Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/தீபாராதனா! (31)

தீபாராதனா! (31)

தீபாராதனா! (31)

2


PUBLISHED ON : மே 03, 2026

Follow on Google

PUBLISHED ON : மே 03, 2026

2


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திலகனை சற்று நேரம் உறுத்துப் பார்த்தாள், நிமிஷாவின் அம்மா.

''எங்களை எவ்வளவு மலிவா எடை போட்டுட்டே? உன் வேலையெல்லாம் யாரும் தொடல. ஆனா, நிமிஷா தோள்ல ஏறி, ஜம்ப் பண்ணி, ஜம்ப் பண்ணி மேல வர முடியாது. நார்மல் ரூட்ல உழைச்சு மேல வா.''

திலகன் அப்படியே பிரமித்து நின்றிருக்க, அவள் சட்டென்று திரும்பி அறைக்குள் போய் விட்டாள்.

சற்று நேரம் தயங்கி, நடுங்கும் விரல்களால் தலையைக் கோதிக்கொண்டே, மெல்ல, 'லிப்ட்' நோக்கி நகர்ந்தான், திலகன்.

அ ந்த அரசுடைமை வங்கியின் வாசலில் கார் வந்து நின்றது. கார்க்கதவு திறந்து, கீர்த்திலால் இறங்கும்போதே, மேலாளர் வெளியில் வந்து விட்டார்.

''பேப்பர்ஸ்லாம் ரெடியா இருக்கு, சார்,'' என்று முகம் மலர்ந்து சொன்னார்.

காரின் இன்னொரு கதவு திறந்து, ஆராதனா இறங்கினாள். ''வாங்கம்மா,'' என்று அவளையும் வரவேற்றார், மேலாளர். அவருடைய அறையில் மேஜை மீது சிறு எழுத்தில் அச்சடித்த கற்றைக் காகிதங்கள் தயாராக இருந்தன.

''ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, நானே உங்க ஆபீஸ்க்கு கொண்டு வந்திருப்பேன், சார்.''

''தெரியும். ஆனா, இந்தப் பொண்ணு தான் வேணாம்ன்னு மறுத்திட்டா,'' என்று சிரித்தபடி சொன்னார், கீர்த்திலால்.

''மேனேஜர் சார், எனக்கு இவர் செய்யற உதவி வெளில யாருக்குமே தெரியாம போயிடக்கூடாதுன்னு நெனச்சேன். இந்தக் கடனை எனக்காகத் தான் இவர் வாங்கித் தர்றாருன்னு சாட்சி வெச்சுக்கணும்ன்னு தோணிச்சு. அதனால, பேங்க்குக்குப் போய் தான் நான் கையெழுத்து போடுவேன்னு அடம் பிடிச்சேன். எனக்காக இவரும் வந்திருக்காரு,'' என்றாள், ஆராதனா நன்றி கலந்த குரலில்.

''அதுக்காக நான் தேங்க்ஸ் சொல்லணும்மா. சார், எங்க பேங்க் படியேறினதுல எனக்குத்தான் டபுள் சந்தோஷம்,'' என்றவாறு, மேலாளர் காட்டிய இடங்களில் முதலில் ஆராதனாவும், கொடுக்கப்படும் கடனுக்கு உத்தரவாதம் தருபவர் என்ற இடத்தில், கீர்த்திலாலும் கையொப்பமிட்டனர்.

''உங்க பர்சனல் டெபாசிட் ஏதாச்சும் இருந்தாலும், எங்க பேங்க்ல போடுங்கம்மா. உங்களுக்கு சூப்பர் சர்வீஸ் தர நான் உத்தரவாதம்,'' என்றபடி மேலாளர் கையெழுத்தான பக்கங்களை சரி பார்க்கத் துவங்கினார்.

சா தனா, திலகனை நிமிர்ந்து பார்த்து, ''பார்ட்னர்ஷிப் கம்பெனிலாம் வெக்க என்கூட சேர அவசியமில்ல, பெரிய கம்பெனில உனக்கு வாய்ப்பு கெடைச்சிருக்குன்னு சொன்னியே... அது என்ன ஆச்சு?''

