Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/சொல்கிறார்கள்/ கலைஞனுக்கு வரம்புகள் கிடையாது!

கலைஞனுக்கு வரம்புகள் கிடையாது!

கலைஞனுக்கு வரம்புகள் கிடையாது!

கலைஞனுக்கு வரம்புகள் கிடையாது!

PUBLISHED ON : அக் 09, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
மதுரையைச் சேர்ந்த ஓவியக் கலைஞர் சிவசுதன்: சிறு வயது முதலே ஓவியத்தின் மீது எனக்கு தீராத ஆர்வம் இருந்தது. புத்தகத்தை எடுத்துப் படித்ததைவிட, 'பென்சில், க்ரேயான், வாட்டர் கலர்' வாயிலாக கிறுக்கிக் கொண்டிருந்தது தான் அதிகம்.

அந்த கிறுக்கல்கள், ஒரு கட்டத்தில் ஓவியங்களாக மாறும் என்று நினைக்கவில்லை. காரணம், ஓவிய வகுப்புக்கு செல்லாமல், சமூக வலைதளங்கள் மூலம் தான் கற்றுக் கொண்டேன்.

நான் வரையும் ஓவியங்களை, வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வேன்; அதிகமான பார்வையாளர்கள் கிடைத்ததுடன், எனக்கு வருமானத்தையும் ஏற்படுத்தி தந்தது.

கலையைப் பொறுத்தவரை பணத்துக்காக வரைகிறோம் என்று வந்துவிட்டால், அதில் உயிர் இருக்காதோ என்ற பயமும் எனக்கு இருந்தது.

அதனால், 'ஒருபோதும் நம் ஓவியங்களில் பணத்தின் மதிப்பு தெரியக் கூடாது' என, ஆழமாக மனதில் பதிவு செய்து கொண்டேன். அதுதான் என்னை உலக சாதனை வரைக்கும் அழைத்துச் சென்றது.

மதுரை மீனாட்சி அம்மன் படத்தை, 'ரியலிஸ்டிக் ஸ்டைல்' எனப்படும், துல்லியமாகத் தோற்றமளிக்கும் ஒரு கலை வடிவம் வாயிலாக, நான்கே நாட்களில் வரைந்து சாதனை படைத்தேன். இதனால், நான் வரைந்த அனைத்து ஓவியங்களும், கடல் கடந்து பிரபலமடைய துவங்கின.

மதுரை மீனாட்சி அம்மனின் ஓவியத்தைப் பார்த்துவிட்டு, பிரான்ஸ் நாட்டில் உள்ள, மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து ஓவியத்துக்கான ஆர்டர் வந்தது; அதை முடித்துக் கொடுத்தேன்.

அதன்பின், சிங்கப்பூர், மலேஷியா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் பலர் ஆர்டர்களை வழங்கினர். அதேபோல், கர்நாடக மாநிலத்தில் உள்ள சிருங்கேரி சாரதாம்பாள் கோவிலின் திருவிழாவை முன்னிட்டு வலம் வரும் தேருக்கு, நான் ஓவியங்கள் வரைந்து கொடுத்திருக்கிறேன்.

முக்கியமாக, கோவில் கருவறையில் உள்ள விளக்கு வெளிச்சத்தில் உள்ளது உள்ளபடி இருக்கும் தெய்வங்களின் ஓவியங்களை வரைந்து கொடுப்பது, என்னுடைய தனித்துவம்.

தனிநபர்களின் படங்கள், இயற்கைக் காட்சிகள், விலங்குகளின் தத்ரூபமான ஓவியங்கள் வரை அனைத்தும் வரைகிறேன்.

எத்தனை விதமான தொழில்நுட்பங்கள் வந்தாலும், அதில் வரம்புகள் நிறையவே இருக்கும். ஒரு கலைஞனுக்கு அப்படியான வரம்புகள் எதுவும் இல்லை. எல்லா வரம்புகளையும் உடைக்கும் திறன் என் திறமைக்கு உள்ளது.

என் அடுத்த இலக்கு கின்னஸ் சாதனை!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us