Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/கிடங்கு!

கிடங்கு!

கிடங்கு!

1


PUBLISHED ON : மே 03, 2026

Follow on Google

PUBLISHED ON : மே 03, 2026

1


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதிய நேரத்திலேயே, வானம் மப்புக்கூடி, இருண்டு கிடந்தது.

கவலையோடு சரிவான ஓட்டுக் கூரை வழியே வானத்தைப் பார்த்தான், முத்துவேலன்.

உள்ளிருந்து வந்த அவனது மனைவி, கலையரசி, ''என்ன இப்பிடி இடிஞ்சு போய் உக்காந்துட்டீங்க,'' என்றாள்.

''அவ்வளவு துாரம் சவால் விட்டு ஜெயிக்கணும்ன்னு படாத பாடுபட்டு, எல்லாம் வீணாயிடுமோன்னு இருக்கு,'' என்றான், முத்துவேலன்.

''வாங்க, நம்ம வீரப்பசாமி கோவிலுக்குப் போய் எண்ணெய் விளக்கேத்திட்டு வருவோம். இருட்டறதுக்குள்ள வந்துடலாம்.''

குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு கிளம்பினர்.

இரண்டு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது...

கோர்ட் வாசலில் நின்று, வழக்கில் தோற்றுப் போன ஆத்திரத்திலும், ஆதங்கத்திலும் தன் பெரியப்பா மகன்களிடம் கத்தினான், முத்துவேலன்.

'எல்லாரும் சேர்ந்து என்னை ஏமாத்திட்டீங்க இல்லே. வெளங்குவீங்களா. எங்க அப்பாவோட ஆத்மா உங்களை விடாதுடா...'

பெரியப்பாவின் மூத்த மகன், வெங்கடேசனும் பதிலுக்குக் கத்தினான்.

'உங்கப்பன் பாட்டுக்கு எவளுக்கோ பூர்வீக நிலத்தை வித்துக் குடுப்பாரு. நாங்க வாயில் விரல் வச்சிக்கிட்டு நிக்கணுமா. அதை மீக்கறதுக்குள்ள, கோர்ட்டு கேசுன்னு படாத பாடு பட்டுட்டோம் இல்ல...'

'நானும் தானேடா இத்தினி நாளு உங்களுக்கு சமமா உங்களோட வேலை செஞ்சிருக்கேன்...' என, குமுறினான், முத்துவேலன்.

'அதான் விளைச்சல்ல லாபம் பார்த்தது இல்ல. இனிமே எங்க நிலம் அது. கோர்ட்ல முடிவாயிடிச்சு. நீ, வேற வழி பார்த்துக்க. எங்க நிலத்துப் பக்கம் வரக்கூடாது...'

'அப்புறம் கடனும் வாங்கியிருக்கே. அதை எப்படி அடைக்கப் போறே...' பெரியப்பாவின் இரண்டாவது மகன் கேட்டான்.

வெங்கடேசனை பிடித்து இழுத்தார், பெரியப்பா அருணாசலம். 'டேய் அவங்கூட என்னடா பேச்சு. வா, வா...'

'டேய் வெங்கடேசா. அவங்க நமக்கு அத்தை முறை. நம்ம தாத்தாவோட ரெண்டாவது சம்சாரம். அவங்க பொண்ணுக்கு தான் எங்கப்பா கொடுத்தாரு. நாலு கொழந்தைகளை வச்சிக்கிட்டு, புருஷனும் செத்துப் போய் கஷ்டப்படறாளேன்னு அவரு பங்கத்தானே வித்துக் கொடுத்தாரு...'

'அதெப்படி பூர்வீக சொத்தை எங்க சம்மதம் இல்லாம, சட்டப்படி இல்லாத உறவுக்கு கொடுப்பாரு...'

'பெரியப்பா, நீங்களே சொல்லுங்க. இப்படி எங்களை ஒண்ணுமே கொடுக்காம ஏமாத்தலாமா?'

