Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இது உங்கள் இடம்/ ஜனநாயகம் வெல்லாது!

 ஜனநாயகம் வெல்லாது!

 ஜனநாயகம் வெல்லாது!

 ஜனநாயகம் வெல்லாது!

PUBLISHED ON : மார் 13, 2026 03:15 AM


Google News
Latest Tamil News
பி.என்.கபாலி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 1970களில் என் கல்லுாரி நாட்களில், ஒரு பேச்சுப் போட்டியில் கொடுக்கப்பட்ட தலைப்பு, 'இந்திய ஜனநாயகம் என்பது ஒரு கேலி கூத்து!'

ஏன் இப்படி ஒரு தலைப்பில் பேசச் சொன்னார்கள் என்றால், இந்திய அரசியலில் பல கேவலமான காட்சிகள் அரங்கேற துவங்கிய காலம் அது!

காலப்போக்கில் கல்வியறிவும், உலகளாவிய சிந்தனையும், விழிப்புணர்வும், பரந்துபட்ட அணுகுமுறையும்வளரும் போது, ஜனநாயக முதிர்ச்சி இம்மண்ணில் தோன்றும் என்று, அக்காலத்தில் நாங்கள் நம்பியதுண்டு. ஆனால், 50 ஆண்டுகள் கழித்து, தற்போது ஆராய்ந்து பார்க்கும் போது, ஜனநாயகம் பெரும் வீழ்ச்சியைசந்தித்துள்ளது என்றே கூறலாம்.

ஜாதி, மதம், இனம், மொழி, பிராந்திய வாதங்கள் பன்மடங்கு வளர்ந்துள்ளன.பேராசை, ஏய்த்துப் பிழைப்பது, லஞ்சம் - ஊழல், அடுத்தவர் நகைப்புக்கு ஆளாக வேண்டி வரும் என்ற கூச்சமோ, வெட்கமோ இன்றி எதையும் செய்வது, பேசுவது இவையெல்லாம் அரசியலில் பன்மடங்காக பெருகி உள்ளன.

ஆட்சியாளர்கள் தங்களின் சாதனை குறித்தும், எதிரணியினர் சாதிக்கப் போவது என்ன என்பது குறித்தும் ஆரோக்கியமாக விவாதிப்பர் என்று தான், குடியரசை நிறுவினர் நம் முன்னோர்.

ஆனால் நடப்பது என்ன?

'இந்த கட்சியை கூட்டணியில் சேர்த்துக் கொண்டால், சிறுபான்மையர் ஓட்டு கிடைக்கும்; அந்த கட்சியை சேர்த்துக் கொண்டால் பட்டியல் இனத்தவர் ஆதரிப்பர் மற்றுமொரு கட்சியை இணைத்துக் கொண்டால் இந்த ஜாதியினர் ஆதரிப்பர்; வேறொரு கட்சியை சேர்த்துக் கொண்டால் அந்த ஜாதியினர் ஓட்டுகள் கிடைக்கும்' என்று கணக்கு போட்டு கூட்டணி அமைக்கின்றனர், அரசியல்வாதிகள்.

அவர்கள் போடும் கணக்கு தப்பாக விடாமல் பார்த்துக் கொள்கின்றனர், வாக்காளர்கள். விளக்குமாறுக்கு பட்டுக் குஞ்சலம் என்பது போல், இதற்கு, 'சோஷியல் இன்ஜினியரிங்' என்று வேறு பெயர் கொடுத்துள்ளனர்.

இன்று ஜனநாயகம் இந்தளவு தரம் தாழ்ந்து போனதற்கு காரணமே வாக்காளர்கள் தான்!

ஜாதி - மத ரீதியாக ஓட்டளிப்பது, இலவசங்களுக்கு மயங்குவது, பொய் வாக்குறுதிகளை நம்புவது, காசுக்கு ஓட்டை விற்பது, சவடால் பேச்சுக்கு கைதட்டுவது, சினிமா கவர்ச்சிக்கு மயங்குவது, அறிவுப்பூர்வமாக சிந்திக்காமல், உணர்வுப்பூர்வமாக சிந்தித்து ஓட்டளிப்பது, ஓட்டுச்சாவடி பக்கமே போகாமல் இருப்பது போன்ற காரணங்களால் ஜனநாயகம் கேலிக் கூத்தாகி வருகிறது.

