PUBLISHED ON : செப் 26, 2025 12:00 AM

செப்டம்பர் 26, 1913
விழுப்புரம் மாவட்டம், தோகைப் பாடி கிராமத்தில் வீராசாமி - வீரம்மாள் தம்பதியின் மகனாக, 1913ல் இதே நாளில் பிறந்தவர் முனுசாமி.
இவர், திருச்சி செயின்ட் ஜோசப் பள்ளி, கல்லுாரிகளில் படித்தார். பொருளியல், தமிழ் வித்வான் பட்டங்களை பெற்றவர், திருக்குறள் மீது பற்று கொண்டதால், திருச்சி மலைக்கோட்டை யின் நுாறுகால் மண்டபத்தில் திருக்குறள் பரப்பும் பணியை மேற்கொண்டார்.
சேலம், சென்னை உள்ளிட்ட நகரங்களில் தேவநேய பாவாணர், ரா.பி.சேதுப்பிள்ளை, திரு.வி.க., மற்றும் தெ.பொ.மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் முன்னிலையில் திருக்குறள் மாநாடுகளை நடத்தினார்.
'தெருக்கள் தோறும் திருக்குறள்' என்ற முழக்கத்துடன், அட்டைகளில் திருக்குறளை எழுதி வலம் வந்தார். கடலுாரில் திருக்குறள் அச்சகம் துவக்கி, மாணவர்களிடம் திருக்குறள் புத்தகங்களை சேர்த்தார். மதுரை உலகத்தமிழ் மாநாட்டில், திருக்குறளை ஒரு நாள் நிகழ்வாக நடத்தினார். 20க்கும் மேற்பட்ட நுால்களை எழுதியுள்ள இவர், தன் 80வது வயதில், 1994, ஜனவரி 4ல் மறைந்தார்.
'திருக்குறள்' முனுசாமி பிறந்த தினம் இன்று!