'தோ பாரு முத்து... தீர்ப்பு வந்திருச்சு. உன்ன நாங்க ஏமாத்தலே. பைரவனாதர் கோவிலுக்கு பின்னாடி கொஞ்சம் நிலம் உன் பங்குக்கு வந்திருச்சு இல்ல. அதை நேர்த்தி பண்ணி பிழைச்சுக்க. இல்ல வித்துக்க...' என்றார்.

ஒன்றுக்கும் உதவாத நிலம் அது.

உப்புத் தன்மை என்று விவசாயத்திற்கு தகுதியற்றதாகயிருந்த அந்த நிலத்தை, திருத்தி பயிர் செய்வது என்று உறுதியாக தீர்மானித்தான், முத்துவேலன்.

''வேணாங்க. நாம அதை வித்துட்டு வேற பெரிய ஊருக்குப் போயிடலம்?'' என்றாள், கலையரசி.

''எதுக்கு. அங்க போயி கூலி வேலை பார்க்கவா? இத்தினி நாளு, பேருக்காச்சும் சின்னப் பண்ணைன்னு ஏதோ பெரியப்பா குடும்பத்தை நம்பி இருந்தாச்சு. சிறிசா ரெண்டு புள்ளைங்களை வச்சிக்கிட்டு எங்க போய் பொழைக்கிறது? இங்க இந்த ஓட்டு வீடாச்சும் சொந்தமா இருக்கு. அங்கல்லாம் போயி வாடகை கொடுக்க முடியுமா சொல்லு. அங்கிட்டு இங்கிட்டுப் போக, லொடலொடன்னு ஒரு மொபெட்டாச்சும் வச்சிருக்கேன்.

''போவட்டும். நமக்குன்னு நெலம் கொஞ்சமாச்சும் தங்கிச்சு இல்ல... அதை வச்சு எப்படி சாகுபடி பண்றேன்னு பாரு. அவங்க முன்னாடி நம்மளும் யாருன்னு காட்டணும்,'' என்றவன், அன்றே விவசாய ஆபீசர்களைப் பார்த்தான்.

பல முறை நடையாய் அலைந்த பின், கதிரவன் என்ற ஒரு வேளாண் அலுவலர் நிலத்தை வந்து சோதனையிட்டார்.

உப்புத்தன்மை போக்க, நிறைய நல்ல நீர் பாய்ச்ச வேண்டியிருந்தது.

பைரவர் கோவிலுக்கு அந்தப் பக்கம் இருந்த, ராமையா சேர்வையின் நிலத்தில் கிணறு, போர்வெல் இரண்டும் இருந்தன.

அவரிடம் மன்றாடி, தேவையான பணமும் கொடுத்து, ஒருவழியாக நீர் பாய்ச்சி, வடிகால்கள் கட்டி, உப்பு நீரை வெளியேற்ற வழி செய்தான்.

கலையரசியின் ஒரு தங்க வளை, நல்ல தண்ணீரானது.

மண்ணை சோதித்து, கதிரவன் சொன்ன அளவில் ஜிப்சம் உரம் இட்டான்.

இரண்டு மாதங்கள் பாடுபட்டதில் ஒருவழியாக நிலம் பதமாயிற்று. டிராக்டர் வாடகைக்கு வாங்கி உழுதான்.

ஒரு போர்வெல் போட, தண்ணீர் ஊறும் இடம் பார்த்து, 200 அடி தோண்டுவது என்று முடிவாயிற்று.

அதற்கான அரசு மானியத்திற்காக அலைந்தான்.

''அது கிடைக்கிறப்ப கிடைக்கட்டும். நீங்க வேலையை ஆரம்பிங்க,'' என்ற, கலையரசி ஒரு பவுன் சங்கிலியை கொடுத்தாள்.

வாஸ்து பார்த்து, கிழக்கு மூலையில், போர்வெல் தோண்டி, நல்ல தண்ணீர் வந்தபோது, அங்காளம்மனுக்கு பொங்கல் படைத்து கும்பிட்டனர்.

வேளாண் அதிகாரி, கதிரவன் சொன்னபடி, விதைநெல் வாங்கி, பதப்படுத்தினான்.

