அறிவியல் சார்ந்த இயற்கை விவசாயம் தான் எதிர்காலம்!
அறிவியல் சார்ந்த இயற்கை விவசாயம் தான் எதிர்காலம்!
PUBLISHED ON : மே 03, 2026 12:30 AM

பத்மஸ்ரீ விருதுக்கு தே ர்வாகியுள்ள, தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின் முன்னாள் துணைவேந்தரான, புதுக்கோட்டை மாவட்டம், நிலையூர் கிராமத்தை சேர்ந்த, 78 வயதாகும் முனைவர் ராமசாமி: நான், விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். கடும் பொருளாதார நெருக்கடியால், பி.யு.சி., முடித்து விட்டு ஓராண்டு வரை எந்த கல்லுாரியிலும் சேரவில்லை.
அப்போது, நெல் வண்டி ஓட்டி சம்பாதித்த பணத்தை சேர்த்து வைத்து, அடுத்த ஆண்டில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் சேர்ந்தேன்.
கோவை வேளாண் கல்லுாரியில், பயிற்சியாளர் பணியில் இணைந்தேன்; நான், பணியில் இணைந்த ஆறு மாதங்களில், பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டது.
'உயர் கல்வி படித்தால் தான் இங்கு பணியில் தொடர முடியும்' துணைவேந்தர் கூறியதால், பெல்ஜியம் நாட்டில் உயர் கல்வி பயின்று, 1980ல் இந்தியா வந்து, அதே பல்கலையில், உதவி பேராசிரியராக பதவி உயர்வு பெற்றேன்.
கரூர் அருகே பொத்தனுார் வேலுாரில் வெற்றிலை கொடிக்கு, ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது. நான், ஒவ்வொரு வாரமும் அங்கு சென்று ஆய்வு செய்வேன். 1981ல் எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரையால், ஆராய்ச்சி நிதியாக 87 லட்சம் ரூபாய் கிடைத்தது. அதுதான் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது.
கடந்த 1984 - 85ல் ஈரோடு மாவட்டத்தில் அதிக அளவிலான, 'பயோ காஸ் பிளான்ட்'கள் அமைத்ததற்காக, எனக்கு தேசிய விருது கிடைத்தது.
வேளாண் பல்கலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, எஸ்.ஆர்.எம்., பல்கலையில் நான்கு ஆண்டுகள் பணியாற்றினேன். தொடர்ந்து, தமிழக அரசின் திட்டக்குழுவில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
அடுத்து, கோவை கற்பகம் பல்கலையில் துணைவேந்தராக இருந்தேன். 2012 முதல் 2018 வரை, கோவை வேளாண் பல்கலை துணைவேந்தராக பணியாற்றினேன்.
விருதுகளுக்காக நான் பணியாற்றவில்லை; என் பணிகளை சரியாக செய்கிறேன். விருதுகள் தானாக கிடைக்கின்றன. இந்தியாவில் உணவு பஞ்சம் ஏற்பட்டபோது, அதிக உரங்களை பயன்படுத்தி, உற்பத்தியை பெருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.
நாளடைவில், உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவு அடைய துவங்கியதால், இயற்கை விவசாய முன்னெடுப்புகள் படிப்படியாக அதிகரித் தன. அறிவியல் சார்ந்த இயற்கை வேளாண்மை தான் காலத்தின் கட்டாயம். வேளாண்மையுடன் இணைந்து ஆடு, கோழி மற்றும் கால்நடை வளர்ப்பு வாயிலாக அதிக வருமானம் ஈட்ட முடியும்.
ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் பந்தய காளைகளை வளர்ப்பது கவுரவம் மட்டுமின்றி, லட்சக்கணக்கில் வருமானம் தரும் தொழிலாகவும் மாறியுள்ளது.
இளைஞர்களுக்கு வேளாண்மை சார்ந்த வேலை வாய்ப்புகளை, அரசு அதிகம் உருவாக்க வேண்டும். சாலை ஓரங்களில் பனை வி தைகள் நடுவது போன்ற சமூக பணிகளிலும் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். தொடர்புக்கு 94440 65656
**********************
தரம், நம்பிக்கை, தனித்துவம் என் தாரக மந்திரம்!
