை போலீசார் மீட்டு தந்ததால், விஜய் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒட்டகத்தை திருடி சென்றவர்கள், தீனி போட முடியாமலும், பராமரிக்க முடியாமலும் விட்டு சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
விஜய் கூறியதாவது: எங்கள் ஒட்டகம் பெயர் லெட்சுமி. அது எங்கள் வீட்டில் ஓர் உறுப்பினர். நாங்கள் சர்க்கஸ் நடத்திய இடத்தில் இருந்து, 5 கி.மீ., துாரத்தில் அது இருப்பதாக போலீசார் கூறினர். ஒட்டகத்தை மீட்டு வந்தோம்.
திருடியவர்கள், அதை பராமரிக்க முடியாமல் விட்டு சென்றுள்ளனர். ஒரு வாரம் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு விட்டது. விற்று விட்டனரோ என கவலையடைந்தோம். தற்போது மகிழ்ச்சியில் உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.