PUBLISHED ON : ஜன 11, 2024 12:00 AM

'கச்சேரி சூப்பரா இருக்குமோ?'
மதுரை, ஸ்ரீசத்குரு சங்கீத சமாஜத்தில் நடந்த 72ம் ஆண்டு இசை விழாவில், உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ராமசுப்ரமணியன் பங்கேற்றார்.
அவர் பேசுகையில், 'நீதிபதிகள் காலை முதல் மாலை வரை வக்கீல்கள் வாதத்தை கேட்பதும் கூட இசைக்கச்சேரி போல தான். சில வக்கீல்கள் ஆரம்பம் முதல் முடிவு வரை அழுது கொண்டே பேசுவர். இதை முகாரி ராகத்தில் சேர்க்கலாம்.
'சிலர் இல்லாத பாயின்ட்களை பேசும் போது, கல்பனா ஸ்வரத்தில் சேர்ந்ததாக நினைக்கலாம். சிலர் நமக்கு புரிந்தாலும், ஒரே விஷயத்தை தொடர்ந்து சொல்வர். இந்த ஆலாபனை எப்போது நிற்கும் என நினைப்பேன்.
'சிலர் பேசினால், அமிர்தவர்ஷினி ராகம் போல நன்றாக இருக்கும். இப்படி நீதிமன்றத்தை இசை
கச்சேரியாக கற்பனை செய்யலாம். எங்கு கற்பனை உள்ளதோ, அங்கு ஆனந்தம் உள்ளது என்பது தான் வாழ்க்கையின் அடிப்படை தத்துவம்' என்றார்.
பார்வையாளர் ஒருவர், 'இதைவிட கோர்ட் கச்சேரி சூப்பரா இருக்குமோ...?' என, சிரித்தபடியே நகர்ந்தார்.