திருப்பூரில்
மூன்று கிளைகளுடன் செயல்படும், பி.எஸ்.ஆர்., ஹோட்டல் உரிமையாளர் ராஜா
பகதுார்: என் சொந்த ஊர், மதுரை மாவட்டம், கருங்காலக்குடி. 1998ல்
திருப்பூர் வந்த போது என்னிடம் இருந்தது உழைப்பும், என் ஊர் உணவின் மீதான
நம்பிக்கையும் மட்டுமே!
முதன்முதலில், திருப்பூர் காங்கேயம்
சாலையில் ஒரு சிறிய உணவகத்தை ஆரம்பித்தேன். மதுரையில் மிகவும் பிரபலமாக
இருந்த ஆயில் பரோட்டாவும், குருமாவும் அப்போது திருப் பூரில் அறிமுகமில்லை.
அந்த ஸ்டைல் பரோட்டாவை, முதன் முதலில் திருப்பூருக்கு அறிமுகப்படுத்தியது நாங்கள் தான்.
கடை ஆரம்பித்த முதல் நாளே, 50 கிலோ மைதா மாவில் செய்த பரோட்டாக்கள் விற்று தீர்ந்தன.
என் கைவண்ணத்தில் தயாரான தனித்துவமான மதுரை ஸ்டைல் குருமாவுக்காகவே, திருப்பூர் மக்கள் என் கடைக்கு வரத் துவங்கினர்.
அந்த ருசி மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே, இப்போது வரை எந்த
மசாலாவையும் வெளியில் வாங்காமல், நாங்களே அரைத்து தயார் செய்கிறோம்.
குடும்ப பெரியவர்களின் ஆசியுடன், என் உணவகத்தின் முதல் கிளையை 2002ல் ஆரம்பித்தேன். அதன்பின், எங்கள் வளர்ச்சி வேகம் எடுத்தது.
அடுத்தும் இரண்டு கிளைகள் துவக்கினோம். தற்போது இந்த இரண்டு கிளைகளையும், என் இரு மகன்கள் பார்த்துக் கொள்கின்றனர்.
கடை துவங்கி, 24 ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தனை ஆண்டுகளில் திருப்பூர் மக்கள்
மட்டுமின்றி, அவிநாசி, கோவை, பல்லடம் என பக்கத்து மாவட்டங்களில் இருந்தும்
மக்கள் திரளாக வந்து, எங்கள் உணவகத்தின் ஆயில் பரோட்டாக்களை சாப்பிட்டு
செல்கின்றனர்.
எங்கள் மூன்று கடைகளிலும் ஒரு நாளைக்கு, 200 கிலோ
மாவில் செய்யும் பரோட்டாக்கள் மற்றும் 60 கிலோ சிக்கன் குருமா விற்பனை
ஆகும் அளவுக்கு வளர்த்திருக்கிறோம்.
எத்தனை கிளைகள் துவக்கினாலும், அனைத்து இடங்களிலும் ஒரே சுவை இருப்பதை, நானே நேரடியாக கவனித்துக் கொள்கிறேன்.
வாடிக்கையாளர்களிடம் வாங்கும் பணத்திற்கு நேர்மையாக இருக்க வேண்டும்
என்பதே என் அடிப்படை அறம். மூன்று கடைகளிலும் சேர்த்து மாதம், 10 லட்சம்
ரூபாய் அளவுக்கு வியாபாரம் நடக்கிறது என்பதே, எங்களுக்கு கிடைத்துள்ள
வெற்றிக்கு உதாரணம்.
இளைஞர்களுக்கு நான் கூறுவது என்னவெனில், எந்த ஒரு தொழிலுக்கும், லாபம் என்பது முக்கியம் தான்.
ஆனால் அதையும் தாண்டி, மக்கள் நம் மீது வைக்கும் நம்பிக்கை மிக முக்கியம்.
தரம், நம்பிக்கை, தனித்துவம் ஆகிய மூன்றையும் சரியாக செய்தால், மக்கள்
நிச்சயம் ஆதரவு தருவர்; நாமும் தொடர்ந்து வெற்றி பெறலாம்.
