Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/நம்மிடமே இருக்கு மருந்து - மக்காச்சோளம்!

நம்மிடமே இருக்கு மருந்து - மக்காச்சோளம்!

நம்மிடமே இருக்கு மருந்து - மக்காச்சோளம்!

நம்மிடமே இருக்கு மருந்து - மக்காச்சோளம்!

PUBLISHED ON : ஜூன் 02, 2024


Google News
Latest Tamil News
உடல் எடை குறைக்கும் தன்மை கொண்ட மக்காச்சோளத்தில், மக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், துத்தநாகம், வைட்டமின் பி, தயாமின், நியாசின், பீட்டா கரோட்டீன், பெருலிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் போலிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

இதை பச்சையாகவும், வேக வைத்தும் சாப்பிட, நார்ச்சத்து முழுமையாக கிடைக்கிறது. இந்த நார்ச்சத்துக்கள், வயிற்றில் செரிமான அமிலங்கள் சுரப்பை சரி செய்கிறது. அத்துடன் மலச்சிக்கலை தீர்த்து, குடல் ஆரோக்கியத்தை காக்கிறது.

மூல நோய் ஏற்படாமல் தடுப்பதில் மக்காச்சோளத்துக்கு பெரும் பங்கு உள்ளது. அதேபோல, வயிறு புற்றுநோய் செல்களை அழிக்கும் சக்தி நிரம்பி இருக்கிறது.

குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை, மக்காச்சோளத்தை சாப்பிடலாம். கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது. வயிற்றில் உள்ள குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்க உதவுகிறது. எனவே, மருத்துவர்கள் ஆலோசனை பெற்று மக்காச்சோளத்தை குறிப்பிட்ட அளவு சாப்பிடலாம்.

மக்னீசியம், கால்சியம் நிறைந்துள்ள இந்த சோளம், எலும்புகளை உறுதிப்படுத்துகிறது. இதயத்துடிப்பை சீராக்குகிறது. ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.

சிறுநீரை அதிகமாக பெருக்கும் சக்தி மக்காச்சோளத்திற்கு இருப்பதால், உடம்பிலுள்ள உப்பை கரைக்கும் தன்மையும் உண்டு. எளிதில் ஜீரணமாகும், மாவுச்சத்து மற்றும் கொழுப்பு இல்லாதது.

நார்ச்சத்து அதிகம் உள்ள மக்காச்சோளத்தை சாப்பிட்டால், பசியை குறைத்து, வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது. இதில், ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால், கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, இதயத்துக்கும் சீரான ரத்த ஓட்டம் செல்ல துாண்டுகிறது.

உடல் எடை குறைப்புக்கு பெரிதும் துணை புரிகிறது. இதை வெறுமனே வேக வைத்து சாப்பிட வேண்டும். வெண்ணெய், சீஸ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால், பலன் கிடைக்காது.

உடல் பலத்துக்கும், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கும் கைகொடுக்கிறது. 100 கிராம் சோளத்தில், 364 கலோரி இருக்கிறது.

கோதுமை, அரிசியை விட, சோளத்தில், ஆன்டி ஆக்சிடெண்ட் அதிகம் இருப்பதுடன், கார்போஹைட்ரேட், கலோரிகள் இரண்டுமே சரியான அளவில் உள்ளது. இது, வளரும் குழந்தைகளுக்கு தேவையான சத்துகள் அளிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

ரத்த சோகை உள்ளோர், சோளத்தை பச்சையாக சாப்பிட்டால், உடலில் ரத்த அணுக்களின் உற்பத்தி அதிகரிக்கிறது. அடிக்கடி மக்காச்சோளம் சாப்பிடுபவர் களுக்கு, கண் பார்வை கூர்மையாக இருக்குமாம். இதற்கு காரணம், கரோடெனாய்டுகள், வைட்டமின் சி மற்றும் ஈ உள்ளதால், பார்வை திறனை அதிகப்படுத்துகிறது. மன அழுத்தத்தை விரட்டியடிக்கக் கூடிய, கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் சத்துகள் நிறைந்துள்ளது.

தோலில், சுருக்கங்களை நீக்கி, சருமத்துக்கு ஈரப்பதம் தருகிறது. அதனால், முகம் பொலிவு பெற, பலரும் சோள மாவை பயன்படுத்துகின்றனர். இதன் மாவை - கார்ன் பிளவரை, சிறிது பாலில் கரைத்து, முகத்தில் பூசி கழுவ, முகம் பொலிவு பெரும். தழும்புகள், கருப்பு நிற திட்டுக்கள் இருந்தாலும், நீங்கி விடும்.

தொகுப்பு: ம.வசந்தி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us