தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ மொட்டை அடிக்கும் பணியாளர்களுக்கு ஊதியம் இழுத்தடிப்பு!

 மொட்டை அடிக்கும் பணியாளர்களுக்கு ஊதியம் இழுத்தடிப்பு!

 மொட்டை அடிக்கும் பணியாளர்களுக்கு ஊதியம் இழுத்தடிப்பு!

2


PUBLISHED ON : ஜூன் 22, 2026 12:24 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 22, 2026 12:24 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெஞ்சில் ஆஜரானதும், “நகராட்சி நிர்வாகத் துறையில், தி.மு.க., ஆட்சியில நியமிக்கப்பட்ட ரெண்டு அதிகாரிகள் இன்னும் ஆதிக்கம் பண்ணிண்டு இருக்கறதா பேசியிருந்தோமோல்லியோ...” என கேட்டு நிறுத்தினார் குப்பண்ணா.

“ஆமாங்க... அதுக்கென்ன இப்ப...” என கேட்டார் அந்தோணிசாமி.

“இந்த துறை முதல்வர் விஜய் வசம் இருக்கறதால, உயர் அதிகாரிகள் எல்லாம் அதிர்ச்சியாகிட்டா... இப்ப, துறையில் ரெண்டாவது நிலையில் இருந்த விஜயகுமார் என்ற அதிகாரியின், 'பவரை' குறைச்சுட்டா ஓய்...

“அதாவது, துறைக்குள்ள நடக்கற இடமாறுதல்களை, இனி அவரால தன்னிச்சையா பண்ண முடியாது... அதே துறையில் இருக்கற நேர்மையான பெண் அதிகாரியுடன் சேர்ந்து, இடமாறுதல்கள்ல முடிவு எடுக்கும்படி, அதிகாரத்தை மாத்தி அமைச்சிருக்கா ஓய்...” என்றார் குப்பண்ணா.

“என்கிட்டயும் ஒரு அதிகாரி தகவல் இருக்குது பா...” என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...

“சென்னை சைதாப்பேட்டையில், ஒருங்கிணைந்த கால்நடை மற்றும் மீன்வளத் துறையின் தலைமை அலுவலகம் இருக்கே... இதன் மூணாவது மாடியில், மீன்வளத்துறை அலுவலகம்இருக்குது பா...

“இங்க, கடலோர மீனவர்களுக்கு, 'மரைன்' என்ற பிரிவும், மற்ற மீனவர்களுக்கு, 'இன்லாண்ட்' என்ற பெயர்ல தனி பிரிவும் இயங்குது... இதுல, மரைன் துணை இயக்குநரா இருந்த அதிகாரி, அஞ்சு மாசங்களுக்கு முன்னாடி பிஎச்.டி., படிக்க போயிட்டாரு பா...

“இதனால, அவர் பார்க்க வேண்டிய பைல்களை எல்லாம், இன்னொரு பிரிவு துணை இயக்குநரை பார்க்கும்படி கூடுதல் பொறுப்பா குடுத்துட்டாங்க... அவரும், அவருக்கு கீழ் இருக்கிற அதிகாரியும் ராத்திரி 9:00 மணி வரை வேலை பார்த்தும், மரைன் பிரிவு பைல்கள் மலை போல தேங்கிட்டே போகுது பா...

“இவங்களால, இங்க பணிபுரியும் ஊழியர்களும், ராத்திரி வரைக்கும் வேலை பார்க்க வேண்டியிருக்குது... இதனால, 'எங்க துறைக்கு புதுசா வந்திருக்கிற இயக்குநர், காலியிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுத்தா நல்லாயிருக்கும்'னு ஊழியர்கள் புலம்புறாங்க பா...” என்றார் அன்வர்பாய்.

“வேலைக்கு பணம் தராம இழுத்தடிக்காவ வே...” என கடைசி தகவலுக்கு மாறினார் பெரியசாமி அண்ணாச்சி.

“எந்த துறையிலங்க...” என கேட்டார் அந்தோணிசாமி.

“திருவள்ளூர் மாவட்டத்துல இருக்கிற பிரபல முருகன் கோவில்ல, பக்தர்கள் இலவசமா மொட்டை அடிச்சுக்கலாம்... இதுக்காக, கோவில் நிர்வாகம் சார்பில், முடி திருத்தும் கலைஞர்கள் 33 பேரை நியமிச்சிருக்காவ வே...

“இவங்களுக்கு, ஒரு பக்தருக்கு மொட்டை அடிக்க 25 ரூபாய் பங்களிப்பு தொகையும், மாசத்துக்கு 5,000 ரூபாய் ஊக்கத்தொகையும் தருவாவ... ஆனா, கடந்த ஒன்றரை வருஷமா பங்களிப்பு தொகையும், மூணு மாசங்களா ஊக்கத் தொகையும் தராம இழுத்தடிக்காவ...

“கோவில் பெண் அதிகாரியிடம் போய் முறையிட்டும் பலன் இல்ல... இதனால, 'ஏழைகளான நாங்க, இந்த வருமானத்தை நம்பிதான் குடும்பம் நடத்துதோம்... நாங்க செஞ்ச வேலைக்கு பணம் தராம இழுத்தடிக்கிறது நியாயமா'ன்னு முடி திருத்தும் கலைஞர்கள் புலம்பிட்டு இருக்காவ வே...” என முடித்தார் பெரியசாமி அண்ணாச்சி.

ஒலித்த மொபைல் போனை எடுத்த குப்பண்ணா, “சொல்லுங்கோ ரமணி மேடம்... திருத்தணியில் எல்லாரும் நன்னாயிருக்கால்லியோ...” என பேசியபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us