'பாட்டாளி ரத்னா' விருது வழங்கலாம்!
'பாட்டாளி ரத்னா' விருது வழங்கலாம்!
'பாட்டாளி ரத்னா' விருது வழங்கலாம்!
PUBLISHED ON : பிப் 11, 2024 12:00 AM
'பாட்டாளி ரத்னா' விருது வழங்கலாம்!
சுருதி ஷிவானி, செங்கோட்டை, தென்காசி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காக, இட ஒதுக்கீட்டிற்காக, 44 ஆண்டுகளாக போராடி வரும் மூத்த தலைவர் ராமதாசுக்கு பாரத ரத்னா, பத்மஸ்ரீ போன்ற நாட்டின் உயரிய
விருதுகள் வழங்கப்படாதது வருத்தம் அளிக்கிறது' என்று பா.ம.க., பொதுக்குழுவில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ஆதங்கப்பட்டுள்ளார்.
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக, மகாத்மா காந்தி அழைப்பு விடுத்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறைக்கு சென்றவரும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் பிரச்னைகளுக்காக குரல் கொடுத்தவருமான பீஹார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாகூருக்கு, பாரத ரத்னா விருதை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. அது தெரிந்தவுடன், தன் தந்தை ராமதாசுக்கும் பாரத ரத்னா விருது கிடைக்கவில்லையே என்று அன்புமணி வருந்த ஆரம்பித்து விட்டார்.
ஜாதிய பாகுபாடுகள் மறைய உழைத்திருந்தால், ராமதாசை கண்டிப்பாக பாராட்டியிருக்கலாம். ஆனால், குறிப்பிட்ட ஒரு ஜாதிக்காக சங்கம் துவங்கி, அதை அரசியல் கட்சியாகவும் மாற்றி, இன்றளவும் அந்த சமுதாயத்துக்காக மட்டுமே அக்கட்சி பாடுபடுகிறது.
ஜாதியின் பெயரை சொல்லி இவர் அடைந்த வளர்ச்சியை கண்ட பின் தான், தமிழகத்தில் பல ஜாதிக் கட்சிகள் தோன்றி வளர்ந்தன. தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி
தாவுவதில், நிதீஷ் குமாருக்கு குரு, ராமதாஸ் என்று கூட சொல்ல முடியும்.இவையெல்லாம் தான் பா.ம.க., நிறுவனர் ராமதாசின் சாதனைகள். இந்த சாதனைகளுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா கொடுத்தால், அந்த விருதுக்கான கவுரவம் என்ன ஆவது?
அன்புமணி வேண்டுகோள் விடுத்தவுடன், மத்திய அரசிடம் உள்ள எல்லா விருதுகளையும், தனக்கு கொடுக்க காத்து கிடப்பதாக நினைத்து, 'பாரத ரத்னா விருது கொடுத்தாலும், அதை விட பெரிய விருது கொடுத்தாலும், அதை நான் வாங்க
மாட்டேன்' என்று பிகு செய்து ராமதாஸ் பேசியது, அதை விடக் கொடுமை.பாரத ரத்னாவுக்கு வாய்ப்பில்லை. வேண்டுமானால், ஆட்சி, அதிகாரத்தில் இல்லை என்றாலும், ஒவ்வொரு
ஆண்டும் நிழல் பட்ஜெட் வெளியிட்டு மகிழ்வது போல், அன்புமணியே, தன் தந்தைக்கு, 'பாட்டாளி ரத்னா' என்று விருது கொடுத்து மகிழ்ந்து கொள்ளலாம்.
வீட்டு கதவுகள் திறந்தே இருக்கட்டும்!
க. ஸ்ரீதர், கல்லிடைக்குறிச்சி, நெல்லை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், சமீபத்தில் ஒரு பொது நிகழ்ச்சியில், 'அமலாக்கத் துறை வருகைக்காக எங்கள் வீட்டு கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்' என்று, திருவாய் மலர்ந்துள்ளார்.
