தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ எவர் முற்போக்குவாதி?

 எவர் முற்போக்குவாதி?

 எவர் முற்போக்குவாதி?

1


PUBLISHED ON : ஜூன் 17, 2026 12:22 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 17, 2026 12:22 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முனைவர் ரா.ஷண்முகசுந்தரம், விவசாய ஆராய்ச்சியாளர், அவினாசி, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

முதல்வர் விஜய் பிறப்பால் கிறிஸ்துவராக இருந்தாலும், திருச்செந்துார் முருகன் கோவிலில் பக்தியுடன் வழிபட்டது முதல், சமீபத்தில் கொல்லுார் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு சென்று, வெள்ளி வாள் காணிக்கை செலுத்தியது வரை, அவர் ஹிந்து மத நம்பிக்கைகளை வெளிப்படையாகவே கடைப்பிடித்து வருகிறார்.

தேர்தல் அரசியலுக்காக போலி பகுத்தறிவு பேசாமல், நெற்றியில் குங்குமம் இடுவது, வாஸ்து மற்றும் ஜோதிட ஆலோசனைகளை பின்பற்றி உடைகள் மற்றும் கயிறுகள் அணிவது என, தன் நம்பிக்கைகளை அவர் எதற்காகவும் மறைக்கவில்லை.

அதுமட்டுமல்ல... திராவிட கழக தலைவர் வீரமணி போன்றோர், 'நண்டைச் சுட்டு நரியைக் காவலுக்கு வைக்கலாமா?' என்று பிராமணர்கள் குறித்து கிண்டல் செய்த போதும், அதுகுறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், ஒரு பிராமணரை அறநிலையத் துறை அமைச்சராக நியமித்துள்ளார்.

தமிழக அரசியல் வரலாற்றில் இருந்து திராவிட கட்சிகளால் ஒதுக்கி வைக்கப்பட்ட பிராமண சமூகத்தவருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கியுள்ளார்.

இதுவும், சமூக பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்ட அவரது அணுகு முறையையே காட்டுகிறது.

சனாதனம் என்றாலே, அதை ஒரு வசைச் சொல்லாக மாற்ற நினைக்கும் திராவிட கும்பலுக்கு மத்தியில், சனாதனம் என்பது பிற மதங்களை வெறுப்பது அல்ல; எல்லா வழிபாட்டு முறைகளுக்கும், எல்லா நம்பிக்கைகளுக்கும் மரியாதை செலுத்தும் வாழ்க்கை நெறி என்ற உண்மையை உணர்ந்து, அதை தன் வாழ்வில் கடைப்பிடித்து வருகிறார்.

சனாதனத்தை எதிர்ப்பதாக அரசியல் மேடைகளில் முழங்குவோர் கூட, தேர்தல் வந்தால் நல்ல நேரம் தேடுகின்றனர்; கோவில்களுக்கு செல்கின்றனர்; யாகங்கள் நடத்துகின்றனர். ஆனால், அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள தயங்குகின்றனர். அந்த போலி வேடம் விஜயிடம் இல்லை என்பது மகிழ்ச்சியாக உள்ளது.

அத்துடன், பல ஆண்டுகளுக்கு பின், ஹிந்து பண்டிகைகளுக்கு வெளிப்படையாக வாழ்த்து தெரிவிக்கும் ஒரு முதல்வர் தமிழகத்திற்கு கிடைத்துள்ளார்.

சிறுபான்மை ஓட்டுக்காக கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைகளையும், வழிபாட்டு முறைகளையும் இழிவுபடுத்தி வந்தவர்கள் மத்தியில், எல்லா மதங்களையும் மதித்து, ஒவ்வொருவரின் நம்பிக்கையையும், ஏற்றுக்கொள்ளும் விஜய் அல்லவா சிறந்த முற்போக்கு வாதி!

பச்சோந்திகளை மக்கள் நம்பலாமா?


டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி, தொண்டர்களை மதிப்பதில்லை என்று கூறி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அன்பில் கட்டுண்டு, தற்போது, தி.மு.க.,வில் இணைந்துள்ளதாக, 'கதை' கூறியுள்ளார்.

'அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முயன்றார்; இது, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா கொள்கைகளுக்கு எதிரானது. அதனால், அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறோம்' என்று கூறி, அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, சம்பத், வெல்லமண்டி நடராஜன் போன்றோர், சமீபத்தில் த.வெ.க.,வில் இணைந்தனர்.

