Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ பழைய இடத்துக்கு பந்தாடப்பட்ட அமைச்சரின் உதவியாளர்!

பழைய இடத்துக்கு பந்தாடப்பட்ட அமைச்சரின் உதவியாளர்!

பழைய இடத்துக்கு பந்தாடப்பட்ட அமைச்சரின் உதவியாளர்!

பழைய இடத்துக்கு பந்தாடப்பட்ட அமைச்சரின் உதவியாளர்!

PUBLISHED ON : செப் 04, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
“ஒ ரு முறை புகார் குடுத்துட்டா, கதை முடிஞ்சுது பா...” என்றபடியே, ஏலக்காய் டீயை உறிஞ்சினார் அன்வர்பாய்.

“எந்த ஊருல வே...” என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.

“சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் போலீஸ் ஸ்டேஷன் ஏரியாவுல நிறைய கிராமங்கள் இருக்கு... நிலத்தகராறு சம்பந்தமா அடிக்கடி சொந்தங்களுக்குள்ளயே அடிச்சுக்குவாங்க பா...

“இவங்க உடனே, கொங்கணாபுரம் ஸ்டேஷன்ல புகார் குடுப்பாங்க... புகார் குடுத்த பிறகு, போலீசார் என்ன சொல்றாங்களோ, அதைத்தான் ரெண்டு தரப்புமே கேட்கணும் பா...

“ஒருவேளை சண்டை போட்டவங்களே சமாதானம் ஆகி, 'புகாரை வாபஸ் வாங்கிடுறோம்'னு வந்தாலும், போலீசாருக்கு வெட்ட வேண்டியதை வெட்டுனா தான், வாபஸ் வாங்க அனுமதிக்கிறாங்க... பணம் தரலன்னா, 'பேசாம வழக்கு பதிவு பண்ணிடுறோம்... கோர்ட், கேஸ்னு அலைங்க'ன்னு மிரட்டியே வசூல் பண்ணிடுறாங்க பா...” என்றார், அன்வர்பாய்.

“உள்ள தள்ளிடுங்கோன்னு சொல்லிட்டா ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

“திருவள்ளூர் மாவட்டத்தில் நிறைய தொழிற்சாலைகளும், சவுடு மண் குவாரிகளும் இருக்கு... இந்த மாவட்டத்தைச் சேர்ந்த சில அரசியல் கட்சி நிர்வாகி கள், தங்களுக்குள்ள கூட்டணி போட்டுண்டு, தொழிற்சாலை நிர்வாகி களிடமும், குவாரி உரிமையாளர்களிடமும் மாமூல் கேட்டு மிரட்டறா ஓய்...

“சமீபத்தில், திருவள்ளூர்ல இருக்கற தனியார் தொழிற்சாலையில், பணம் கேட்டு மிரட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாகியை, போலீசார் குண்டர் சட்டத்துல கைது பண்ணிட்டா... ஆனாலும், கட்சியினரின் மாமூல் மிரட்டல் குறையல ஓய்...

“இப்படி, மாமூல் மிரட்டல் விடுக்கற கட்சியினர் பெயர்களை, உளவுத்துறை போலீசார் பட்டியல் எடுத்து வச்சிருக்கா... 'அந்த பட்டியல்ல இருக்கறவா எந்த கட்சின்னு பார்க்க வேண்டாம்... அவா மேல ஏற்கனவே வழக்குகள் இருந்து, குற்ற நடவடிக்கையி ல் ஈடுபட்டது உறுதியானா, அவாளை குண்டர் சட்டத்துல உள்ள தள்ளிடுங்கோ'ன்னு ஆளுங் கட்சி மேலிடம், போலீஸ் துறைக்கு பச்சைக் கொடி காட்டிடுத்து ஓய்...” என்றார், குப்பண்ணா.

“பழைய இடத்துக்கே திருப்பி அனுப்பிட்டாவ வே...” என்றார், அண்ணாச்சி.

“யாரைங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.

“உயர்கல்வி துறையில் அமைச்சரா இருந்த பொன்முடி, அவருக்கு பிறகு வந்த கோவி.செழியன்கிட்ட உதவியாளரா இருந்தவரை தான் சொல்லுதேன்... முதல்வர் குடும்பத்தின் செல்வாக்கு இருந்ததால, யாரையும் மதிக்காம இருந்தாரு வே...

“அதுவும் இல்லாம, வசூலையும் வாரி குவிச்சிட்டு இருந்தாரு... இவரது உறவினர் ஒருத் தர், துணை முதல்வரிடம் அரசியல் உதவியாளரா இருக்காரு வே...

“ஒரு கட்டத்துல, முதல்வர் குடும்பத்தில் யாருக்கு செல்வாக்கு அதிகம்னு ரெண்டு பேருக்கும் முட்டல், மோதல் வந்துட்டு... இதுல, உதயநிதி உதவியாளர் கை ஓங்கிட்டு... உயர்கல்வி துறை உதவி யாளரை, அவர் ஏற்கனவே பணிபுரிந்த ஊரக வளர்ச்சி துறைக்கே திருப்பி அனுப்பிட்டாவ வே...” என முடித்தார், அண்ணாச்சி.

“வாங்கோ செந்தில்... சோமாஸ்கந்தர் தரிசனம் எல்லாம் சிறப்பா முடிஞ்சுதோன்னோ...” என, நண்பரிடம் குப்பண்ணா விசாரிக்க, பெரியவர்கள் கிளம்பினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us