திலகனுக்கு அவளை நிமிர்ந்து பார்த்துப் பேச சங்கடமாயிருந்தது.

''நாம உழைச்சு மேல வந்தா கெடைக்கற சந்தோஷம் அதுல கெடைக்காது, சாதனா.''

''ஓ.கே., என்ன நடந்திருக்கும்ன்னு எனக்குப் புரியுது. ஆனா, உன்னை நான் துாக்கிப் போடல. நேரம் வரும் போது, உன் மனசு மாறாம இருந்தா, நாம நிச்சயமா பார்ட்னர்ஸ் ஆகலாம், பிசினஸ்ல.''

கடைசி வார்த்தையை அதிக அழுத்தம் கொடுத்து உச்சரித்தாள், சாதனா.

தீ பா வேலை முடிந்து பத்திரிகை அலுவலகத்திலிருந்து வெளியே வந்தபோது, தெருமுனையில், திலகன் நின்றிருப்பதை கவனித்தாள்.

அலட்சியம் செய்து ஆட்டோ ஒன்றில் ஏறப்போனாள். அவசரமாக அவளை நெருங்கினான், திலகன். ஆட்டோவில் அவள் ஏற முடியாமல், குறுக்கில் மறித்து நின்றான்.

''உன்கிட்ட கொஞ்சம் மனசுவிட்டுப் பேசணும், தீபா.''

''மனசைத்தான் எங்கேயோ விட்டுட்டியே. இப்ப பேச என்ன இருக்கு?''

''ஒரு காபி சாப்பிட நேரம் கொடு. எல்லாம், 'க்ளியரா' சொல்றேன், ப்ளீஸ்,'' புன்னகையில்லாமல் அவனுடன் எதிரில் இருந்த காபி கடையில் நுழைந்து அமர்ந்தாள், தீபா.

''பெரிய பிசினஸ்மேனுக்கு, ஒரு சாதாரண நிருபர்கிட்ட என்ன பேசணும்?'' என்றாள், தீபா.

''ஐயோ, வார்த்தையால என்னக் கொல்லாத. என்னை நம்பு. சாதனாவோட சேர்ந்து சீக்கிரமே பிசினஸ்ல பெரிய ஆளா வந்து சாதிச்சுக் காட்டப் போறேன். நீயும், நானும் மும்பைல சந்தோஷமான வாழ்க்கையை வாழ ஆசைப்படறேன்.''

அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள், தீபா.

''அங்க இன்னொரு, மனிஷா வந்து, உன் புத்தியை மாத்தற வரைக்கும், இல்ல?''

''உன் கோபம் நியாயமானது தான், தீபா. உம்மேல சத்தியமா என் புத்தி இனிமே அலைபாயாது. என்னைப் பழைய திலகனா பாரு,'' என்றான்.

''ஆனா, நான் பழைய தீபா இல்ல. நீ இனிமேலாவது உறுதியான மனசோட இருந்தா, எனக்கு ரொம்ப சந்தோஷம். ஆனா, நீ தீக்குளிச்சே வந்தாலும், என் மனசு இனிமே மாறாது. ஆல் தி பெஸ்ட்,'' என்று கூறி, எழுந்து வெளியில் நடந்தாள், தீபா.

திலகன், பின்னாலேயே அழைத்துக்கொண்டு வந்தபோதும், திரும்பிக்கூடப் பார்க்காமல், ஆட்டோவில் ஏறினாள்.

ஆ ட்டோ வீட்டை நெருங்கியபோது, ஆராதனாவின் கார் அங்கே நின்றிருப்பதை பார்த்தாள், தீபா.

ஒரு முறை சொன்னால், இவளுக்குப் புரியாதா? திலகனைப் போல்தானா இவளும்? மீண்டும் மீண்டும் வந்து தொந்தரவு செய்தால், என் மனம் மாறும் என்று நினைக்கிறாளா?

