தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நாடோடியின் சாகசங்கள்! (10)

நாடோடியின் சாகசங்கள்! (10)

நாடோடியின் சாகசங்கள்! (10)


PUBLISHED ON : ஏப் 25, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 25, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதை: ஊர், ஊராக செல்லும் நாடோடிக்கு, 'அழைக்கும் போதெல்லாம், ஒரு தேவதை தோன்றி உதவி செய்யும்' என்ற, வரம் கிடைத்தது. அணிந்தால் மறைய வைக்கும் ஒரு மாய மோதிரமும் கிடைத்தது. சிதிலமடைந்த மலைக்கோட்டையில் சிறை வைக்கப்பட்டு இருந்த மரகத நாட்டு மன்னருக்கு மாயமோதிரத்தை கொடுத்து, அங்கிருந்து விடுவித்தான். பின், மாயமோதிரத்தை மன்னர் திருப்பி அளித்தார். அது உண்மையான மோதிரம் தானா என, நாடோடி சோதித்தான். இனி -

தன் இடுப்பில் செருகி வைத்திருந்த மாயமோதிரத்தை எடுத்து அணிந்தான். அந்த வழியாக வந்த ஒருவனை அழைத்தான்.

'ஐயா, இது எந்த நாட்டின் எல்லைன்னு சொல்ல முடியுமா...'

'இது, சந்திரகிரி நாட்டின் எல்லை. இன்னும் கொஞ்சம் நடந்து போனீங்கன்னா, சந்திரகிரியை அடைஞ்சிடலாம்...' என்றான், வழிப்போக்கன்.

'மிக்க நன்றி...' என்றான், நாடோடி.

மாய மோதிரத்தை அணிந்தும், வழிப்போக்கன் கண்களுக்கு நாடோடி தென்பட்டான்.

எனவே, இது மன்னரிடம் கொடுத்த மாயமோதிரம் இல்லை; அதே போன்ற ஒரு மோதிரத்தை கொடுத்து, மன்னர் தன்னை ஏமாற்றி விட்டதாக முடிவுக்கு வந்தான், நாடோடி.

'சே... என்ன ஒரு அநியாயம். உயிரைக் காப்பாற்றிய எனக்கே துரோகம் செய்ய மன்னருக்கு எப்படி மனம் வந்தது...' என்று நினைத்த போது, நாடோடிக்கு கோபம் வந்தது.

என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள விரும்பினான். தேவதையிடம் கேட்டால், தெரிந்து விடும்.

'தேவதையே, வா...' என்று அழைத்தான், நாடோடி.

அவன் முன் தேவதை தோன்றியது.

'என் மாயமோதிரம், எப்படி மாயமாயிற்று...' என்று தேவதையிடம் கேட்டான்.

நடந்ததை நாடோடியின் கண்முன் காட்சியாக்கியது, தேவதை...

மலைக்கோட்டையில் தப்பி, அரண்மனைக்கு திரும்பிய மன்னர், அந்த மோதிரத்தைத் தானே வைத்துக் கொள்ள விரும்பினார். அது என்றென்றும் தன்னை காக்கும் என்றும் நம்பினார்.

நாடோடியிடம் கேட்டு, மோதிரத்தை தாமே வைத்துக் கொள்ளலாம் என்று தான், முதலில் மன்னர் நினைத்தார். 'ஒருவேளை நாடோடி மறுத்துவிட்டால், என்ன செய்வது' என்ற எண்ணமும் தோன்றியது.

'அதே போன்ற மற்றொரு மோதிரத்தை கொடுத்து விட்டால் போதுமே' என்று நினைத்தார்.

உடனடியாக அரண்மனை பொற்கொல்லரை வரவழைத்தார். மாயமோதிரத்தைக் காண்பித்து, உடனடியாக அதை பிரதி எடுத்தாற் போல, ஒரு மோதிரத்தைச் செய்து வரும்படி உத்தரவிட்டார்.

அந்த பொற்கொல்லர் செய்து தந்த மோதிரத்தை மகாராணியிடம் கொடுத்து வைத்தார். மாயமோதிரத்தை தன்னிடமே பத்திரப்படுத்திக் கொண்டார்.

மாயமோதிரத்தை நாடோடி கேட்ட போது, மகாராணியிடம் இருந்த போலி மோதிரத்தை வாங்கி, அதையே ஒப்படைத்துள்ளார்.

மாயமோதிரத்தை வஞ்சகமாக ஏமாற்றி மன்னர் அபகரித்துக் கொண்டதை அறிந்த நாடோடி, கடும் கோபமுற்றான்.

'தேவதையே, நீ எனக்கொரு உதவி செய்ய வேண்டும்...' என்றான்.

