Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வேழமலைக்கோட்டை!

வேழமலைக்கோட்டை!

வேழமலைக்கோட்டை!

வேழமலைக்கோட்டை!

PUBLISHED ON : ஏப் 06, 2024


Google News
Latest Tamil News
முன்கதை: வேழமலை நாட்டில் முடிசூட்டு விழா நடக்க இருந்த நிலையில் இளவரசன் மாயமானதாக தகவல் வந்தது. நாட்டின் எல்லையில் எதிரி நடமாட்டம் அதிகமாகியது. இது பற்றி மன்னரிடம் தெரிவித்தனர். எதிரியை முறியடிக்க தயாராயினர் வீரர்கள். இனி -

சூரியன் உதயமாவதற்கு இன்னும், மூன்று மணி நேரம் இருந்தது.

கோட்டை வாயில் அருகே குதிரை வீரர்கள், மூன்று குழுக்களாக அணிவகுத்து நின்றனர். கூடவே, காலாட்படையில் ஒரு அணியும் இருந்தது.

மொத்தம், 40 வீரர்களும், அவர்களுக்கு, நான்கு குழு தலைவர்கள் இருந்தனர். எல்லாரையும் ஒருங்கிணைக்கும் தலைவனாக மகேந்திரன் இருந்தான்.

நீண்ட நேரம் தேடலில் ஈடுபட வேண்டும் என்பதற்கு வசதியாக, பசியாற்றும் அவித்த கிழங்கு, வேக வைத்த பயறு, கடலை போன்ற தானியங்கள் உடைய உணவு பையையும், குடிநீர் குப்பியையும், ஒவ்வொரு வீரரும் வைத்திருந்தனர்.

அணிவகுப்பை பார்வையிட்டு தலையை அசைத்த தளபதி, சிறிது நேர மவுனத்திற்குப் பின், 'எதிரிகள் இருக்கும் இடத்தை கண்டறிய மோப்ப நாய்களையும் பயன்படுத்தலாமே...' என்றார் மகேந்திரனிடம்.

'அப்படியே ஆகட்டும் தளபதி...'

சிறிது நேரத்தில், ஒன்பது மோப்ப நாய்களும், அவற்றின் பயிற்சியாளர்களும் வந்தனர்.

'நம் நாட்டின் பாதுகாப்பு உங்கள் கைகளில் இருக்கிறது. நம் எல்லைக்குள் ஊடுருவி இருக்கும் எதிரி நாட்டினரை சிறைபிடித்து இழுத்து வாருங்கள். இல்லையேல் அவர்கள் தலையை வெட்டி எறியுங்கள்...'

வீர ஆவேசமாக பேசினார் தளபதி.

'வெற்றிவேல்... வீரவேல்...'

கோஷமிட்டனர் வீரர்கள்.

'வெற்றியோடு வாருங்கள்...'

வாளை வானத்தை நோக்கி கைகளை உயர்த்தி, அவர்களை வழியனுப்பினார் தளபதி.

குதிரைப்படை நடை போட, காலாட்படை அணியும் பின் தொடர்ந்தது.

வீரர்கள் காட்டுப்பகுதிக்கு வந்தபோது இருள் கலைந்து வெளிச்சம் எட்டி பார்த்தது.

குதிரையை மெல்ல நகர்த்தி, அந்த சிறு படையின் எதிரே நிறுத்தினான் மகேந்திரன்.

'எதிரிகள் எவ்வளவு பேர் இருக்கின்றனர். என்னென்ன ஆயுதங்கள் வைத்திருக்கின்றனர் என்பது நமக்கு தெரியாது. எனவே, எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். எவரும் தனியாக செல்ல வேண்டாம். அணி அணியாகவே செல்லுங்கள்...'

கட்டளையை ஏற்பதற்கு அடையாளமாக சத்தம் எழுப்பாமல் கைகளை மட்டும் உயர்த்தி எல்லா வீரர்களும் சமிக்ஞை செய்தனர்.

'அணிகள் மூன்றாம் பிறை வடிவில் அணிவகுத்து செல்லட்டும்... எதிரிகள் இருக்கும் இடம் தென்பட்டால் தீ மூட்டி புகை எழுப்புங்கள். புகையை அடையாளம் வைத்து மற்றவர்களும் அங்கே ஒருங்கிணையலாம்...'

திட்டத்தை விவரித்த மகேந்திரன், குதிரைப்படையின் இரண்டாவது அணியுடன் இணைந்தான்.

தேடல் ஆரம்பமானது.

ஒவ்வொரு குதிரைப்படைக்கும், மூன்று மோப்ப நாய்கள் என்ற வீதத்தில் முன் சென்றன.

எதிரிகள் எச்சரிக்கை அடைந்து விடாத வகையில், குரைக்காமல், தரையில் மோப்பம் பிடிக்க அவற்றுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டிருந்தது. அவை, மோப்பம் பிடித்தபடி ஓசையின்றி நகர்ந்து கொண்டிருந்தன.

