/தினம் தினம்/இது உங்கள் இடம்/கேரள நீதிமன்றங்களின் சபாஷ் தீர்ப்புகள்!கேரள நீதிமன்றங்களின் சபாஷ் தீர்ப்புகள்!
கேரள நீதிமன்றங்களின் சபாஷ் தீர்ப்புகள்!
கேரள நீதிமன்றங்களின் சபாஷ் தீர்ப்புகள்!
கேரள நீதிமன்றங்களின் சபாஷ் தீர்ப்புகள்!
PUBLISHED ON : பிப் 02, 2024 12:00 AM
பி.ஜோசப், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சட்டம் ஒரு இருட்டறை' என்றார், மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை. ஆனால், நடைமுறையில் பார்த்தால், சட்டம் மட்டும் இருட்டறை அல்ல. சில தீர்ப்பு களும் கூட, கும்மிருட்டாக, புரியாத புதிராக விளங்குவது தான் ஆச்சரியம்.
கேரளாவின், மாவேலிக்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், நீதிபதி ஸ்ரீதேவி அறிவித்துள்ள குற்றவாளிகளுக்கான மரண தண்டனை தீர்ப்பு, பல்வேறு தரப்பிலும் பாராட்டுகளை பெற்றுள்ளன.
கேரள பா.ஜ.,வின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலராக இருந்த ரஞ்சித் சீனிவாசன், 2021 டிசம்பர் 19ல் ஆலப்புழாவில் உள்ள அவரது வீட்டில், அவரது தாய், மனைவி, மகள் முன்னிலையில், எஸ்.டி.பி.ஐ., என்ற அமைப்பை சேர்ந்த, 15 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
அந்த அமைப்பைச் சேர்ந்த, 15 கொலையாளிகளுக்கும் மாவேலிக்கரை கூடுதல் அமர்வு நீதிபதி ஸ்ரீதேவி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மற்றொரு வழக்கில், கேரள மாநிலம், கஜானா பாறையில் ஏலத் தோட்டத்தில் பணிபுரிந்து வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த தம்பதியின், 15 வயது மகளை கூட்டு பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, தேவிகுளம் அதிவிரைவு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில், சாமுவேல், சிவகுமார், சுகந்தன் ஆகிய மூவருக்கும் தலா, 90 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 40,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதுவும் நிச்சயம் பாராட்டுக்குரிய ஒரு தீர்ப்பு தான் என்பதில் சந்தேகமே இல்லை.
ஆனால், பக்கத்தில் இருக்கும் நம் தமிழகத்திலோ முன்னாள் பிரதமர் ராஜிவை கொன்ற கொலையாளிக்கு, கருணை அடிப்படையில் விடுதலை வழங்கியுள்ளனர். உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றாலும், சமீபத்தில் வெளியான கேரள நீதிமன்றங்களின் தீர்ப்புடன் ஒப்பிடுகையில், ஏதோ நெருடுகிறது.
நாட்டில் தண்டனைகள் கடுமையானால் தான், குற்றங்கள் குறையும்என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.
வி.வி.ஐ.பி.,க்களால் அவதிப்படும் மக்கள்!
கு.அருணாச்சலம்,
கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், நம்
பிரதமர் அலுவலகம், 'நல்ல இந்தியா மற்றும் எதிர்கால தலைமுறைக்காக ஒவ்வொரு
குடிமகனும் கடைப்பிடிக்க வேண்டியவை' என்று, 13 வழிகாட்டுதல்களை
அறிவித்திருந்தது...
அதில், 'சாலைகள் மற்றும் தெருக்களில் குப்பை
போடக் கூடாது; எச்சில் துப்பக் கூடாது; போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க
வேண்டும்; ஆம்புலன்ஸ்களுக்கு வழி விட வேண்டும்' ஆகியவை முக்கியமானவை.
ஆனால்,
இவற்றை யாரும் கடைப்பிடிப்பது இல்லை. அதிலும் அரசியல் கட்சிகள் நடத்தும்
பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மாநாடுகளுக்கு பல்வேறு வாகனங்களில்
செல்வோர், எந்த போக்குவரத்து விதிகளையும் மதிப்பது இல்லை.
போக்குவரத்து
போலீசாரும், இவர்களை ஒன்றும் செய்ய முடியாமல், கை கட்டி வேடிக்கை
பார்க்கின்றனர். அதே நேரம், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்
வந்தால், அவர்களுக்காக சாலைகளில் போடப்பட்டுள்ள வேக தடைகளை அகற்றுவது,
போக்குவரத்தை நிறுத்தி வைப்பது, வழித்தடம் மாற்றி விடுவது என, பொதுமக்களை
அலைக்கழிக்கின்றனர்.
