PUBLISHED ON : ஜூன் 14, 2026 12:13 AM

அ.அபிராமி, மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த தி.மு.க., ஆட்சியில், எப்போது பார்த்தாலும், 'மத்திய அரசு நிதி வழங்கவில்லை, தமிழகத்தைப் புறக்கணிக்கிறது' என்று ஓட்டை ரெக்கார்டு போல் திரும்பத் திரும்ப ஒரே பொய்யைக் கூறிக் கொண்டிருந்தனர், ஆட்சியாளர்கள்.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, த.வெ.க., ஆட்சிப் பொறுப்புக்கு வந்த சில நாட்களிலேயே, தமிழகத்திற்கு, 1,000 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது, மத்திய அரசு.
பேரிடர் மேலாண்மைப் பணிகளுக்காக, தமிழகத்திற்கு உடனடியாக, 1,000 கோடி ரூபாய் நிதி தேவை என, மத்திய அரசிடம் மாநில அரசு கோரிக்கை வைத்திருந்தது.
அக்கோரிக்கையை ஏற்று எவ்விதத் தயக்கமும் காட்டாமல், ஒட்டுமொத்த நிதியையும் உடனடியாக வழங்கிவிட்டது, மத்திய அரசு.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில், 'மத்திய அரசு நமக்கு வழங்க வேண்டிய நிதியை, எவ்வித இழுத்தடிப்பும் இன்றி, முன்கூட்டியே வழங்கியுள்ளது' என்று மகிழ்வுடன் கூறியுள்ளார், அமைச்சர் செங்கோட்டையன்.
கடந்த காலங்களில் புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் நிகழ்ந்த போதெல்லாம், தங்கள் அரசின் நிர்வாகத் திறனின்மையை மூடி மறைக்க, மத்திய அரசு மீது பழிபோட்டு வந்தது, தி.மு.க., அரசு.
ஆனால், இன்று நிர்வாகம் நேர்மையானவர்களின் கைக்கு மாறியவுடன், அவர்கள் கேட்ட நிதி தங்கு தடையின்றி தமிழக கஜானாவிற்கு வந்து சேர்ந்துள்ளது.
இதன்வாயிலாக தெரிவது... பிரச்னை, நிதி வரவில் இல்லை; முந்தைய ஆட்சியாளர்களின் கமிஷன் கணக்குகளிலும், முறையான திட்ட அறிக்கைகளை சமர்ப்பிக்காத கோப்புகளிலும்தான் இருந்துள்ளது!
நிர்வாக திறனின்மையை மறைக்க, மத்திய அரசு மீது பழி போட்டு தி.மு.க., தப்பித்து வந்தது இப்போது வெளிச்சத்திற்கு வந்து விட்டது!
'பேகான்' மருந்து அடித்தால் போதும்!
எஸ்.கீதாஞ்சலி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமூக வலைதளத்தில், 'கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டி' என்ற பெயரில், ஒரு நையாண்டி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு, அது, ஏதோ இளைஞர்களின் எழுச்சி இயக்கம் போல சித்தரிக்கப்படுவது வேடிக்கையாக இருக்கிறது.
இந்திய தலைமை நீதிபதி சூர்யகாந்த், ஒரு விசாரணையின் போது, போலியாக பட்டங்களைப் பெற்று, சமூக வலைதளங்களை தவறாகப் பயன்படுத்தும் சிலரை, கரப்பான் பூச்சிகளோடு ஒப்பிட்டு பேசிய கருத்தை, இடதுசாரி ஊடகங்களும், அதன் அமைப்புகளும் திட்டமிட்டே திசைதிருப்பி வருகின்றன.
நீதிபதி அதுகுறித்து தெளிவான விளக்கம் அளித்த பின்னும், இளைஞர்களை துாண்டிவிடும் வேலையை இந்த அமைப்பினர் செய்து வருகின்றனர்.
கரப்பான் பூச்சி இயக்கத்தை துவங்கிய அபிஜித் திப்கே, ஆம் ஆத்மி கட்சியின் சமூக ஊடகக் குழுவில் இருந்தவர் என்ற செய்தி, இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் துாண்டுதலை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
தேர்தலில், பிரதமர் மோடியை நேருக்கு நேர் சந்திக்க முடியாத விரக்தியில், எதிர்க்கட்சிகளும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் போன்றவர்களின் மறைமுக ஆதரவிலும், இந்த 'கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டி' இயங்குகிறது.