சற்றே கோபத்துடன் உள்ளே நுழைந்தபோது, ஹாலில் ஆராதனாவும், வழக்கறிஞர் பத்மனாபனும் அமர்ந்திருப்பதை கவனித்தாள். டீப்பாயில் வைக்கப்பட்ட சில காகிதங்கள் ஒவ்வொன்றாகப் புரட்டிக் காட்டப்பட, மஞ்சுளா கையெழுத்து போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், அவள் கோபம் சிகரத்தைத் தொட்டது.

''அம்மா, என் பேச்சை மீறி, நீ வீட்டை அடமானமா கொடுக்கறியா? இதே லாயர்தானே நாம ரெண்டு பேரும் கையெழுத்து போட்டா தான் வீட்டை அடமானம் வெக்க முடியும்ன்னு அன்னிக்கு சொன்னவரு? ஆராதனா, பிஸ்கட் போட்டதும், இப்ப அந்த ரூலை மறந்துட்டு வந்திருக்காரா? ஆனா, நான் ஒருநாளும் கையெழுத்து போட மாட்டேன்,'' என, படபடவெனப் பொரிந்தாள், தீபா.

''இரும்மா, இரும்மா... மேட்டரே தெரியாம எகிறாத,'' என்றார், பத்மனாபன்.

''சார், எப்பவும் நீங்க எங்களுக்கு எதிராத்தான் நடந்துப்பீங்கன்னு தெரியும்.''

''அவசரப்படாத, தீபு. இங்க வா. நான் எதுல கையெழுத்து போடறேன்னு பாரு,'' என்று, தீபாவை அருகில் அழைத்தாள், மஞ்சுளா.

நெற்றிச் சுருக்கத்துடன் அவர்களை நெருங்கிப் பார்த்தாள், தீபா.

''புரியுதா? 'தீபா ஷிப்பிங் ஏஜன்சீஸ்' கம்பெனியோட, 20 சதவீத, 'ஷேரை' ஆராதனா வாங்கியிருக்கா. அது எல்லாத்தையும், உங்கம்மா பேருக்கு அவ மாத்திட்டா. ஆனா, ஆராதனாவை டைரக்டரா முன்மொழியற பேப்பர்ஸ்ல தான் அம்மா கையெழுத்து போட்டிட்டிருக்காங்க,'' என்று விளக்கினார், பத்மனாபன்.

''இந்த, 'ஷேர்' வாங்கப் பணம் கேட்டு தான் இந்த வீட்டை அடமானம் வெக்க முடியுமான்னு அன்னிக்கு கேட்டேன்,'' என்றாள், ஆராதனா.

மெல்ல சோபாவில் அமர்ந்தாள், தீபா.

''ஆனா, நாங்கதான் குடுக்கலியே. இவ்ளோ, 'ஷேர்' வாங்க உன்கிட்ட ஏது பணம்?'' என்று குரலில் சுரத்தில்லாமல் கேட்டாள்.

''இவ மாத சம்பளத்தையே, 'ஷேரா'தான் வாங்கி சேர்த்திட்டிருந்தா,'' என்றார், பத்மனாபன்.

''வெளில உதவி கேக்க வேணாம்ன்னு தான் உன்கிட்ட மொதல்ல கேட்டேன். நீ மறுத்ததும், என் பாஸ், கீர்த்திலால் சார்கிட்ட கேட்டேன். அவர் நீண்ட காலக் கடன் ஏற்பாடு பண்ணிக் கொடுத்திருக்காரு.''

திடீரென்று போர்க்களத்தில் நிராயுதபாணியாக நிற்பது போல் உணர்ந்தாள், தீபா.

''பேங்க் லோனை அடைக்க இன்னும் ரெண்டு மூணு வருஷம் ஆகலாம். அதுவரைக்கும் பொறுப்பைக் கைமாத்தக் கூடாதுன்னு தான் நான் டைரக்டரா இருக்க சம்மதிச்சேன். அப்பதான் இன்னும் கம்பெனியை சீராக்க முடியும். அதனால அம்மா ஆசீர்வாதத்தோட அந்தப் பதவியை ஏத்துக்கறேன்.''