அந்த வகையில், சமீபத்தில் நம் துணை ஜனாதிபதி
ஜக்தீப் தன்கர், சிதம்பரம் நடராஜர் கோவில் மற்றும் பரங்கிப்பேட்டை பாபா
கோவில்களுக்கு சென்றபோது, சிதம்பரம் மற்றும் பரங்கிப்பேட்டை பகுதி மக்கள்,
மிகுந்த சிரமத்திற்கு ஆளாயினர்.
பள்ளிகளுக்கு உரிய நேரத்தில் செல்ல
வேண்டிய மாணவர்கள், சில மணி நேரம் காலதாமதமாக செல்ல நேரிட்டது.
மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் சென்று சிகிச்சை பெற வேண்டியவர்கள்,
வேலைக்கு சரியான நேரத்தில் செல்ல வேண்டி யவர்கள் என்று பலரும் அன்று
பாதிக்கப்பட்டனர்.
இனி வரும் காலங்களில், இந்த வி.வி.ஐ.பி.,க்கள்
முடிந்த வரை, யாருக்கும் பாதிப்பு இல்லாத நாட்களில், நேரங்களில் வந்து
செல்லலாம். மத்திய அரசின் வழிகாட்டுதல்களை, அதன் பிரதிநிதிகள் கடைப்பிடிக்க
வேண்டியது கட்டாயம்.
சுயநலத்தில் சிக்கி தவிக்கும் நிதீஷ்!
என்.கந்தசாமி,
மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'இண்டியா' கூட்டணிக்கு
பிள்ளையார் சுழி போட்ட, பீஹார் முதல்வர் நிதீஷ் குமாரே, தற்போது அதை
அழிக்கக் காரணமாகி விட்டார்.
'அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை;
நிரந்தர பகைவனும் இல்லை' என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால்,
நிதீஷின் செயல், 'கூட்டணியை அமைப்போம்; ஆனால், அதை நம்பக் கூடாது' என்ற
புது மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்துள்ளது.
முன்பு, ஜெயப்பிரகாஷ்
நாராயணன், ஜனதா கட்சி என்ற பெயரில் உருவாக்கிய கூட்டணி, லோக்சபா தேர்தலில்
மகத்தான வெற்றி பெற்றது; ஆனால், கொஞ்ச நாட்களிலேயே சிதறிப் போனது.
இப்போது, இண்டியா கூட்டணி, தேர்தலுக்கு முன்பே, சிதறு தேங்காய் ஆகி விட்டது.
'என்னை
நம்பிக் கெட்ட வர்களை விட, நம்பாமல் கெட்டவர்களே அதிகம்' என்று, ஒரு
திரைப்படத்தில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., பேசிய டயலாக் தான், தற்போது
நினைவுக்கு வருகிறது.
அந்த மாபெரும் தலைவர், தன்னை நம்பி வந்த ஒவ்வொருவரையும் வாழ வைத்தார்; நம்பாமல் சந்தேகமாய் திரிந்தவர்கள் அழிந்து போயினர்.
ஆனால் இப்போதோ, எந்த தலைவரை நம்புவது என்று தெரியவில்லை. சுயநலம் ஒவ்வொருவரையும், எப்படியெல்லாம் மாற்றுகிறது பாருங்கள்!
ஏன் இந்த பயம் ஐஸ்வர்யாவுக்கு?
க.
விக்னேஷ்ராம்குமார், ராமேஸ்வரத்திலிருந்து அனுப்பிய, 'இ -- மெயில்'
கடிதம்: சமீபத்தில் நடந்த, லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில்
பேசிய ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தன் தந்தை சங்கி கிடையாது என்றும்,
அவரை அப்படி அழைப்பதால் தான் மனதளவில் வருந்துவதாகவும் கூறியுள்ளார்.
சங்கி என்று அழைக்கப்படுவதில் என்ன வெட்கம்? சங் பரிவார் அமைப்பில் இருப்பவர்களை, சங்கி என்று அழைக்கலாம்.
மேலும்,
மிகச் சிறந்த ஆன்மிகவாதியாகிய ரஜினி, பகவத் கீதையை மட்டுமல்ல; சில
நேரங்களில் பைபிளையும், குரானையும்கூட மேற்கோள் காட்டி, பொது இடங்களில்
பேசி இருக்கிறார். அயோத்தி கோவில் விழாவிலும் சமீபத்தில் அவர் பங்கேற்றனர்.
ஒரு
படத்தின் வரவேற்புக்காக, ரஜினியை இப்படி ஐஸ்வர்யா காபந்து செய்வது, கையை
வைத்து சூரியனை மறைக்கும் முயற்சியே. வேண்டாம் ஐஸ்வர்யா... ரஜினியை இப்படி
எல்லாம் சிக்கலில் சிக்க விடாதீர்கள்!


