Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை - உலகை மாற்றுங்கள்!

கவிதைச்சோலை - உலகை மாற்றுங்கள்!

கவிதைச்சோலை - உலகை மாற்றுங்கள்!

கவிதைச்சோலை - உலகை மாற்றுங்கள்!

PUBLISHED ON : ஏப் 21, 2024


Google News
Latest Tamil News
வெற்றிகளின் பின்னால்

ஒளிந்து கொள்வதை விட

தோல்விகளின் முன்னால்

துணிந்து சவால் விட்டு

தோள் நிமிர்த்தி நில்லுங்கள்!

ஆத்திரங்களின் பின்னால்

அலைந்து திரிவதை விட

சமாதானங்களின் கரம் பற்றி

குறை மறந்து மன்னித்து

மா மனிதனாக நிமிருங்கள்!

நடுநிலைமைகளின் பின்னால்

பாதுகாப்பு தேடுவதை விட

கோழைத்தனத்தை விலக்கி

தீர்க்கமான முடிவை எடுத்து

நியாயத்தைக் காப்பாற்றுங்கள்!

சுயநலங்களின் பின்னால்

மறைந்திட முயல்வதை விட

மனிதநேயத்தின் மாண்புணர்ந்து

தியாக உள்ளம் கொண்டு

பொது நலத்திற்காக வாழுங்கள்!

கர்வங்களின் பின்னால்

வலம் வருவதை விட

நட்புணர்வு ததும்பி நிற்க

தோழமைகளின் முகம் தொட்டு

அன்பைப் பரிமாறுங்கள்!

மோசடிகளின் பின்னால்

பயணம் செல்வதை விட

நேர்மையின் துணை நாடி

எல்லாரும் மகிழ்ந்திருக்க

நல்லவற்றைச் செய்யுங்கள்!

ஜாதி, மதங்களின் பின்னால்

பெருமை பேசி சுற்றுவதை விட

ஒற்றுமையின் பலம் புரிந்து

சமுதாயம் மேம்பட்டு விளங்க

சமத்துவத்தைப் போற்றுங்கள்!

வன்முறைகளின் பின்னால்

சுகம் காண்பதை விட

பெருங்கருணையின் பயனறிந்து

தீங்கற்ற சிறந்த இடமாக

இவ்வுலகை மாற்றுங்கள்!

— இந்திராணி ஆறுமுகம்,

புவனகிரி, கடலுார்.






      Our Apps Available On




      Dinamalar

      Follow us