தீபா, நம்ப முடியாமல் அவளைப் பார்க்க, ஆராதனா புன்னகையுடன் தொடர்ந்தாள்...

''ஞானசேகரன் அப்பா தான், எனக்கும், வருணுக்கும் நல்ல படிப்பைக் கொடுத்தாரு. ஆனா, ஒருநாளும், எங்களுக்கு ஆடம்பரமான வாழ்க்கை அவசியப்படல. பூமியிலேயிருந்து தண்ணீரை உறிஞ்சிக் குடிக்கிற மேகம், பூமிக்குத் தான அதைத் திருப்பித் தருது? அதனால தான் அப்பா இழந்ததை மீட்டு உங்களுக்குத் தரணும்ன்னு நெனச்சேன். அதிர்ஷ்டவசமா அதுக்கு வாய்ப்பும் கெடச்சுது.''

ஆராதனா சொல்லச் சொல்ல, தீபாவுக்குள் ஒவ்வோர் உண்மையாக இறங்க நேரம் பிடித்தது.

சற்று நேரம் அங்கு நிசப்தம் மட்டுமே நிலவியது. சடாரென்று உடைந்து அழுது, ஆராதனாவின் கைகளைப் பற்றிக்கொண்டாள்.

''ஸாரி, ஸாரி. உன் நல்ல மனசு புரியாம, உன்னை எதிரியாவே பார்த்துட்டேன்,'' என்று விசும்பியபடி சொன்னாள்.

அவள் உச்சியை வருடிக்கொடுத்து இழுத்து அணைத்துக் கொண்டாள், ஆராதனா.

''எங்கண்ணனையும், அப்பாவையும் மன்னிச்சது போல என்னையும் மன்னிப்பியா?''

''எதுக்கு இவ்ளோ பெரிய வார்த்தையெல்லாம்? 'ஷிப்பிங்' கம்பெனிய சொந்தமாக்கிக்கணும்ன்னு நான் நெனக்கல. கீர்த்திலால் சார் எனக்காக, 'வெயிட்' பண்றாரு. வருணும் படிப்பை முடிச்சிட்டான். வேலையும் கெடைச்சாச்சு. கடனை நான் அடைக்கறதுக்குள்ள, நீயும், 'மேனேஜ்மென்ட் கோர்ஸ்' படிச்சிட்டு வா. கம்பெனியை உன்கிட்ட குடுத்துட்டு, நான் போயிட்டேயிருக்கேன். அதுவரைக்கும், உனக்கு உரிமையிருக்கற கம்பெனில நிர்வாகம் பண்ண எனக்கு, 'பர்மிஷன்' கொடு, போறும்.''

கண்ணீருடன், அகலமான புன்னகையுடன் ஆமோதித்து தலையாட்டினாள், தீபா.

''நான் எங்கல்லாம் கையெழுத்து போடணும், சார்?'' என்று தேங்கிய கண்ணீருடன், பத்மனாபனைக் கேட்டாள், தீபா.

'தீ பா ஷிப்பிங் ஏஜன்சீஸ்' அலுவலகக் கூடம், பூவால் அலங்கரி க்கப்பட்டிருந்தது. தங்கநிற பிரேமில், ஞானசேகரனின் புகைப்படத்துக்கு புதிய ரோஜா மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.

அருகிலிருந்த வெள்ளிக் குத்து விளக்கில் திரிகள் தயாராக இருந்தன. மெழுகுவர்த்தியை ஏற்றி, மஞ்சுளாவிடம் நீட்டினாள், ஆராதனா.

தீபா பிடித்துக்கொள்ள, தீபங்களை நிறைவான கண்ணீருடன் உயிர்ப்பித்தாள், மஞ்சுளா.

யுவராஜ், வருண், பர்தாவுக்குள் ஆராதனாவின் அம்மா எல்லாரும் சூழ்ந்திருக்க, முத்துராமன் கைதட்டலைத் துவக்கி வைக்க, ஊழியர்கள் சேர்ந்து கொண்டனர்.

