PUBLISHED ON : ஜூன் 27, 2026

அன்புள்ள ஆன்ட்டி,
பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் நான். எங்கள் ஊர், கிராமமும், நகரமும் அற்ற இரண்டும் கெட்டான். எங்கள் வகுப்பு மாணவர்கள் நான்கு பேருடன் ஒன்றாகச் சேர்ந்து, சைக்கிளில் வயல் வெளிகளை கடந்து செல்வோம். கூட்ரோடு என்ற இடத்தில் சைக்கிளை ஒரு கடை வாசலில் நிறுத்தி பூட்டி வைப்போம். பின், பஸ் பிடித்து பள்ளிக்கு செல்வோம்.
மாலை அது போல் கூட்ரோடில் இறங்கி, சைக்கிளை எடுத்துக் கொண்டு வீடு திரும்புவோம்.
இவ்வாறு உடன் வந்து கொண்டிருந்த சிலர், பள்ளியிலிருந்து திரும்பும் போது, மதுக்கடையில் பாட்டில் வாங்கி புத்தகப் பையில் மறைத்து எடுத்து வருகின்றனர். சைக்கிளில் ஊர் திரும்பும் போது, வயல்வெளியில் சைக்கிளை நிறுத்தி, வாங்கி வந்த மது பாட்டிலை தண்ணீர் கலந்து குடிக்கின்றனர். இதை வாடிக்கையாக செய்கின்றனர்.
குடிக்க சொல்லி என்னையும் வற்புறுத்துகின்றனர். நான் பிடிவாதமாக, 'முடியாது...' என மறுத்ததோடு, 'தலைமை ஆசிரியரிடம் புகார் சொல்லப் போகிறேன்...' என்றேன். அந்த நான்கு பேரும் சேர்ந்து என்னை அடித்து மிதித்து, துவைத்தெடுத்து விட்டனர். வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக பயமுறுத்துகின்றனர். எனக்கு அவர்களிடம் பயமும் இருக்கிறது; ஆனால், இப்படி கெட்டுப் போவதைக் கண்டு கவலையும் எழுகிறது. இந்த நிலைமையில் நான் என்ன செய்வது, ஆன்ட்டி.
- இப்படிக்கு,
எம்.பார்த்திபன்.
அன்பு பார்த்திபன்...
உன்னுடைய அக்கறையை பாராட்டுகிறேன். உடன் படிக்கும் நண்பர்கள், 'இந்த சிறு வயதில் கெட்டு போகின்றனரே...' என்று, உன் மனம் அடித்துக் கொள்வதும் புரிகிறது. ஆனால், பார்த்திபன்... இது நீயோ அல்லது நானோ தடுக்க கூடிய விஷயமல்ல; நம்மால் ஆனது வருத்தம், வேதனைப்படுவது மட்டுமே...
அவர்களது பெற்றோருக்கு தெரியப்படுத்தினால் கட்டுப்படுத்த முடியும். பள்ளி தலைமையாசிரியர் அழைத்து தீவிரமாகக் கண்டிப்பாக சொன்னால் தடுக்க முடியும். அவருக்கும் அடங்காது போனால், 'டிசி' கொடுத்து வெளியேற்றி விடுவேன் என, பயமுறுத்தல் உதவலாம்.
முக்கியமாய், பாட்டில் வாங்க இவர்களுக்கு பணம் எங்கிருந்து கிடைக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். இப்படிப்பட்டோர், வீட்டில் அம்மாவிடமிருந்தோ, அப்பாவின் சட்டைப் பையிலிருந்தோ அவர்களுக்குத் தெரியாமல் பணம் எடுப்போராகத் தான் இருப்பர். இவர்கள் முழு குடிகாரர்களாக மாறுவதற்கு முன்பே தடுத்தாக வேண்டும்.
மேற்கூறிய அனைத்தும் நம்மாலான முயற்சி. ஆனால், இந்த ஒட்டு மொத்த இளைய சமுதாயமும் மேம்பட வேண்டுமானால், போதைப் பொருட்களும், மதுவும் ஒழிக்கப்பட வேண்டும்.
இதைச் செய்வது அரசின் தலையாய கடமை. மெத்தனமாக இருந்தால், சாதாரண குடிமக்களாகிய நாம் என்ன செய்ய முடியும்... உன்னைப் போன்றும், என்னைப் போன்றும் வருத்தமும், வேதனையும் படுவதை தவிர!
- இப்படிக்கு, இந்துமதி.