'அதற்கென்ன, கேள்... உடனே செய்கிறேன்...' என்றது, தேவதை.

தன்னிடம் இருந்த போலி மோதிரத்தை தேவதையிடம் கொடுத்தான், நாடோடி.

'இந்த போலி மோதிரத்தை மன்னரிடமே திரும்ப வைத்து விட்டு, என் மாயமோதிரத்தை மாற்றி எடுத்து வர வேண்டும்...' என, கேட்டான்.

நாடோடி சொன்னதை, நொடிப்பொழுதில் செய்து முடித்தது, தேவதை. மாய மோதிரம் மீண்டும் நாடோடியின் வசம் வந்தது.

மன்னர் ராஜசிம்மவர்மனிடம் பொற்கொல்லன் செய்து கொடுத்த போலி மோதிரம் இடம் மாறியது.

இதை அறியாமல் பாதுகாவலன் ஒருவனுடன், குதிரையில் நகர்வலம் புறப்பட்டார், மன்னர்.

மாயமோதிரம் அவருக்கு பெரும் தைரியத்தை அளித்திருந்தது. அதனால், உற்சாகத்தில் இருந்தார், மன்னர். அவர் உற்சாகமானால், வேட்டையாட செல்வது வழக்கம்.

நகர்வலத்தை முடித்து, அங்கிருந்து வேட்டையாட விரும்பி, காட்டுப் பகுதிக்குள் சென்றார். பாதுகாவலனும் மன்னரின் குதிரையை பின்தொடர்ந்தான்.

காட்டிற்குள் சென்றதுமே விலங்குகளை பார்த்தார். உடனே வில் எடுத்து, அம்பு பூட்டினார். சில மான்களையும், ஒரு காட்டெருமையையும் வேட்டையாடி வீழ்த்தினார்.

'எல்லாம் மாயமோதிரம் வந்த ராசி தான்' என்று, மேலும் மகிழ்ச்சியடைந்தார், மன்னர் ராஜசிம்மவர்மன். வேட்டையாடி முடித்து, ஒரு மரத்தின் அடியில் ஓய்வெடுத்தார். தாகமாக இருந்தது. அருகில் ஏதேனும் நீர்நிலை இருந்தால், அங்கிருந்து தண்ணீர் எடுத்து வரும்படி பாதுகாவலனுக்கு உத்தரவிட்டார். நீர்நிலையைத் தேடி, பாதுகாவலன் புறப்பட்டான்.

மன்னர் மட்டும் தனித்திருந்த அந்த சமயத்தில், எதிர்பாராத ஆபத்தை சந்தித்தார்.

எங்கிருந்தோ வந்த எதிரி வீரர்கள் நால்வர், மன்னரைச் சூழ்ந்தனர்.

'கோட்டைச் சிறையில் இருந்து எப்படியோ தப்பிவிட்டாய். இனி காலம் முழுவதும் உனக்கு சிறை தான்...' என்றான், அந்த நால்வரில் ஒருவன்.

அவன் எதிரி நாட்டின் தலைமை படைத்தளபதி.

ஆனால், மன்னர் ராஜசிம்மவர்மன் பயப்படவில்லை. அலட்சியமாக புன்னகைத்தார். தன் இடுப்பிலிருந்து மாயமோதிரத்தை எடுத்து, அணிந்தார்.

'மாயமாக மறைந்து விடுவோம். பகைவர்கள் அதிர்ச்சியடைவர்' என, எண்ணினார், மன்னர்.

அவர் எண்ணம் பொய்த்தது. அங்கிருந்து தப்பியோட முயற்சித்த மன்னரை, எதிரி வீரர்கள் முற்றுகையிட்டு விலங்கிட்டனர். மன்னர் அதிர்ச்சியடைந்தார்.

மன்னரை தாங்கள் வந்த குதிரையில் ஏற்றி, அங்கிருந்து புறப்பட்டனர், எதிரி வீரர்கள். அப்போது தான், தன்னிடம் இருப்பது நிஜமான மாயமோதிரம் இல்லை என்பது, மன்னருக்கு புரிந்தது.

'நாடோடியிடம் அபகரித்து வைத்திருந்த மாயமோதிரம் எங்கே போயிற்று...' மன்னர் யோசிக்கத் துவங்கினார். 'நன்றி மறந்ததால் வந்த வினை' என்று வருத்தமடைந்தார்.

இது எதுவும் அறியாமல், சந்திரகிரியின் எல்லைக்குள் நுழைந்தான், நாடோடி. மற்றொரு ஆபத்தைச் சந்திக்கப் போகிறோம் என்பது, அப்போது அவனுக்கு தெரியாது.



- தொடரும்...

- ஆர்.வி. பதி


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us