Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/சொல்கிறார்கள்/ முன்னாடி அடியெடுத்து வச்சு போயிட்டே இருங்க!

முன்னாடி அடியெடுத்து வச்சு போயிட்டே இருங்க!

முன்னாடி அடியெடுத்து வச்சு போயிட்டே இருங்க!

முன்னாடி அடியெடுத்து வச்சு போயிட்டே இருங்க!

PUBLISHED ON : அக் 03, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
தள்ளுவண்டியில் காய்கறிகள் விற்பனை செய்யும், திருச்சியைச் சேர்ந்த, 53 வயது ஜோதிலட்சுமி: கடந்த, 10 வருஷத்துக்கு முன்னாடி, என் வீட்டுக்காரர் திடீர் மாரடைப்பில் இறந்துட்டார். அதன்பின், ரெண்டு குழந்தைகளையும் எப்பாடு பட்டாவது படிக்க வெச்சிடணும்னு வைராக்கியம் எடுத்தேன். முதல் ரெண்டு வருஷங்கள் வீட்டு வேலை செஞ்சு, பாத்திரம் கழுவி தான் குழந்தைகளை வளர்த்தேன்.

அடுத்து, மார்க்கெட்ல வாழைப்பூ, கீரை வாங்கிட்டு வந்து, தலை மேல கூடையை வெச்சு தெரு தெருவா கூவி விற்க ஆரம்பிச்சேன். 'காய்கறியும் எடுத்துட்டு வாங்களேன்'னு வாடிக்கையாளர்கள் சொன்னாங்க.

அப்படியே காய்கறியும் விற்க ஆரம்பிச்சேன். ஒருவழியா மகளை டிப்ளமா சிவிலும், மகனை டிப்ளமா மெக்கானிக்கலும் படிக்க வெச்சேன். மகளுக்கு கல்யாணமும் பண்ணி முடிச்சுட்டேன்.

அடுத்து, வாடகைக்கு தள்ளுவண்டி எடுத்தேன். மாசம், 900 ரூபாய் வாடகை. அதுக்கு அப்புறம் தலைச்சுமை குறைஞ்சது; வியாபாரம் கொஞ்சம் சுலபம் ஆச்சு. திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு விடியற்காலை 4:00 மணிக்கு எல்லாம் போயிடுவேன். பேரம் பேசி, நல்ல காய்கறி களா வாங்கிட்டு வந்து வியாபாரம் பண்ணுவேன்.

நம்ம காலுக்கும், கடைக்கும் லீவே இல்லன்னு உழைப்பேன். 1,000 ரூபாய்க்கு காய்கறி விற்றால், 500 ரூபாய் லாபம் கிடைக்கும் அளவுக்கு இது நல்ல தொழில்.

ஆனா, வெயில், மழைன்னு பார்க்காம, வண்டி தள்ளி உழைக்க தயாரா இருக்கணும். என் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருத்தரும் எனக்கு கடவுள் மாதிரி. என்னை வாழ வைக்கிறவங்க அவங்க தான்.

அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஒரு விபத்துல சிக்கி, தண்டுவட எலும்புல அடிபட்டு ஆப்பரேஷன் பண்ணியிருக்கேன். அதன்பிறகு வாரத்துல நாலு நாள் வேலை, மூணு நாள் ஓய்வுன்னு இருக்கேன்.

உடம்பு சொல்றதை கேட்காம புறக்கணிச்சுட்டே ஓடிட்டு இருந்தோம்னா, அப்புறம் ஒரு நாள் மொத்தமா படுத்துக்கும். ஒண்ணுமே பண்ண முடியாம போயிடும்.

கணவரை இழந்த, கணவரை பிரிந்த, தனியா வாழுற பெண்களுக்கு எல்லாம், இந்த காய்கறி அக்கா ஒண்ணு சொல்லிக்கிறேன்... நாம கொஞ்சம் தளர்ந்துட்டாலும், இந்த சமூகம் நம்மளை விழுங்கிடும். அதனால, என்ன ஆனாலும் பார்த்துக்கலாம்னு முன்னாடி அடியெடுத்து வெச்சு போயிட்டே இருங்க!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us