PUBLISHED ON : ஏப் 30, 2026 12:00 AM

ஸ் மார்ட் போன்கள், காற்றாலைகள் முதல் ஏவுகணைகள் வரை நவீன உலகின் இயக்கத்திற்கு ‘அரிய புவித் தனிமங்கள்’ மிக அவசியம். ஆனால், இவற்றை நிலத்திலிருந்து தோண்டி எடுப்பது சுற்றுச்சூழலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதற்குத் தீர்வாக, தாவரங்களின் இலைகளும் தண்டுகளும் தங்களுக்குள் சேமித்து வைக்கும் உலோகங்களை அளவிட்டு, அவற்றைப் பயன்படுத்தும் புதிய முறையை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
இதற்கு ‘புளோரசன்ஸ் ஸ்பெக்ட்ரோஸ்கோபி’ எனும் தொழில்நுட்பம் பயன்படுகிறது. தாவரங்கள் ஒளியை பெற்றுக்கொண்டு மீண்டும் உமிழும்போது ஏற்படும் அந்த ஒளிர்வை ஆராய்வதன் வாயிலாக, செடியை அழிக்காமலேயே ‘டிஸ்ப்ரோசியம்’ போன்ற உலோகங்களின் அளவைக் கண்டறியலாம். இதனால், எந்த வகைச் செடிகள் அதிக உலோகங்களை சேர்க்கின்றன என்பதையும், அவற்றை எப்போது அறு வடை செய்யலாம் என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.
சுரங்கத்தை சுற்றிலும் கழிவுகள் மற்றும் மாசுபட்ட நிலங்கள் உருவானதும் சுரங்கப் பணிகள் நிறுத்தப்படுவதும் வழக்கம். ஆனால், அத்தகைய மாசுபட்ட மண்ணிலிருந்து கூட சில தாவரங்கள் வேர்விட்டு, அரிய தனிமங்களைப் பொறுமையாக உறிஞ்சிச் சேகரிக்கின்றன. சுரங்கத்தினர் கழிவுகளாகக் கருதி எறிந்தவற்றை இயற்கை மீண்டும் ஒரு பொக்கிஷமாக மீட்டெடுக்கிறது.
நவீன மின்னணுக் கருவிகளுக்குத் தேவையான உலோகங்களை நமக்குத் தருவதில், பெரிய சுரங்கங்களுக்கு முழுமையான மாற்றாக இத்தகைய தாவரங்கள் இருக்க முடியாது.
எனினும், உலகநாடுகள் அரிய புவித் தனிமங்களின் தட்டுப்பாட்டால் தவிக்கும் வேளையில், ‘பைட்டோமைனிங்’ (Phytomining) எனப்படும் இந்த தாவரச் சுரங்க முறை ஒரு துாய்மையான உற்பத்தி முறைக்கு வழிகாட்டுகிறது .
