PUBLISHED ON : ஜூலை 28, 2024 12:00 AM

பா.ம.க., தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா பேச்சு: நடந்து முடிந்த
லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்ததும், என் தந்தையை சந்தித்தேன். 'தர்மபுரி
மக்கள் உன்னை கைவிட்டாலும், நீ அவர்களை கைவிடாதே' என, அறிவுரை வழங்கினார்.
அங்கு, பசுமை தாயகம் சார்பில், பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளை
செய்து வருகிறோம்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு, சமூகத்திற்கு
சேவையாற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் என்ற முறையிலாவது, உங்களை தர்மபுரி
மக்கள் பார்லிமென்ட்டுக்கு அனுப்பியிருக்கலாம்!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: மத்திய அரசின் பட்ஜெட்டில், தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக கூறி, தமிழகத்திற்குரிய காவிரி நீர் உரிமையை கொடு என, கர்நாடக மாநில அரசுக்கு உத்தரவு போட முடியாத காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்து தி.மு.க., போராடுவது, பச்சையான அரசியல் உள்நோக்கமாகும்.
தி.மு.க., - காங்., நடத்தும் அரசியல் விளையாட்டுல, பாதிக்கப்படுவது என்னமோ தமிழகத்தின் வளர்ச்சி தான்!
தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: பட்ஜெட்டில் எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை. நிதி ஆயோக் கூட்டத்தை எந்த மாநில முதல்வர்கள் புறக்கணித்தனரோ, அவர்கள் தங்கள் மாநிலத்தை கைவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். தமிழக முதல்வர் தனது வெற்று கவுரவத்திற்காக, நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தது, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் இழைத்த அநீதி மற்றும் தரம் தாழ்ந்த அரசியல்.
முதல்வர் கலந்துக்காம போனால் தான் என்ன...? நிதி ஆயோக் கூட்டத்துல, தமிழகத்துக்கு சாதகமா ஏதாச்சும் அறிவிச்சு, நீங்க தரமான அரசியலை பண்ணியிருக்கலாமே!
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'அம்பானியும், அதானியும், உக்ரைன் போர் காரணமாக, ரஷ்யாவில் இருந்து பெறப்பட்ட கச்சா எண்ணெயில், எவ்வளவு சம்பாதித்தனர் என்பது தெரிய வேண்டும்' என, தயாநிதி மாறன் கேட்டுள்ளார். அதனால் தான் சென்னை வந்த அதானியை சபரீசனும், மும்பைக்கே சென்று உதயநிதியும் சந்தித்தனரா? இதை அவர்களிடமே தயாநிதி கேட்டிருக்கலாமே!
இப்படி ஏடாகூடமா கேள்வி கேட்டு, தயாநிதியை முதல்வர் குடும்பத்துல மாட்டி விடணுமா?