PUBLISHED ON : மே 02, 2026

திருப்பூர் மாவட்டம், கே.செட்டிபாளையம்,
விவேகானந்தா வித்யாலயா பள்ளியில், 2002ல், 2ம் வகுப்பு படித்தேன். எங்கள்
பள்ளியில், வழக்கமான வகுப்புகளுக்கு பின், இசையை பயிற்றுவிக்க, சிறப்பு
ஆசிரியை ஜெயலட்சுமி நியமிக்கப்பட்டிருந்தார். மாணவர்கள் அனைவரிடமும்
அன்பும், அக்கறையோடும் பழகினார். அவர் இளம் வயது என்பதால், அவரை, 'அக்கா'
என்றே அழைத்தோம்.
அன்று வழக்கமான வகுப்புகளில், பாடவேளையில்
செய்யாத தப்புக்கு நான் தண்டனை வாங்கியிருந்தேன். அந்த சோகத்துடன், இசை
வகுப்பில் அமர்ந்திருந்தேன். என் முக வாட்டத்தை பார்த்தே, என் சோகத்தை இசை
ஆசிரியை அக்கா புரிந்து கொண்டார்.
அப்போது, திருப்பாவை, 25ம்
பாசுரத்தில், 'ஒருத்தி மகனாய் பிறந்து' எனத் துவங்கும் பாடலை விளக்கி,
இசையோடு எங்களை பாட வைத்தார். அந்த பாடல் தெய்வீகத்துடன், என்னை வெகுவாக
ஆட்கொண்டது. இணைந்து பாடப்பாட, என் வருத்தம் காணாமல் போனது. இறுதியாக,
'ரெம்பாவாய்' என பாடி முடிக்க, என் மனதில் மகிழ்ச்சியும், மு கத்தில்
புன்னகையும் மலர்ந்தது.
தற்போது என் வயது, 31. மயக்கவியல்
மருத்துவராக பணியாற்றுகிறேன். என் நோயாளிகளிடம், அவர்களின் வேதனையை
தீர்க்கும் வகையில், இசை ஆசிரியை அக்காவைப் போலவே, அன்புடன், இன்சொல் பேசி
பழகுகிறேன்.
இசை ஆசிரியை ஜெயலட்சுமி, தொடர்ந்து மாணவர்களுக்கு
நீதி நெறி கதைகளையும், பண்ணிசை பாடல்கள் மூலம் தேசியம் மற்றும்
தெய்வீகத்தையும் போதித்து வருகிறார். இப்போதும், மார்கழி மாதம்,
திருப்பாவை படிக்கும் போதெல்லாம், கடவுளுக்கு அடுத்தபடியாக இசை ஆசிரியையை
நினைத்துக் கொள்கிறேன்.
- பிரபா பார்வதி, சென்னை.
தொடர்புக்கு: 97913 27023
