Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ்! (304)

இளஸ் மனஸ்! (304)

இளஸ் மனஸ்! (304)

இளஸ் மனஸ்! (304)

PUBLISHED ON : மே 31, 2025


Google News
Latest Tamil News
அன்புள்ள பிளாரன்ஸ்...

என் வயது 35; இல்லத்தரசியாக இருக்கிறேன். என் மகனுக்கு, 5 வயதாகிறது. பிரபல பள்ளியில் எல்.கே.ஜி., படிக்கிறான். அவனிடம் எதை கொடுத்தாலும், அருகில் இருக்கும் அக்கா, அண்ணனுடன் பகிர்ந்து கொள்ள மாட்டான். கடைசியில் கையில் உள்ளதை தானும் தின்னாமல் உதிர்த்து விடுவான். அல்லது துாக்கி எறிந்து விடுவான்.

கையில் வைத்திருப்பதை பறித்தால், தரையில் உருண்டு, புரண்டு கதறி அழுவான். தெருவிலும், பள்ளியிலும் இதே மாதிரிதான் நடந்து கொள்கிறான். அவனை எப்படி திருத்துவது... நல்ல வழி காட்டுங்கள்.

இப்படிக்கு,

எஸ்.கிரகலட்சுமி ஜெகதீசன்.



அன்பு சகோதரிக்கு...

கல்கோனா என்ற இனிப்பை காக்காய்கடி கடித்து நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டது ஒரு காலத்தில் நடந்தது.

சிறுமியாக இருந்தபோது வெளியூர் சென்று திரும்பும் என் தந்தை வாங்கி வரும் பலகாரத்தை, அம்மா மற்றும் தம்பி, தங்கையருக்கு சமபங்காய் பிரித்துக் கொடுப்பார். உண்ணும் நேரத்தில், குடும்பத்தில் எல்லாரும் சாப்பிட்டார்களா என, விசாரித்து தெரிந்து கொள்வார்.

சமயங்களில் உணவு பாத்திரங்களை திறந்து பார்ப்பார் என் தந்தை. ருசியான பண்டத்தை எங்களுக்கு ஒவ்வொரு வாய் ஊட்டிவிடுவார். இந்த நடைமுறையால், 'ஷேரிங்' என்ற நல்ல பழக்கம் வளர்ந்தது. அதாவது, உணவு, விளையாட்டு சாமான்கள், ஹோம்வொர்க் நோட்டு, கூடுதல் பேனாக்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நல்ல பழக்கம் தொற்றிக் கொண்டது.

பள்ளி செல்லும் மகன், மகளிடம், 'யாரிடமும் கொடுக்காம ஒளிச்சு வச்சு சாப்பிடு...' என கெட்ட எண்ணம் விதைக்கும் பெண்களை பார்த்திருக்கிறேன். அண்டை வீட்டாரோ, உறவினர், நண்பர்களோ வந்தால் உணவு பொருட்களை மறைத்து வைப்போரையும் அறிவேன். சிறப்பு உணவு சமைக்கும் போது, வாசனை பக்கத்து வீட்டுக்கு போய் விடக் கூடாது என ஜன்னலை மூடி வைக்கும் குடும்ப தலைவியரையும் அறிவேன்.

வீட்டில் பிரியாணி சமைத்து சாப்பிட்டிருப்பர். பக்கத்து வீட்டில் வசிப்போர், 'உங்க வீட்ல இன்னைக்கி என்ன குழம்பு...' என்று கேட்டால், 'ரசம் சோறு' என்று கூசாமல் கூறுவேரையும் அறிவேன்.

இது போன்றோரால் தான், எந்த பொருளையும் யாருடனும் பகிர்ந்து கொள்ள மறுக்கின்றனர் சில குழந்தைகள். இதற்கு முழு முதல் காரணம் பெற்றோரின் துர்நடத்தை தான். பகிரும் குணத்தால், குழந்தைகளுக்கு அழகிய முன்மாதிரியாக பெற்றோர் திகழவேண்டும்-; அறிவுரை சொல்வதால் இதை வளர்க்க இயலாது.

உன் மகனுக்கு பகிர்ந்து உண்ணும் பழக்கம், கூடி விளையாடும் குணங்கள் வர சில உபாயங்களை மேற்கொள்ளலாம்.

* உன் நடத்தையால் மகன், மகளை பகிர்தல் பழக்கம் நோக்கி நகர்த்த முடியும்

* சமவயதுள்ள குழந்தைகளுடன் கூட்டாய் விளையாட அனுமதிப்பது சிறப்பு தரும்

* கிரிக்கெட், கால்பந்து போன்றவற்றை பகிர்வு இல்லாமல் விளையாட முடியாது

* நன்னெறி சார்ந்த கதைகளை குழந்தைகளுக்கு சொல்லலாம்

* வீட்டில் அனைவரும் சேர்ந்து உண்ணும் பழக்கத்தை கொண்டு வரலாம்

* பள்ளி உணவு இடைவேளையில் சக மாணவர்களுடன் சேர்ந்து உண்பதை உறுதி செய்ய வேண்டும்.

இது போன்ற செயல்பாடுகள் பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை ஊக்குவிக்கும். பகிர்வின் போது ஏற்படும் சந்தோஷங்களை குழந்தைகளுக்கு பரிசளிப்பது மேலும் உற்சாகத்தை ஊட்டும். பொறுப்புகளை வயதுக்கேற்றவாறு பகிர்ந்தளிக்க வேண்டும்.

பகிர்ந்துண்ணும் குழந்தைகளை மனம் திறந்து, வாய் விட்டு பாராட்டவேண்டும். குழந்தைகளின் பிரச்னைகளில் முந்திரிக்கொட்டை தனமாய் தலையிட வேண்டாம். அவர்களே தீர்த்துக்கொள்ளட்டும்.

ஒரே நாளில் உன் மகன் அன்னதானம் பண்ணும் மகா பிரவுவாய் மாறி விடுவான் என கனவு காணாதே...

மாற்றங்கள் மெதுவாகதான் நடக்கும்.

பிறர் துன்பம், பசியை புரிந்து கொள்ளும் மனோபாவம், உணவை, உடைமையை பகிர்ந்து கொள்ளும் நேர்மறை எண்ணத்தை பரிசளிக்கும்.

- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us