இரண்டாம் அணி குதிரைப்படை வீரர்களின் முன் சென்று கொண்டிருந்த மோப்ப நாய்கள் ஓரிடத்தில் நின்றன. பின் காற்றை வேக வேகமாக உள்ளிழுத்து வெளியிட்டன.

'இவை எதையோ கண்டறிந்து விட்டன...'

'அவற்றை முன் செல்ல அனுமதியுங்கள்...'

கட்டு சங்கிலியை பயிற்சியாளர்கள் லேசாக உதற, மோப்ப நாய்கள் தரையை முகர்ந்தபடி ஓட ஆரம்பித்தன. ஓட்டம் வேகம் எடுத்தது.

அதற்கு ஈடு கொடுத்து ஓட முடியாத பயிற்சியாளர்கள் கட்டியிருந்த சங்கிலியை வலுவாக இழுத்துப் பிடித்தனர்.

அந்த பிடியையும் தாண்டி மோப்ப நாய்கள் பாய்ந்தன.

சில நொடிகளிலேயே, நாய்களின் வலுவுக்கு ஈடு கொடுக்க முடியாமல், அவர்கள் திணறினர். கையிலிருந்த கட்டுச்சங்கிலி நழுவியது.

பிடியிலிருந்து விடுபட்ட மோப்ப நாய்கள், குதிரையை விட வேகமாக காட்டுக்குள் பாய்ந்தன.

'பின் தொடருங்கள்...' என்றான் மகேந்திரன்.

நாய்கள் ஓடிய திசையில் வீரர்கள் குதிரையை செலுத்தினர். மரங்கள் குறைவாகவும், புதர்கள் அதிகமாகவும் இருந்த பகுதிக்கு வந்த போது, அவர்கள் கண்ணுக்கு மோப்ப நாய்கள் தென்படவில்லை.

'நாம் சரியான திசையில் தான் வந்தோமா... அல்லது வழி மாறி வந்து விட்டோமா...' என்றான் மகேந்திரன்.

'இல்லை தலைவரே... நாம் சரியான திசையில் தான் வந்திருக்கிறோம்...'

'அப்படியானால் மோப்ப நாய்கள் எங்கே போயின...'

'சீழ்க்கை ஒலி எழுப்பி அவற்றை மீண்டும் வர வைத்து விடலாம்...'

மோப்ப நாய்களை திரும்ப வரவழைக்க சீழ்க்கை ஒலி எழுப்பினர் பயிற்சியாளர்கள்.

விசில் சத்தம் கேட்டதும், பயிற்சியாளர்களிடம் ஓடி வரும் வகையில் பயிற்சி கொடுக்கப்பட்டிருந்த மோப்ப நாய்கள் திரும்பி வரவில்லை.

மீண்டும் முயற்சித்தனர்.

அவை திரும்பி வராவிட்டாலும், இருக்கும் இடத்திலே குரைப்பொலி எழுப்பும். அவற்றின் குரைப்பொலி சத்தமும் கேட்கவில்லை.

இதனால், அவர்களுக்குள் பதற்றம் ஏற்பட்டது.

'வந்திருக்கும் வீரர்கள் வேட்டை நுணுக்கம் தெரிந்தவர்களாக இருக்கின்றனர் என்று நினைக்கிறேன். நாய்களை ஏதோ செய்து விட்டனர் போல...' என்றான் அணித்தலைவன்.

'என்ன சொல்கிறீர்...'

பதறினர் மோப்பநாய் பயிற்சியாளர்கள்.

'மோப்பநாய்களை விஷம் தடவிய அம்பு அல்லது ஈட்டியை வைத்து தாக்கி இருப்பர் என்று நினைக்கிறேன்...'

'அப்படியானால்...'

'ஒன்று, அவை செயலிழந்து இருக்கும்; அல்லது சொல்வதற்கே வருத்தமாக இருக்கிறது. அவை இறந்திருக்கலாம்...'

'இறைவா...'

அதிர்ச்சியோடும், வேதனையோடும் அலறினர் பயிற்சியாளர்கள்.

'எதிரிகள் நாம் நினைத்ததை விட, பலம் மிக்கவர்கள் என்பது தெரிகிறது. எனவே, மிகவும் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்...' என்றான் மகேந்திரன்.

காட்டில், பறவைகளின் சத்தம் பெரிதாக கேட்டது.

காலாட் படையினர் வேறொரு புறமாக நகர்ந்து சென்றனர்.

குதிரை வீரர்கள் சுற்றும் முற்றும் கண்காணித்தபடி மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு முன்னேறி சென்று கொண்டிருந்தனர். வழியில், ஏதாவது தடயங்கள் தெரிகின்றனவா என்பதையும் கவனித்து சென்றனர்.

சற்று நேரத்துக்கு பின், அணித்தலைவன் கையில் இருந்த ஈட்டியை உயர்த்தினான். அந்த சமிக்ஞையை கண்டதும் மற்றவர்கள் அப்படியே நின்றனர்.

- தொடரும்...ஜே.டி.ஆர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us