Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இது உங்கள் இடம்/ஜெயகுமார் சவாலை தி.மு.க., ஏற்கலாமே!

ஜெயகுமார் சவாலை தி.மு.க., ஏற்கலாமே!

ஜெயகுமார் சவாலை தி.மு.க., ஏற்கலாமே!

ஜெயகுமார் சவாலை தி.மு.க., ஏற்கலாமே!

PUBLISHED ON : ஜன 04, 2024 12:00 AM


Google News
எஸ்.ஜான்சன், புதுச்சேரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'வரும் லோக்சபா தேர்தலில், தனித்து போட்டியிட தி.மு.க.,வுக்கோ, அதன் தலைவர் ஸ்டாலினுக்கோ, உதயநிதிக்கோ துணிவு உண்டா? தனித்து போட்டியிட்டு வென்று காட்டிய எங்களுக்கு அந்தத் துணிவு உண்டு' என்று முழங்கி இருக்கிறார், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்.

அவரது இந்த முழக்கத்தை வெறுமனே கடந்து செல்ல இயலாது. தி.மு.க., 1949, செப்., 17ல் துவங்கப்பட்டு, 75 ஆண்டுகள் ஆகின்றன. பின், 23 ஆண்டுகள் கழித்து, 1972ம் ஆண்டு அக்., 17ல் தான் எம்.ஜி.ஆரால், அ.தி.மு.க., துவங்கப்பட்டது.

ஜெயகுமார் கூறுவது போல, அ.தி.மு.க., தனித்து நின்றது போல, தி.மு.க., இதுவரை எந்த தேர்தலையும் கூட்டணி இல்லாமல் சந்தித்ததில்லை. 2014 லோக்சபா தேர்தல், 2016 சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் தனித்து நின்று, மாபெரும் வெற்றி பெற்றது.

'இது ஈ.வெ.ரா., மண், திராவிட மாடல், சமூக நீதி, சனாதனத்தை ஒழிப்போம், அதனால் ஆட்சியே பறிபோனாலும் பரவாயில்லை' என்றெல்லாம் தி.மு.க.,வினர் முழங்குகின்றனர்.

அப்படி இருக்கும் போது, ஜெயகுமாரின் சவாலை தி.மு.க., ஏற்று, வரும் லோக்சபா தேர்தலில், கிறிஸ்துவ முன்னணி, முஸ்லிம் லீக் உட்பட மதச்சார்புள்ள மற்றும் மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளுடனும் தேர்தல் கூட்டணியோ, தொகுதி உடன்பாடோ வைத்துக் கொள்ளாமல், தனித்து போட்டியிட்டு, தங்கள் பலத்தை இந்தியாவுக்கும், தமிழக மக்களுக்கும் காட்டலாமே.

அப்படி போட்டியிட்டால், சீட் கேட்கும் உடன்பிறப்புகள் பலருக்கும் கேட்கும் தொகுதியை ஒதுக்க முடியும். அவர்களும் உற்சாகமாக தேர்தல் பணி செய்து, வெற்றிக் கனிகளை பறித்து, தந்தை மற்றும் தனயன் காலடிகளில் சமர்ப்பிப்பர்.

தவிர, தனித்து களம் காண்பதில் கழகத்துக்கு வேறொரு லாபமும் உண்டு... கழகத்துடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு, தேர்தல் செலவுக்கு கொடுக்க வேண்டிய சில, பல கோடி ரூபாய்களும் மிச்சமாகும்.



விஜயகாந்துக்கு முதல்வர் தந்த மரியாதை!


கே.விக்னேஷ், ராமேஸ்வரம், ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், தே.மு.தி.க., தலைவரும், நடிகருமான விஜயகாந்த், உடல்நலக் குறைவால் காலமானார். போலித்தனம் இல்லாத, கள்ளம், கபடமற்ற இயல்பான தன் குணத்திற்காகவும், தன்னலம் கருதாத கொடைத் தன்மைக்காகவும், அவர் எவ்வளவு இதயங்களை வென்றுள்ளார் என்பதற்கு, அவருக்கு இறுதி மரியாதை செலுத்த, கூடிய கூட்டமே சாட்சி.

விஜயகாந்த் ஒரு சகாப்தம். அரசியலில் ஒரு மாற்று சக்தியாக, மாபெரும் தலைவராக வளர்ந்தவரை, சில திராவிட கட்சி ஆதரவு ஊடகங்கள், தங்கள் சுயலாபத்திற்காக, அவரது புகழை கெடுக்கும் வேலைகளில் ஈடுபட்டன.

