PUBLISHED ON : ஜன 28, 2024 12:00 AM

அ.தி.மு.க., இலக்கிய அணி செயலர் வைகைச்செல்வன் பேச்சு: அ.தி.மு.க..,வில் சாதாரண தொண்டனும், தலைமைக்கு உயர முடியும். பழனிசாமி தலைமை, அதை நிரூபித்துள்ளது. அ.தி.மு.க.,வில் யார் வேண்டுமானாலும், பொதுச்செயலராக, முதல்வராக முடியும். தி.மு.க.,வில் அப்படி உள்ளதா? ஒரு சிறைவாசியே அமைச்சராக இருக்கும் அரசு என்றால், அது தி.மு.க., அரசு தான்.முதல்வர் பதவியில இருக்கும்போதே, ஊழல் வழக்கில் சிக்கி சிறை சென்ற வரலாற்றுக்கு சொந்தமான கட்சியில இருந்துட்டு இப்படி பேசுறாரே!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் பகுதியில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். தொப்பூர் சாலை விபத்துகளுக்கு மனிதத் தவறுகளை விட, தேசிய நெடுஞ்சாலையின் அபத்தமான வடிவமைப்பே காரணம். எனவே, சாலை வடிவமைப்பை மாற்ற வலியுறுத்தியும் அதற்காக மத்திய அரசுக்கு, தமிழக அரசின் சார்பில் ஒரு கடிதம் கூட எழுதப்படவில்லை. இந்த உயிரிழப்புகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும். நெடுஞ்சாலை துறையின் மெத்த படித்த இன்ஜினியர்கள், ஏனோ தானோ என்று திட்டங்களை வடிவமைத்து, அப்பாவிகள் உயிரோடு விளையாடலாமா?
தமிழக தலைமை செயலக சங்கத் தலைவர் வெங்கடேசன் அறிக்கை: தி.மு.க., அரசு பதவிக்கு வந்து, 30 மாதங்கள் கடந்த பின்னும், 100 சதவீதம் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. சொன்னதை செய்யாமல், சொல்லாததையும் செய்து வருகின்றனர்.'நாங்கள் சொல்வதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வோம்' என்று கூடத்தான் முதல்வர் வாக்குறுதி தந்திருந்தார்... அதை இவர் மறந்துட்டாரோ?
தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: லோக்சபா தேர்தல், மாநில கட்சிக்கான தேர்தல் இல்லை. மத்தியில் ஆளும் கட்சிக்கான தேர்தல். எனவே, ஆளும் கட்சி ஏற்கனவே மக்களால் முடிவு செய்யப்பட்டு விட்டது. அதுதான் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு. அதற்கு தமிழ் மக்கள் தரும் ஆதரவு, தமிழகத்தின் மிகப்பெரிய வளர்ச்சிக்கான பேராதரவாகும். 2024 லோக்சபா தேர்தல் முடிவுகள், தமிழகத்தின் முந்தைய முடிவுகளை புரட்டிப் போடும். தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை உரித்துப் போடும்.திராவிட கட்சிகள் பாணியில எதுகை, மோனையில அடிச்சு விட்டாலே, ஆட்சியை பிடிச்சிட லாம்னு நினைச்சுட்டாரோ?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி: மக்களுக்கு தேவையான திட்டங்களை துவக்குகிறோம் என்ற பெயரில், திட்டங்களை துவக்கிவிட்டு, அதில் தி.மு.க.,வினர் ஆதாயம் அடைகின்றனரே தவிர, மக்கள் ஆதாயம் அடைவதில்லை. ஜல்லிக்கட்டு, கிளாம்பாக்கம் பஸ் நிலையம் போன்ற திட்டங்களை முழுமையாக முடிக்காமல், அவர்கள் ஆதாயத்திற்காக அவசரகதியில் துவக்கி, மக்களை சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு பிரச்னை ஏற்பட்டப்ப, இவங்க ஆட்சியிலே மவுனமாக இருந்தாங்களே... போராட்டமே வெடிச்சுச்சே... அதை விடுவோம்... பஸ் நிலையம் கட்ட, வேறு நல்ல இடத்தைத் தேடி, அ.தி.மு.க.,வே முயற்சி செஞ்சி முடிச்சிருந்தா, இவ்வளவு பிரச்னை ஏற்பட்டிருக்காதே!
பா.ஜ., பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் அறிக்கை: தி.மு.க., இளைஞரணி மாநாட்டில், மட்டன் பிரியாணி, சில்லி சிக்கன்களை அண்டா, அண்டாவாக சமைத்து போட்டும், தொண்டர்கள் கூட்டம் கூடவில்லை. அரைகுறை ஆடையுடன் போட்ட குத்தாட்டமும் முகத்தை சுளிக்க வைத்துள்ளது. பல ஊராட்சிகளுக்கு பஸ் அனுப்பியும், பணம் தருகிறோம் என கூறியும் மாநாட்டிற்கு வராமல் தாய்மார்களும் ஒதுங்கி விட்டனர். அவங்களுக்கு போட்டியா, இவரது கட்சியின் சார்பிலும் ஒரு மாநாட்டை நடத்தி, பிரமாண்ட கூட்டத்தை கூட்டி காட்டலாமே!
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: ஒவ்வொரு தேர்தலிலும், ஜாதி, மதம், இனத்திற்காகவோ, பணம் மற்றும் பொருட்களுக்கோ அடிபணியாமல், விலை மதிப்பில்லா வாக்கை, நேர்மையுடன் செலுத்தி, ஜனநாயக கடமையாற்ற நாம் அனைவரும் உறுதியேற்போம்.இதை கேட்கிறப்ப, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலும், 20 ரூபாய் டோக்கனும் ஏனோ கண் முன்னே வந்து வந்து போகுது!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்சீமான் அறிக்கை: ராஜிவ் கொலை வழக்கில் சிக்கி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், ஓராண்டுக்கு முன் உச்ச நீதிமன்றத்தால் விடுவித்து, திருச்சி சிறப்பு முகாமிலிருக்கும் சாந்தன், ராபர்ட் பயஸ், முருகன், ஜெயகுமார் போன்றவர்களின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. 'இலங்கை தமிழர் எங்கள் ரத்தம்' என, முதல்வர் ஸ்டாலின் சட்டசபை தேர்தலுக்கு முன் முழங்கினார். ஆனால், அவர்களை சிறப்பு முகாமில் வைத்து எஞ்சிய வாழ்வையும் முடித்து விட எண்ணுகிறாரா?எதிர்க்கட்சி தலைவராக இருந்தப்ப முதல்வர் பேசியதை எல்லாம், கணக்கில் எடுத்துக்கிட்டா அது இவரது தவறுதானே!