Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அரண்மனையை துறந்த அம்ருத் கவுர்!

அரண்மனையை துறந்த அம்ருத் கவுர்!

அரண்மனையை துறந்த அம்ருத் கவுர்!

அரண்மனையை துறந்த அம்ருத் கவுர்!

PUBLISHED ON : பிப் 17, 2024


Google News
Latest Tamil News
அரச குடும்பத்தில் பிறந்து, மக்கள் பணிக்காக சுகங்களை துறந்தவர் அம்ருத் கவுர். தற்போதைய பஞ்சாப் மாநிலத்தில், கபூர்தலா அரண்மனையில் பிறந்தார். தாயின் கண்டிப்பில் வளர்ந்தார். அரண்மனையிலே ஆரம்ப கல்வி கிடைத்தது. பின், ஐரோப்பிய நாடான இங்கிலாந்து, லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்தார். பிரெஞ்சு, இத்தாலிய மொழிகளில் புலமை பெற்றார்.

இளமை பருவத்தில்...

* உண்மையே பேச வேண்டும்

* எவருடனும் சண்டையிட கூடாது

* இனிமையாக பழக வேண்டும்

* சுயநல ஆசை கூடாது.

இவை எல்லாம் தாயின் அன்பு கட்டளை.

தேசப்பற்று என்ற விதையை சிறு வயதிலே விதைத்திருந்தார் தந்தை. அது மரமாகி, அரச குடும்ப வாழ்வை துறக்க செய்தது. மண வாழ்வு வேண்டாம் என விலக வைத்தது. பகட்டு வாழ்வை துச்சமென கருதி துாக்கி எறிய வைத்தது. காந்திஜி ஆசிரமத்தில் இணைந்து பணியாற்ற வைத்தது.

பஞ்சாபில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்த போது, மக்களை அமைதிப்படுத்த காந்திஜி பல பகுதிகளிலும் உரைகள் நிகழ்த்தி வந்தார். ஒரு பொதுக்கூட்டத்தில் பேசி முடித்ததும் மக்கள் கலைந்தனர். இருக்கையை விட்டு எழுந்தார் காந்திஜி. அப்போது அவர் கால்களில் விழுந்தார் அம்ருத். தேச சேவையில் ஈடுபட விரும்புவதாக கூறினார்.

பட்டும், பகட்டுமாக இருந்தவரிடம், 'தேச சேவையை விளையாட்டாக நினைத்தாயா... ஒருவேளை கூட உண்ண உணவில்லாது, உடுத்த துணியில்லாது தவிக்கின்றனர் மக்கள். இதை அறிந்திருந்தால் பகட்டாக வந்திருக்க மாட்டாய். முதலில் உன்னை எளிமைப்படுத்த முயற்சி செய். அதற்கான திட மனது இருக்கிறதா என பார். பின், சேவையை பற்றி யோசிக்கலாம்...' என்றார் காந்திஜி.

அம்ருத் அந்த மன நிலையை பெற சில நாட்களாயின. அவரது தேசப்பற்று விசுவரூபம் எடுத்தது. காந்திஜியின் ஆசிரமத்தில் சேர்ந்தார். அவரது உதவியாளராக சேவை செய்தார். கையால் நுாற்று நெய்த ஆடைகளை உடுத்தினார். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். பால்ய விவாகம், விதவைகளுக்கு ஏற்பட்ட அநீதிகளை துணிந்து எதிர்த்தார். பெண் கல்விக்காக முழு மூச்சுடன் பாடுபட்டார்.

அகில இந்திய மகளிர் முன்னேற்ற சங்க தலைவியாகி, செய்த பணிகள் ஏராளம். பள்ளி, கல்லுாரிகளில் மனை இயல் கற்பிக்க முனைந்தார். இந்திய கல்வித்துறை ஆலோசனைக் குழுவின் முதல் பெண் உறுப்பினரானார். விடுதலை பெற்ற இந்தியாவில், சுகாதார அமைச்சராக பொறுப்பேற்றார். இப்பணியில் மக்கள் நலனுக்கு ஆற்றிய சேவை மகத்தானது.

குறிப்பாக, பெண்கள், குழந்தைகள் உடல் நலத்திற்காக பல வசதிகளை ஏற்படுத்தினார். டில்லியில், 'எய்ம்ஸ்' என்ற அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தை உருவாக்கினார். அம்ருத் கவுரின் பெயர், வரலாற்றில் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us