PUBLISHED ON : ஜூலை 19, 2024 12:00 AM

தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: 'அகில இந்திய காங்கிரஸ்
தலைவர், கர்நாடக காங்கிரஸ் தலைமைக்கு நிர்பந்தம் கொடுத்து, காவிரியில்
தண்ணீர் பெற வேண்டும்' என, திருமாவளவன் கூறியிருப்பதற்கு சபாஷ். அதே நேரம்,
ஸ்டாலினை எதுவும் கூறாமல், சமயோசிதமாக தப்பித்தமைக்கு இன்னொரு சபாஷ்.
நன்றாக அரசியல் செய்கிறீர்கள்.
கர்நாடக பா.ஜ.,வினரும், தமிழகத்துக்கு தண்ணீர் தரக்கூடாதுன்னு, காங்., அரசுடன் கைகோர்த்து அரசியல் பண்றது இவருக்கு தெரியாதா?
மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அறிக்கை: 'மத்திய அரசின் நிதியை பெற, ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்த வேண்டும்' எனும் முன் நிபந்தனையின் அடிப்படையில், தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் அனைத்து வகை மின் கட்டணமும் குறைவாக உள்ளது.
மத்திய அரசு சொல்றதை எல்லாம், மாநில அரசு வேதவாக்கா எடுத்துட்டு செயல்படுறது மாதிரி பேசுறாரே?
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும்' என, சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. அதே நேரத்தில் சீனா 5 சதவீதம், ரஷ்யா 3.2; அமெரிக்கா 2.6 சதவீத வளர்ச்சியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகள் நடந்த மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சியின் கட்டமைப்பு திட்டங்களே, இந்தியாவின் பிரமாண்ட வளர்ச்சிக்கு காரணம்.
'மோடியின் தலைமையில் இந்தியா வல்லரசு ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை'ன்னு சொல்லுங்க!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தமிழகத்தில் பீர், ஒயின் போன்ற குறைந்த அளவு, 'ஆல்கஹால்' உள்ள மது வகைகளை, 'சொமேட்டோ, ஸ்விக்கி' நிறுவனங்கள் வாயிலாக விற்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
போதை குறைந்த மது, வீடுகளுக்கே நேரடியாக வினியோகிக்கப்பட்டால், அது குழந்தைகள், பெண்களை சுவைத்து பார்க்க துாண்டும். ஆன்லைன் வினியோக நிறுவனங்கள் வாயிலாக மது விற்கும் திட்டம் இருந்தால், அதை தமிழக அரசு கைவிட வேண்டும்.
'அப்படி எந்த திட்டமும் தமிழகத்தில் இல்ல'ன்னு, 'டாஸ்மாக்' அதிகாரியே விளக்கிட்டாரே... அப்படியே விற்றாலும் எந்த ஏழை, எளியவங்களும் அதை வாங்கி குடிக்க போறதில்லை!