மக்களின் எண்ணங்களில், சிந்தனையில் தெளிவு ஏற்படாத வரை ஜனநாயகம் வெல்லாது!

lll

விடியல் நாள் அல்ல; ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட நாள்! பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கடந்த 1967, மார்ச் 6ம் தேதி, அண்ணாதுரை தலைமையில், தி.மு.க., முதன் முறையாக ஆட்சி அமைத்தது. அன்று தான் தமிழினம் தலைநிமிர்ந்த நாள். தமிழகத்தின் எழுச்சிக்கும், மீட்சிக்கும் விதையூன்றிய இந்நாளில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளேன்' என்று திராவிட மாடல் முதல்வர் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதாவது, அண்ணாதுரை ஆட்சிக்கு முன், காமராஜர் தலைமையிலான காங்., ஆட்சியில் தமிழினமும், தமிழகமும் தலைகுனிந்து இருந்தது என்று சொல்லாமல் சொல்லி, காமராஜரையும், காங்., கட்சியையும் அவமதித்துள்ளார் ஸ்டாலின்.

பல்லாயிரம் பள்ளிகளை திறந்து, பாமர மக்களையும் பள்ளிக்கூடம் செல்ல வைத்தவர், காமராஜர்.

பள்ளிகள் அமைக்க நிதிப்பற்றாக்குறை ஏற்பட்ட சூழலில், மதுவிலக்கை ரத்து செய்ய அதிகாரிகள் ஆலோசனை கூறியபோது, 'பிச்சை எடுத்தாவது பிள்ளைகளை படிக்க வைப்பேனே தவிர, அப்பனை குடிக்க வைத்து, அதில் கிடைக்கும் பணத்தில், பிள்ளைகளை படிக்க வைக்கும் பாவச்செயலை ஒருபோதும் செய்ய மாட்டேன்' என்று கூறிய உத்தம தலைவர் காமராஜர்.

ஒன்பது ஆண்டுகள் முதல்வராக இருந்தும், அவர் இறந்த போது அவரிடம் இருந்தது வெறும், 200 ரூபாய். அதனால்தான், இன்றும் பல கட்சிகள், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காமராஜர் ஆட்சி அமைப்போம்' என்று கூறுகின்றனரே தவிர, அண்ணாதுரை ஆட்சி அமைப்போம் என்றோ, கருணாநிதி ஆட்சி அமைப்போம் என்றோ கூறுவதில்லை.

காரணம், அண்ணாதுரை ஆட்சியில் பொதுப்பணி துறை அமைச்சராக இருந்த கருணாநிதி, கூவத்தை சுத்தம் செய்வதாக கூறி, அத்திட்டத்திற்காக மூன்று கோடி ரூபாயை ஒதுக்கினார்.

ஆனால், பல மாதங்களாக அத்திட்டம் செயல்படுத்தப்படாமல் இருக்கவே, 'கூவம் ஆற்றை சுத்தப்படுத்தும் திட்டம் என்னாச்சு?' என்று கேள்வி எழுப்பினர், எதிர்க்கட்சியினர்.

'மூன்று நாளில் அது குறித்து கூறுகிறேன்' என்றார், கருணாநிதி.

ஆனால், அடுத்த நாளே பத்திரிகைகளில் பரபரப்பு செய்தி... 'கூவம் ஆற்றில் முதலை; சென்னை மக்கள் பீதி' என்று!

மறுநாள் சட்டசபையில் கருணாநிதி கூறுகிறார்... 'கூவத்தில் முதலை இருப்பதால் பணியாளர்கள் சுத்தம் செய்ய மறுக்கின்றனர்; அதனால், திட்டம் கைவிடப்பட்டது' என்று!

'திட்டத்திற்காக ஒதுக்கிய பணம் என்னாச்சு?' என்று எதிர்க்கட்சிகள் கேட்டபோது, 'முதற்கட்ட பணியிலேயே மூன்று கோடி ரூபாயும் செலவாகி விட்டது' என்று கூறி, மூன்று கோடி ரூபாயையும், 'ஆட்டையை'ப் போட்டவர் கருணாநிதி.

இதுதான் தமிழகத்தில் முதன் முறையாக நடந்த ஊழல். அண்ணாதுரையின் ஆட்சியில் தான் இந்த ஊழலை அரங்கேற்றினார், கருணாநிதி.

அப்பணத்தின் இன்றைய மதிப்பு கிட்டத்தட்ட, 1,500 கோடி ரூபாய்!

எனவே, தி.மு.க., முதன் முறையாக ஆட்சி அமைத்த, 1967, மார்ச் 6ம் தேதி, தமிழினம் தலைநிமிர்ந்த நாள் அல்ல; தமிழர்கள் இலவசத்திற்குள் விழுந்த நாள். தமிழர்களை குடிக்க வைத்து, இன்று பல குடும்பங்கள் வீதியில் நிற்பதற்கு காரணமான நாள்.

அந்த நாள் தமிழர்களின் விடியல் நாள் அல்ல; திராவிட கட்சிகளின் ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட நாள்!

lll





      Our Apps Available On




      Dinamalar

      Follow Us