இதையெல்லாம், பெரியப்பா அருணாசலம் குடும்பம் கவனித்துக் கொண்டிருப்பது அவனுக்கு தெரியும்.

''உங்க பெரியப்பா, அவங்க பசங்க எல்லாம் பொல்லாத ஆளுங்க. எதுனாச்சும் தடை பண்ணிறப் போறாங்க,'' என்று எச்சரித்தாள், கலையரசி.

''வழக்கு அவங்க பக்கம் தீர்ப்பானப் பிறகு நம்ம வழிக்கு வரமாட்டாங்கன்னு நெனக்கறேன்,'' என்றான், முத்துவேலன்.

விதைப்புக்கு ஆட்களை வரவழைத்தான். நாற்றுக்கள் பிடித்ததும், அடி உரமிட்டு பிடுங்கி நட்டனர். மேலும், செலவுகளுக்கு கலையரசியின் இன்னொரு வளையும் கழன்றது.

வேளாண் அதிகாரி, கதிரவன், 'ரிட்டையர்' ஆகி, மகன் இருந்த பெங்களூருக்கே போய் விட்டார்.

முத்துவேலனின் அனுபவமிக்க பராமரிப்பிலும், கடும் உழைப்பிலும் கதிர்கள் தளதளத்தன.

அறுவடை செய்த பின், அவனது நிலத்தை ஒட்டி இருந்த சிறு களத்து மேட்டில் வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து, நெல் பிரிந்து மூட்டைகளானது.

வைக்கோலை ஏதோ விலை கொடுத்து, சண்முகக் கோனார் வாங்கிப் போனார்.

நெல் மூட்டைகள் அறுபது தான் தேறியது.

மூட்டைகளை எங்கே அடுக்குவது?

அரசாங்கக் கிடங்குகளை விசாரித்தான்.

நெல் கொள்முதல் நிலையங் களுக்கு படையெடுத்தான்.

ஏகப்பட்ட போட்டி.

தன் வீட்டின் பின்புறம் புதர் மண்டிக் கிடந்த இடத்தை, மனைவியின் துணையோடு அவனே சுத்தப்படுத்தி, சமதளமாக்கினான்.

கொத்தனார் வைத்து, சிமென்ட் தளம் போட்டு, மேலே ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்டான்.

மூட்டைகளை அடுக்கியதும் பார்த்துப் பார்த்துப் பரவசம் அடைந்தான்.

ஒன்பது மற்றும் ஆறு வயதுகளில் இருந்த தன் பெண் பிள்ளைகள் இரண்டையும் கூட்டி வந்து, ''நம்ம வயலுல வெளஞ்ச நம்ம சோறுடா,'' என்று காட்டினான்.

''அடுத்த வருஷம் பாரேன். மிசினெல்லாம் வரவழைச்சு இதை விட அதிகமா மகசூல் எடுத்துரலாம். நீ குடுத்த நகையெல்லாம் வாங்கித் தந்துர்றேன்,'' என்று கலையரசியிடம் கூறினான்.

அ ந்தப் பெருமையில் இடி விழுகிறார் போல, வங்காள விரிகுடா ஒரு பெரும் புயலை தனக்குள் உருவாக்கி, தென் தமிழகத்தை நோக்கி அனுப்பியது.

'காற்று, 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும்!' என்றன செய்திகள். வானத்தில் முளைத்த கரும் பெரும் மேக மலைகள் அடர்ந்து பூமியைத் தாக்கத் தயாராகின.

'புதுசாப் போட்ட கூரை தாக்குப் பிடிக்குமா, கலை. ஒண்ணு பறந்துச்சுன்னா கூட, மழத்தண்ணி உள்ளாற வந்துடுமே...'

குழந்தைகள் துாங்கி விட்டனர். காற்று கொஞ்சம் அடங்கி, மழை ஆரம்பிக்க, இருவரும் குடையுடன் தங்கள், கிடங்கைப் போய்ப் பார்த்தனர்.

அதிர்ச்சி. அங்கே இருந்த மூட்டைகள் ஒன்றையும் காணவில்லை.