நேபாளம் மற்றும் இலங்கையில், 'ஜென் ஸி' எனப்படும், 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் போராட்டம் நடந்து, அந்நாட்டு ஆட்சியாளர்கள் பதவி விலக வேண்டிய சூழ்நிலை உருவாகியது. அதுபோன்ற ஒரு புரட்சியை, இந்தியாவில் அரங்கேற்றத் துடிக்கின்றன, இந்த கரப்பான் பூச்சிகள்!
அந்த நாடுகளில் இருந்த மோசமான நிர்வாக சீர்கேடு, இந்தியாவில் இல்லை.
கடந்த 12 ஆண்டுகால மோடி ஆட்சியில், முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்ததைப் போல் பெரிதாக ஊழலோ, நிர்வாகச் சீர்கேடோ இல்லை.
துாய்மையான, வலுவான நிர்வாகம் இருப்பதால் தான், மக்கள் மீண்டும் மோடி அரசுக்கு தங்களின் ஆதரவை வழங்கியுள்ளனர்.
இதற்கு முன், பஞ்சாபில் விவசாயிகள் என்ற போர்வையில், வெளிநாட்டு சக்திகளின் துணையுடன், மாதக்கணக்கில் போராட்டம் நடந்தது.
விவசாய கொள்கைகளை அரசே வாபஸ் பெற்ற பின்னும், மோடி அரசை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கோடு செயல்பட்ட அந்த இயக்கத்தை, மத்திய அரசு மிகவும் பொறுமையாகவும், திறமையாகவும் கையாண்டது.
கூடவே, மக்களின் ஆதரவும் இல்லாததால், அப்போராட்டம் தானாகவே காணாமல் போனது.
எதிர்க்கட்சிகள் நேர்மையாக மக்களுக்குப் பணியாற்றி, அவர்களின் ஆதரவைப் பெற்று, ஆட்சிக்கு வர நினைப்பதை விடுத்து, இதுபோன்ற, 'கரப்பான் பூச்சி' இயக்கங்களை துாண்டிவிட்டு குறுக்கு வழியில் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க நினைக்கின்றன.
கரப்பான் பூச்சிகளை அழிக்க பயன்படும், 'பேகான்' மருந்து அடித்து, இந்த கரப்பான்களை ஒழிப்பது தான் சரியாக இருக்கும்!
ஸ்டாலின் மறந்து போனது ஏனோ?
பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரள மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழக வெற்றிக் கழக ஆட்சி நடப்பதே நம் கூட்டணி கட்சிகளின் தயவோடுதான்; கூட்டணி கட்சி தலைவர்கள் நம்மிடம் சொல்லிவிட்டு போகும்போது, 'செல்லுங்கள்... உங்கள் ஜனநாயக விருப்பத்தை தடுக்க மாட்டேன்' என்றேன். ஆனாலும், நம் தயவோடு நடக்கும் இந்த ஆட்சிக்கு, விரைவில் நாம் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்' என்று, 'காட்டமாக' கூறியுள்ளார், தி.மு.க., தலைவர் ஸ்டாலின்.
எவர் ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை; தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று தான், மக்கள் பெருவாரியாக, த.வெ.க.,விற்கு ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்துள்ளனர்.
இதில், த.வெ.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி விட்டால் மட்டும், அடுத்து வரும் தேர்தலில், தி.மு.க., ஜெயித்து கோட்டையை பிடித்து விடுமா என்ன?
முதலில், உங்கள் அனுமதியை பெற்று, த.வெ.க.,விற்கு ஆதரவு கொடுத்துள்ள கூட்டணி கட்சிகளிடம், ஆதரவை வாபஸ் வாங்க சொல்லுங்கள்; உங்கள் பேச்சை மதித்து எந்தக் கட்சி திரும்பி வருகிறது என்று பார்ப்போம்!
கூட்டணி கட்சிகளின் உழைப்பு வேண்டும்; ஆனால், ஆட்சியில் பங்கு கிடையாது. தி.மு.க.,வினர் மட்டும் தான் எஜமானர்களாக இருக்க வேண்டும்; கூட்டணி கட்சிகள் அடிமைகளாக தங்கள் ஆட்சிக்கு ஜால்ரா போட வேண்டும் என்பது தானே தி.மு.க.,வின் கூட்டணி கொள்கை!
ஆற்றின் மறுகரையில் இருக்கும் வரை தான், நீ யாரோ, நான் யாரோ; சேர்ந்து பயணிக்க துவங்கி விட்டால், அண்ணன் - தம்பி என்பதை மறந்து விட்டார் ஸ்டாலின்!