ஒரு திரைப்படத்தில்ரஜினிகாந்த், 'நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது. ஆனா, வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்' என்று வசனம் பேசுவார். இது, அமலாக்கத் துறைக்கும் பொருத்தமானது.அமலாக்கத் துறை, அமைச்சர் துரைமுருகன் வீட்டு கதவை தட்டும் காலம் வெகு தொலைவில்இல்லை. அப்போது தான் துரைமுருகனுக்கு அது, ஈ.டி.,யா அல்லது இடியா என்பதை அறியும் வாய்ப்பு கிடைக்கும்.நீர்வளத் துறைக்கு தான் துரைமுருகன் அமைச்சரே தவிர, அமலாக்கத் துறைக்கு அல்ல. செந்தில் பாலாஜி ஆதாரங்களுடன் சிக்கி, புழல் சிறை கம்பிகளை தொடர்ந்து எண்ணிக் கொண்டிருப்பது போதாதா?தி.மு.க., - எம்.பி.,க்கள் சிலர், அமலாக்கத் துறையிடம் சிக்கி உள்ளதும், தமிழக அமைச்சர் ஒருவர், அமலாக்கத் துறையிடம், 'எல்லாம் நான் உழைத்து சம்பாதித்தது' என்று
அலறுவதும், துரைமுருகனுக்கு தெரியாமலா போய் விட்டது. உயர் நீதிமன்றத்தில் தி.மு.க., அமைச்சர்கள் மீது தாமாகவே முன்வந்து வழக்கு விசாரணை துாசு தட்டப்படுகிறதே... இதுவும் அமைச்சருக்கு தெரியாதோ?'ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரை காத்திருக்குமாம் கொக்கு' என்பது போல அமலாக்கத் துறையும் கொக்காக எந்த நேரத்திலும் அதிரடியாக களமிறங்கும். அதுவரை, அமைச்சர் துரைமுருகனின் வீட்டு கதவுகள் திறந்தே இருக்கட்டும்.
ஆயிரம் மாரத்தான் நடத்தினாலும் பயனில்லை!
ஏ.எஸ்.ஆதித்யா, அருப்புக் கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில், தேனியில் பல தரப்பட்டோர் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது. இதில், பல லட்சம் ரூபாய் மோசடி நடந்திருப்பதாக, தி.மு.க.,
நிர்வாகி மீது வழக்கு பதிவாகி இருக்கிறது.முறையான முன்னேற்பாடுகள் எதுவும் இல்லாததால், நிகழ்ச்சியில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதுடன், அதில் பங்கேற்ற பள்ளி மாணவ - மாணவியரில் ஒரு சிலர் மயங்கி விழுந்திருக்கின்றனர்.மாரத்தான் என்பது 42.2 கி.மீ., துாரத்தை, 4 மணி 21 நிமிடத்தில் ஓடிக் கடக்க வேண்டிய, சவால் நிறைந்த ஒரு போட்டி. இதில் பங்கெடுக்க விரும்புவோர், அதற்கான உடல் தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
அன்று போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் உடல் தகுதி உள்ளவர்களா, அதற்கான மருத்துவ சான்றிதழ் பெறப்பட்டதா என்பது விசாரிக்கப்பட வேண்டும். போதை ஒழிப்பு விழிப்புணர்வு என்ற பெயரில் விளம்பரத்துக்காகவும், பணம் சம்பாதிக்கவும் நடத்தப்
பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது.இதெல்லாம் ஒருபுறம் இருக்க, போதை ஒழிப்புக்கான விழிப்புணர்வில் மதுபானம் இடம்பெறுகிறதா என்பது தெளிவாக விளக்கப்பட வேண்டும்.தமிழகத்தை பொறுத்தவரை, பல கோடி பேர் மதுவுக்கு அடிமையாகி விட்டனர். இவர்களில் பள்ளி மாணவர்களும் இடம்பெற்றிருப்பது வேதனைக்குரிய விஷயம். தமிழகத்தில் மற்ற போதை வஸ்துகளை விட, ஒளிவு மறைவில்லாமல் எளிதில் கிடைப்பதும், அதிக பயன்பாட்டில் இருப்பதும், குடும்பங்களை சீரழிப்பதும், 'டாஸ்மாக்' மதுபானம் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஆகவே, காவல் துறை முழு ஈடுபாட்டுடனும், நேர்மையாகவும் செயல்பட்டால் ஒழிய, போதை பொருள் கலாசாரத்தை ஒழிப்பது என்பது, பகல் கனவாகவே இருக்கும். மற்ற போதை பொருளுக்கு மட்டும் தடை விதித்து, மதுவை மட்டும் வாரி வழங்கினால் ஆயிரம் மாரத்தான் நடத்தினாலும், போதையில்லாத தமிழகம் உருவாக வாய்ப்பே இல்லை.