வேலி ஓரத்திலிருந்து இருளில், கோனாரின் குரல் கேட்டது.

''சாயங்காலம் எங்க போனீங்க? உங்க பெரியப்பா வீட்டு ஆளுங்க வந்து, உன் மூட்டைகளை லோடு வண்டியில ஏத்திக்கிட்டுப் போனாங்களே!''

''அய்யோ நான் பயந்தபடியே அவங்க புத்திய காட்டிட்டாங்க,'' கத்தினாள், கலை.

''இதை நான் சும்மா விடறாதில்ல.''

அவள் கூப்பிடுவதையோ, மழைத் துாறலையோ சட்டை செய்யாமல், தன் மொபெட்டில் ஏறி, பெரியப்பா வீடு நோக்கி விரைந்தான், முத்துவேலன்.

பெரியப்பா அருணாசலம் வீட்டில் இல்லை. ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அவரது, சொந்தக் கிடங்குக்கு நெல் அடுக்கப் போயிருப்பதாக வாசலிலேயே அவனுக்கு தெரிவிக்கப்பட்டது.

வண்டியை அப்படியே திருப்பினான்.

மேலே சீலிங் போட்ட பிரமாண்ட கிடங்கு அது. வாசலில் வண்டியை எறிந்து விட்டு உள்ளே பாய்ந்தான்.

அருணாசலம், வெங்கடேசன் மற்றும் பண்ணை ஆட்கள் எல்லாரும் ஒரு உள் பக்க சிறிய அறைக்குள், அவனது மூட்டைகளை எண்ணிக் கொண்டு இருந்தனர்.

''அநியாயம் செய்யாதீங்க பெரியப்பா,'' என, குரலுயர்த்திக் கத்தினான்.

''உங்ககிட்ட வாங்கின கடனை நான் திருப்பித் தந்துடறேன்னு சொன்னேன் இல்ல. கஷ்டப்பட்டு நான் செஞ்ச சாகுபடியில கை வைக்காதீங்க. நான், அப்புறம் மனுஷனா இருக்க மாட்டேன்.''

அவனுக்கு மூச்சிறைத்தது. உடல் கோபத்தில் நடுங்கியது.

ஏதோ பேச வந்த தன் மகன் வெங்கடேசனை, கையால் நிறுத்தி விட்டு, ''இவ்வளவு கஷ்டப்பட்டு பயிர் பண்ணிட்டு, என்னடா கிடங்கு கட்டியிருக்க, ஓலைப்பூ மாதிரி. சிமென்ட் தரையா அது. கொத்தனார் நல்லா ஏமாத்தியிருக்காரு. உன் பாடெல்லாம் வீணாப் போகக் கூடாதுன்னுட்டு, நான் தான் உன் மூட்டையெல்லாம் ஜாக்கிரதையா வக்கிறதுக்கு நம்ம கெடங்குக்கு கொண்டாரச் சொன்னேன்.

''சாயங்காலம் உன்னைக் கேப்போம்னா நீங்க யாரும் வீட்ல இல்ல. மழை பெரிசாகுதுன்னு கொண்டு வரச் சொன்னேன். நிலம் யாருதா இருந்தா என்னடா... அதும், மடியில் விளையற பொன்னெல்லாம் வீணாப் போலாமா? அப்படி விட்டா நான் என்ன மனுஷனா?

''இந்தா இந்த உள் அறையில் இருக்கிறது, உன் மூட்டைங்கதான் எண்ணிப் பார்த்துக்க. இந்த ரூமுக்கு வெறும் பூட்டு கூடப் போடல. நல்ல காட்ரெஜ் லாக்கர் போட்டிருக்கு. இந்தா அதோட ரெண்டு சாவியும். மழை விட்ட பிறகு வந்து என்ன வேணா பண்ணிக்க.''

சாவிக் கொத்தை அவன் கையில் திணித்து, அங்கிருந்து வெளியேறினார்.

திகைத்து நின்றான், முத்துவேலன்.

பத்மினி பட்டாபிராமன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap