PUBLISHED ON : ஜூலை 10, 2026 12:00 AM

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், 'யங் இந்தியன்ஸ் பார்லிமென்ட்' என்ற நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது.
பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்ற நிகழ்ச்சியை துவக்கி வைத்து, கலெக்டர் நர்னாவாரே மணீஷ் பேசுகையில், 'மாணவ - மாணவியருக்கு அரசியல் சிந்தனை அவசியம் வேண்டும். அதற்காக, ஒரு கட்சியில் சேருங்கள் என்று கூறவில்லை; சட்டசபை, பார்லிமென்ட், மத்திய, மாநில அரசுகள் நிர்வாக முறையை அறிந்து கொள்ள வேண்டும்.
மாறாக, மொபைல் போனில் வீடியோ பார்ப்பதாலும், 'ரீல்ஸ்' பார்ப்பதாலும் அறிவு வளராது; நல்ல புத்தகங்களை தொடர்ந்து படிக்க வேண்டும். மாவட்டத்தில் புத்தகம் வாசிக்கும் மாணவர்களை தொடர்ந்து பாராட்டி வருகிறோம்' என்றார்.
இதை கேட்ட பார்வையாளர் ஒருவர், 'ரீல்ஸ் பார்த்தால் கூட பரவாயில்ல... நம்ம பசங்க சிலர், ரீல்ஸ் போடுறேன்னு பண்ற அட்டகாசத்தை தான் தாங்க முடியலை' என புலம்ப, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்து சிரித்தனர்.
