PUBLISHED ON : ஜூன் 27, 2026 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் அறிக்கை: முதல்வர் விஜய், சட்டசபையில் அளித்த பதிலுரை வேடிக்கையாக இருந்தது. 'அப்பாவை காணோம்' என்று விஜய் கூற, அதற்கு, 'கணவனை காணோம்னு தேடும் மனைவி' என, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பதிலடி கொடுக்கிறார். எங்கே போகிறது தமிழக சட்டசபை? இதைக்கண்டு சிரிப்பதா, அழுவதா என தெரியவில்லை!
'அப்பாவை காணோம்'னு முதல்வர் சொன்ன குட்டிக்கதையை கேட்டு, உங்க பொதுச்செயலர் பழனிசாமியே சட்டசபையில் சிரிக்க தானே செஞ்சாரு... அப்ப நீங்களும் அதையே தானே செய்யணும்!
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் பேட்டி: அரசு மருத்துவமனைகளின் வசதிகளை மேம்படுத்த, பெரு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் நிதி பெற, சுகாதார அறக்கட்டளை விரைவில் தொடங்கப்படும்.
நல்ல முயற்சி. இதில் வெற்றி பெற்று விட்டால், அரசு மருத்துவமனைகளைத் தவிர வேறு எந்த மருத்துவ மனையையும் நாட, பொதுமக்கள் விரும்ப மாட்டர். ஆனால், இதற்கு பெரு நிறுவனங்கள் முன்வருமா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி!
புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை: 'டாஸ்மாக்கில் கட்சி நிதி என்ற பெயரில், ஆண்டுக்கு 1,000 கோடி ரூபாய் கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர்' என, முக்கியமான குற்றச்சாட்டை முன்வைத்த முதல்வர் விஜய், எந்த கட்சிக்கு அந்த நிதி சென்றது என்பது குறித்த ஆதாரத்தையும் வெளியிட்டிருந்தால், அது அரசியல் பூதாகரமாக வெடித்திருக்கும். தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பும் என எதிர்பார்த்த அவரது குற்றச்சாட்டு, வெறும் புழுதிக் காற்றாகவே போய் விட்டது.
தமிழகத்தில் நடக்குற 'டாஸ்மாக்'கிற்கு, காஷ்மீர்ல இருக்கிற கட்சிக்கா பார்ட்டி பண்ட் தருவாங்க... இதெல்லாம் முன்பு ஆட்சியில் இருந்த தி.மு.க.,வுக்கு தான்னு சின்ன குழந்தைக்கு கூட தெரியுமே!
பா.ஜ., தமிழக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் அறிக்கை: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது, ஹிந்துக்களின் அடிப்படை உரிமை, உணர்வு. நீதிமன்ற தீர்ப்புக்கு பின், ஹிந்துக்களின் உணர்வுகளை புறந்தள்ளுவது தவறு. தீபத்துாணில் தீபம் ஏற்றுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை அணுகுவது ஹிந்துக்களுக்கான நீதியை மறுப்பதாகும். பூரண சந்திரன் என்ற இளைஞரின் உயிரிழப்பை மனதில் கொண்டு ஹிந்துக்களின் உணர் வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
தமிழகத்தில் பா.ஜ., எப்ப ஆட்சிக்கு வருதோ, அப்ப தான் திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றுவாங்க போல... ஆனா, அதுக்கு வாய்ப்பிருக்கா?