இவர்கள் கூறிய காரணமாவது பொருத்தமாக இருந்தது. ஆனால், பொதுக்கூட்டம், தேர்தல் பிரசார கூட்டம் என, பழனிசாமி எங்கு பேசிக் கொண்டிருந்தாலும் மேடை ஏறி, அவருக்கு சால்வை அணிவிப்பதற்கு பதில், முத்தங்களை பரிசாக கொடுத்தவர், பெஞ்சமின்.

இன்று அவர் சொல்கிறார்... பழனிசாமி தொண்டர்களை மதிப்பதில்லை என்று!

கடந்த 1980, பிப்., 17-ம் தேதி எம்.ஜி.ஆர்., ஆட்சி கலைக்கப்பட்ட போது, இப்படித்தான் எம்.ஜி.ஆர்., அமைச் சரவையில் இருந்த பலரும், ஒவ்வொருவராக, தி.மு.க.,வில் சேர ஆரம்பித்தனர்.

இப்படி நாள்தோறும் கட்சி மாறும் நிகழ்வுகள் நடந்ததால், 'எம்.ஜி.ஆர்., கூடாரம் காலி' என்று செய்தி வெளியிட்டது, 'முரசொலி' பத்திரிகை.

ஆட்சி கலைக்கப்பட்டதை கண்டித்து பேரணி நடத்த, பிப்.,20 அன்று மாலை 5:00 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணியினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் பேசிய நாஞ்சில் மனோகரன், 'நான் தி.மு.க.,வில் சேரப் போவதாக வதந்தியை பரப்புகின்றனர்; இப்போது சொல்கிறேன் நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள்... 'எம்.ஜி.ஆருக்கு துரோகம் செய்து, தி.மு.க.,வில் இணைந்தால், நான், என் தந்தை கிருஷ்ணனுக்கு பிறந்தவன் இல்லை' என்றார்.

இப்பேச்சைக் கேட்டு, அ.தி.மு.க., தொண்டர்களின் கை தட்டலால் கலைவாணர் அரங்கமே அதிர்ந்தது. ஆனால், மறுநாள் காலை, 7:00 மணிக்கு கோபாலபுரம் சென்று, கருணாநிதிக்கு சால்வை அணிவித்து, தி.மு.க.,வில் இணைந்து விட்டார், நாஞ்சில் மனோகரன்.

இவரைப் போன்று தான், பெஞ்சமினும், 'அ.தி.மு.க., என் உயிருக்கும் மேலான கட்சி; நான் எவர் பக்கமும் செல்லவில்லை' என்று சொல்லி, ஜெயலலிதா சமாதி முன் அழுதபடி, சமீபத்தில் வீடியோ வெளியிட்டார்.

இப்போது, தி.மு.க.,வில் இணைந்து விட்டார்.

பச்சோந்தி போல் நேரத்திற்கு தகுத்தாற்போல், தங்கள் நிறத்தை மாற்றும் இந்த இரட்டை வேடதாரிகளை நம்பும் மக்கள் அல்லவா முட்டாள்கள்!

வரலாறு தெரியாத சிதம்பரம்!


கே.ஆர்.பிரேம்குமார், பெங்களூருவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நம் நாட்டில் நீண்ட காலம் பிரதமராக பணியாற்றியவர் என்ற அடிப்படையில், மோடியை, நேருவுடன் ஒப்பிடுகின்றனர். இது தவறு; அது, ஒரு வரலாற்று பிழை' என்று கூறியுள்ளார், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சிதம்பரம்.

சுதந்திரத்திற்குப் பின், 1952க்கு முன் வரை கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆட்சி நடக்கவில்லை. அந்த ஐந்து ஆண்டுகளும், இடைக்கால அரசின் தலைவராக தான் நேரு பிரதமராக பதவி வகித்தாரே தவிர, அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதன்பின், 1952ல் நடந்த முதல் பார்லிமென்ட் தேர்தலில் வெற்றி பெற்ற நேரு, பிரதமராக பதவி ஏற்று, தொடர்ந்து 4,398 நாட்கள் ஆட்சியில் இருந்தார்.

அவ்வகையில், 4,398 நாட்களை கடந்து, இன்று வரை தொடர்ந்து பதவியில் இருந்து வரும் மோடி மட்டுமே, 'நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றியவர்' என்ற சாதனைக்கு உரியவர்!

சட்டம் படித்த சிதம்பரத்திற்கு, இந்த வரலாற்று கணக்கு புரியவில்லையா என்ன! lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us