அத்துடன், அவரால் எம்.எல்.ஏ., ஆன சிலரே, அவருக்கு எதிராக செயல்பட்டனர். மிகுந்த நம்பிக்கைக்கு உரியோராக இருந்தவர்கள், அவருக்கு எதிரணியில் நின்றபோது, மனம் நொந்தே போய் விட்டார். போதாக்குறைக்கு அவரது உயிர் நண்பரான இப்ராஹிம் ராவுத்தரின் மரணமும், அவரை வெகுவாக பாதித்தது.

அந்த துயரத்தில் வீழ்ந்தவர், கடைசி வரை எழவே இல்லை. அவருடைய இமேஜை டேமேஜ் செய்ததில், அ.தி.மு.க., - தி.மு.க.,வின் பங்கு அதிகம். அதேபோல், விஜயகாந்த் இரு பெரும் திராவிட கட்சிகளை எதிர்த்து அரசியலுக்கு வந்தாலும், அவர் அதிகம் விமர்சித்தது, தி.மு.க.,வையும், அதன் குடும்ப அரசியலையும் தான்.

அப்படி இருந்தும், அவரது மரணத்திற்கு சம்பிரதாயத்திற்காக வந்து அஞ்சலி செலுத்தி விட்டு செல்லாமல், அந்த மாமனிதரின் இறப்புக்கு, முதல் ஆளாக வந்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லி சென்றார் முதல்வர் ஸ்டாலின்.

அதோடு மட்டுமல்லாமல், 'விஜயகாந்துக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடக்கும்' என்றும் அறிவித்தார். அனைவரும் அஞ்சலி செலுத்த ஏதுவாக, தீவுத்திடலில் போதிய ஏற்பாடுகள் செய்து, அங்கிருந்து அடக்கம் செய்யப்படும் இடம் வரை நடந்த இறுதி ஊர்வலத்துக்கும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தந்தார்.

கடைசியாக, 72 குண்டுகள் முழங்க நடந்த விஜயகாந்தின் இறுதிச் சடங்கிலும்பங்கேற்று மரியாதை செலுத்தி, தான் ஒரு பகுத்தறிவுவாதி மட்டுமல்ல, 'பக்குவ வாதி' என்பதையும் முதல்வர் ஸ்டாலின் நிரூபித்து விட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை தவிர்த்து, முதல்வரின் இந்த செயல் நிச்சயம் போற்றப்பட வேண்டிய ஒன்று.



நீதி துறை மீது நம்பிக்கை போய் விடும்!


அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தினமலர்' நாளிதழில் சமீபத்தில் வெளியான, 'நீதிபதி காலி பணியிடங்கள் விரைந்து நிரப்புவது அவசியம்' தலையங்கம் படித்தேன். அதில், நாடு முழுதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் 4.4 கோடி, உயர் நீதிமன்றங்களில் 61.70 லட்சம், உச்ச நீதிமன்றத்தில் 79,593 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறியது வருத்தம் அளிக்கிறது.

அதிலும் கடந்த 2020- - 2021 ஆண்டுகளில், கொரோனா பாதிப்பால் நீதிமன்றங்கள் சரியாக இயங்கவில்லை என்பதுடன், காலி பணியிடங்கள் நிரப்பாததே அதிகளவில் வழக்குகள் தேங்க காரணமானது.

தலையங்கத்தில் கூறியுள்ளபடி, 1987ம் ஆண்டிலேயே நம் சட்ட கமிஷன், '10 லட்சம் மக்களுக்கு, 50 நீதிபதிகள் என்ற அளவில் இருக்க வேண்டும்' என பரிந்துரைத்தது; அதை அப்போதே உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்தது. ஆனால், 36 ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை அந்த இலக்கை அடைய மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சட்ட கமிஷன் பரிந்துரைப்படி, 10 லட்சம் மக்களுக்கு, 50 நீதிபதிகள் என்றால், 69,600 நீதிபதிகள் இருக்க வேண்டும். ஆனால், தற்போது 25,081 நீதிபதிகள் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது. அப்படியெனில், 44,681 நீதிபதிகள் பற்றாக்குறை உள்ளது. இதை நிவர்த்தி செய்தால் மட்டுமே, நீதிமன்றங்களை நாடி வரும் வழக்காடிகளுக்கு விரைவில் நீதி கிடைக்கும்.

ஜனாதிபதி திரவுபதி முர்முவின் விருப்பப்படி, 'அகில இந்திய நீதித்துறைகள் சேவை' என்ற அமைப்பின் வாயிலாக காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், அவற்றை களைந்து விரைவாக நீதிபதிகளை நியமிக்க வேண்டும். இல்லையெனில், நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விடும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us