PUBLISHED ON : ஆக 12, 2026 12:00 AM

த.வெ.க., அரசை கண்டித்து, கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டையில் சமீபத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பங்கேற்றார்.
அவர் பேசுகையில், 'அமைச்சர் பதவி ஆசை காட்டியும், குதிரை பேரம் பேசியும், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை த.வெ.க.,வினர் பெற்றனர். அ.தி.மு.க.,வில் இருந்து, சில எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்து விட்டு, த.வெ.க.,வில் சேர்ந்துள்ளனர். காவிரி விவகாரத்தில், தமிழகத்திற்கு எதிராக மத்திய அமைச்சர் கருத்து தெரிவித்திருக்கிறார். ஆனால், முதல்வர் விஜய் வாய் திறக்கவில்லை.
'கொரோனா வந்தபோதும், வெள்ளம் வந்தபோதும், மக்களுக்கு களத்தில் நின்று விஜய் ஏதாவது செய்தாரா? தியாகம் இல்லாமல், உழைப்பு இல்லாமல் விஜய் ஆட்சியில் அமர்ந்துள்ளார். கடந்த மூன்று மாத ஆட்சியில், 22,000 கோடி ரூபாய்க்கு கடன் வாங்கி இருக்கின்றனர்' என்றார்.
பார்வையாளர் ஒருவர், 'இவங்க மட்டும் கடன் வாங்காமலா ஆட்சி நடத்தினாங்க...?' என, முணுமுணுத்தபடியே அங்கிருந்து நகர்ந்தார்.