''இந்தக் கம்பெனி என் கைக்கு வந்தபோது கொஞ்சம் தடுமாற்றத்தில் இருந்தது. ஆராதனா முக்கியமான பொறுப்பு எடுத்துக்கொண்டதும், செலவுகளை குறைத்தாள். வரவுகளைக் கூட்டினாள். வராமல் நின்றிருந்த பழைய கடன்களை சாதுர்யமாக வசூலித்தாள். பிசினஸ் பல்வேறு விதங்களில் லாபம் ஈட்ட ஆரம்பித்தது. இவ்வளவு சிறிய வயதில் மிகக்குறுகிய காலத்தில் இந்தக் கம்பெனியில் ஒரு டைரக்டராகும் அளவுக்கு, ஆராதனா உயர்ந்திருப்பதை நான் வியப்போடு பார்க்கிறேன்,'' என்று, கல்யாண் மேத்தா சொல்லச் சொல்ல, மீண்டும் துவங்கிய கைதட்டல் வெகுநேரம் தொடர்ந்தது.

ந ட்சத்திர விடுதியின் தோட்ட மாடியில், தீபா, ஆராதனா, யுவராஜ், வருண் என்று இளசுகள் எல்லாம் ஒரு புறமும், பெரிசுகள் எல்லாம் இன்னொரு புறமும் அமர்ந்திருந்தனர்.

யுவராஜின் போன் அதிர்ந்தது. உதவியாளன் ராகேஷ் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்: 'அஷ்வத்திற்கு, 'ஜாமின்' பெயில் மறுக்கப்பட்டது' அதை அவன் வருணிடம் காட்ட, வருண் முகத்தில் அகலமானப் புன்னகை.

தீபாவும், ஆராதனாவும் ஒரே மெனுகார்டை மேய்ந்து கொண்டிருந்ததைப் பார்க்கவே, மஞ்சுளாவுக்கு சந்தோஷமாக இருந்தது.

வெகுவாகத் தெளிந்திருந்தாள், தீபா. ஆராதனாவை பார்த்த பார்வையில் நன்றி இருந்தது; அன்பு ததும்பியது.

''நம்பக்கூடாதவங்களை நம்பினேன். நம்ப வேண்டியவங்களை சந்தேகப்பட்டேன். இனிமே கண்டதே காட்சின்னு அவசர முடிவுக்கு வந்துட மாட்டேன். எந்த நிலைமை வந்தாலும், உள்ளதை ஏத்துக்கிட்டு, வாழ்க்கையை நம்பிக்கையோட எதிர்கொள்ளணும்ன்னு ஒரு தைரியமே வந்திருச்சு. எல்லாமே உன்கிட்டேர்ந்து கத்துக்கிட்டது தான், ஆராதனா,'' என்றாள்.

''அது வாழ்க்கை கத்துக் குடுக்கற பாடம். நியாயமான வேலையை எடுத்துக்கணும். அதை முழுமையான அர்ப்பணிப்போட செய்யணும். யாராலயும் நம்ம முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த முடியாது,'' என்று அவளிடம் உறுதியான குரலில் சொன்னாள், ஆராதனா.

''இந்த தத்துவ வகுப்பைலாம், தீபாவைத் தனியா கூட்டிட்டு போய் எடு, ஆராதனா. இப்ப இதுக்கு பதில் சொல்லு. நீயும், யுவராஜும் எப்ப, 'இன்விடேஷன்' கொண்டுவந்து கொடுக்கப் போறீங்க?'' என்று கேட்டாள், மஞ்சுளா.

''எங்க ரெண்டு பேருக்கும் இன்னும் சில கனவுகள் இருக்கு, இலக்குகள் இருக்கு. எனக்கு அவனை விட்டா ஆள் கெடையாது; அவனுக்கு என்னை விட்டா ஆள் கெடையாது. அதனால், நாங்க அவசரப்படல,'' என்று, யுவராஜை சற்றே அணைத்தபடி சொன்னாள், ஆராதனா.

முகத்திரைக்குள், ஆராதனாவின் அம்மாவின் உதடுகளில் புன்னகை விரிந்தது.

- நிறைந்தது

சுபா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap