Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/பொங்கல் இப்படியும் கொண்டாடுறாங்க!

பொங்கல் இப்படியும் கொண்டாடுறாங்க!

பொங்கல் இப்படியும் கொண்டாடுறாங்க!

பொங்கல் இப்படியும் கொண்டாடுறாங்க!

PUBLISHED ON : ஜன 14, 2024


Google News
Latest Tamil News
சகோதரர்களை காப்பாற்றும் பொங்கல்!

ஒடிசா மாநிலத்தில், பொங்கல் பண்டிகையன்று, காவியுடன் பச்சரிசியை சேர்த்து, நீர் தெளித்து விழுதாக அரைப்பர். அந்த கலவையை, தங்கள் சகோதரர்களுக்கு, நெற்றியில் திலகமிடுவர், பெண்கள். இந்த திலகம், சகோதரர்களை ஆண்டு முழுவதும், தீமையிலிருந்து காப்பாற்றுவதாக ஐதீகம்.

பருப்புருண்டை பறிமாறிக் கொள்வர்!

கர்நாடகா, ஆந்திரா பகுதிகளில் பொங்கல் திருநாளன்று, ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது, வெல்லம் கலந்த பருப்பு உருண்டைகளை பல வண்ணங்களில் செய்து, ஒரு தட்டில் கரும்பு வெற்றிலையுடன் வைத்து, தங்களுக்குள் பரிமாறிக் கொள்வர்.

முதல் பொங்கல் வாழ்த்து!

தமிழில் முதன்முதலில் பொங்கல் வாழ்த்து அனுப்பும் வழக்கம், 1928ல் துவங்கப்பட்டது. பெரியசாமி துாரன், சென்னையிலுள்ள மாநிலக் கல்லுாரியில் படித்துக் கொண்டிருந்தபோது, அகலமான குருத்தோலைகளை அழகாக நறுக்கி, வண்ண மைகளைக் கொண்டு, பொங்கல் வாழ்த்து எழுதினார். அதை, திரு.வி.க., மற்றும் கல்கி முதலிய தமிழறிஞர்களுக்கு அனுப்பி வைத்தார். இது தான் தமிழில் தோன்றிய முதல் பொங்கல் வாழ்த்து.



கொலுவுடன் பொங்கல்!


கர்நாடக மாநிலம், மைசூர் ஸ்ரீரங்கப்பட்டணத்தில், பொங்கலன்று பெருமாள் சொர்க்க வாசல் கடப்பதாக எண்ணி பூஜை செய்வர். ஆந்திர மாநிலத்தில், பொங்கலன்று பொம்மைகளை கொலுவில் வைத்து மகிழ்வர். இந்த கொலுவில் உழவர், உழத்தி, ஏர் முதலிய பொம்மைகள் பிரதான இடம் பெறும்.



இது பீஷ்மரின் வாக்கு!


சூரியன், மகர ராசியில் பிரவேசிக்கும் தினம் என்பதால், பொங்கல் திருநாளுக்கு, 'மகர சங்கராந்தி' என்று பெயர். அன்று அதிகாலையில், 'இந்திரோபேந்திர சகித சூரிய நாராயணாம் பூஜயாமி' என்று சூரியனை பூஜிக்க வேண்டும். சூரியனுக்கு உரிய விழாவே, பொங்கல் திருநாள் என்பது பீஷ்மர் வாக்கு.

எள்ளுருண்டை கட்டாயம்!

மஹாராஷ்டிராவில், பொங்கல் திருநாளை, மூன்று நாட்கள் கொண்டாடுகின்றனர். அப்போது மராட்டியர்கள் எள்ளுருண்டைக்கு முக்கியத்துவம் கொடுப்பர்.

முதல் நாள்:

போகிப் பண்டிகை அன்று மராட்டியர்கள், எள் சேர்த்து, கேப்பை மாவில் ரொட்டியுடன் காய்கறி கூட்டும் செய்து, இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, சாப்பிடுகின்றனர்.

இரண்டாம் நாள்:

சங்கராந்தி அன்று, வெல்லம் சேர்த்து எள்ளுருண்டை செய்கின்றனர். கூடவே, ஏதாவது ஓர் இனிப்பும் செய்து, பழம், கரும்பு ஆகியவற்றை படைப்பர். எல்லாருக்கும் எள்ளுருண்டை கொடுக்கின்றனர். மனிதர்கள் சமாதானமாக இருக்க உறுதி எடுக்கின்றனர்.

மூன்றாம் நாள்:

கிங்கராந்தி அன்று, எண்ணெயில் பொரித்தெடுத்த வடை செய்கின்றனர். பவுஷ்(தை) மாதம் குளிராக இருக்கும். அதனால், உடலுக்கு சூடு அளிக்கும் எள்ளைச் சேர்த்துக் கொள்கின்றனர், மராட்டிய மக்கள். பொங்கலின் போது, பெண்களுக்கு குங்குமம் மற்றும் எள்ளுருண்டை கொடுப்பது வழக்கம். அப்போது, 'தித்திப்பாகப் பேசு, சண்டை போடாதே...' என்று கூறுவர்.       





      Our Apps Available On




      Dinamalar

      Follow us