PUBLISHED ON : ஜன 28, 2024 12:00 AM

'கவுன்சிலரின் விளம்பரமா?'
சென்னை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், மெட்ரோ ரயில் பணி காரணமாக அகற்றப்பட்ட பேருந்து நிழற்குடைக்கு மாற்றாக, மாநகராட்சி கவுன்சிலர் மேம்பாட்டு நிதியில், ஆங்காங்கே புதிய நவீன பயணியர் நிழற்குடைகள் அமைக்கப்பட்டு
வருகின்றன. இதில், பேருந்து நிறுத்தத்தின் பெயர் மிக சிறியதாக உள்ளது.இதன் காரணமாக, புதிய பயணியர், பேருந்து நிறுத்தத்தின் பெயரை தேடிக்கண்டுபிடிக்கும் நிலை உள்ளது. அதே சமயம், கவுன்சிலரின் பெயர் மட்டும், மிக பெரிய எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது.
திருவொற்றியூர் அடுத்த பெரியார் நகர் பேருந்து நிறுத்த நிழற்குடையில், நிறுத்த பெயர் சிறியதாகவும்; தி.மு.க., கவுன்சிலர் ராஜகுமாரியின் பெயர் மிக
பெரியதாகவும் இருந்தது.இதைப் பார்த்த மூதாட்டி ஒருவர், 'இது பயணியர் நிழற்குடையா அல்லது கவுன்சிலரின் விளம்பர நிழற்குடையா' என, கிண்டலடிக்க, பஸ்சுக்கு காத்திருந்த சக பயணியர் ஆமோதித்து சிரித்தனர்.
'அவங்களுக்கா புரிதல் இல்லை?'
தர்மபுரி மாவட்டம், நல்லானுாரில் நடந்த பா.ம.க., நிர்வாகி இல்ல திருமண விழாவில், அக்கட்சி தலைவர் அன்புமணி பங்கேற்றார்.அப்போது அவர் கூறுகையில், 'திராவிட மாடல் ஆட்சி என சொல்பவர்கள், ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். ஏன் கணக்கெடுப்பு நடத்த தயங்குகின்றனர். ஜாதிவாரி கணக்கெடுப்பை, தமிழகத்தில் நடத்த வலியுறுத்தி வருகிறோம். ஆனால், சில கட்சி தலைவர்கள், ஜாதிவாரி கணக்கெடுப்பு வேண்டாமென சொல்கின்றனர். அவர்களுக்கு கணக்கெடுப்பு குறித்த புரிதல் இல்லை' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'அவங்களுக்கா புரிதல் இல்லை... கணக்கெடுப்பில், அவங்க ஜாதியினர் குறைவா இருந்தா, தேர்தலுக்கு தேர்தல் சீட்டை குறைச்சிடுவாங்களே... அதனால, தந்திரமா
தான் வேண்டாம்னு சொல்றாங்க...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் ஆமோதித்து தலையாட்டினர்.
'பின்னாடி தள்ளிட்டாங்களே!'
'கேலோ இந்தியா' போட்டி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி, அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட பள்ளி, கல்லுாரிகளில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் நிறைவாக, போட்டி நடக்கும் இடம், நேரம், தேதியுடன், போட்டி குறித்த விபரம்
அடங்கிய நோட்டீஸ் அனைவருக்கும் வழங்கப்பட்டது.மத்திய அரசின் விளையாட்டுத் துறை அமைச்சகம் நடத்தும் போட்டியில், பிரதமர் மோடி பெயரை, கடைசியாக பிரின்ட் செய்துள்ளனர். தமிழக முதல்வர் பெயரை கூட முதலில்
குறிப்பிடாமல், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி பெயர், பொறுப்பு, படத்தை பிரதானமாக அச்சிட்டுள்ளனர்.அதன்பின், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் பெயர், பொறுப்பு, அதன்பின் முதல்வர் ஸ்டாலின், அவரை தொடர்ந்து பிரதமர் மோடியின் படம்
அச்சிடப்பட்டுள்ளது.பா.ஜ.,வினரோ, 'ஸ்டாலினையே உதயநிதிக்கு பின்னாடி தள்ளிட்டாங்களே' என, கிண்டலடித்து வருகின்றனர்.