Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/நாற்காலி ஆசைகள்!

நாற்காலி ஆசைகள்!

நாற்காலி ஆசைகள்!

நாற்காலி ஆசைகள்!

PUBLISHED ON : ஜூன் 09, 2024


Google News
Latest Tamil News
இந்த காலத்தில் நாற்காலிக்கு ஆசைப்படாதவர்கள் ரொம்ப அபூர்வம்.

அந்த காலத்திலேயும் இது மாதிரி ஆசைகள், சபலங்கள் இருந்துள்ளன.

வசிஷ்டருக்கு ஒரு விசேஷமான ஆசனத்தை கொடுத்திருந்தார், பரமசிவன். அதில் உள்ள விசேஷம் என்னவென்றால், வசிஷ்டர் செல்லும் இடத்துக்கு, அவருக்கு முன்பாகவே, அந்த ஆசனம் புறப்பட்டு போய், வசதியான இடமாக பார்த்து இருந்துக்கும். வசிஷ்டர் அங்கே போனதும், நேராக அதில் போய் உட்கார்ந்து கொள்வார்.

இதைப் பார்த்து, மற்ற முனிவர்கள் எல்லாம் பொறாமைப் பட்டனர்.

'நாமும் அவரை மாதிரி தானே... இருந்தாலும், நமக்கு அது மாதிரி ஒரு ஆசனம் கிடைக்கலையே...' என, யோசித்தனர்.

பரமசிவனிடமே இதைப் பற்றி கேட்க முடிவு செய்தனர்.

'ஐயா, நாங்களும் முனிவர்கள் தானே. வசிஷ்டர் மாதிரியே நாங்களும், தங்களை குறித்து கடும் தவம் செய்து வருகிறோம். அப்படி இருக்கும்போது, அவருக்கு மட்டும் ஏன் இந்த விசேஷ சலுகை?' என, பரமசிவனிடம் கேட்டனர், அந்த முனிவர்கள்.

'முனிவர்களே, உங்க கேள்விக்கு நான் பதில் சொல்றேன். அதுக்கு முன், நீங்க ஒரு காரியம் செய்யணும்...' என்றார், பரமசிவன்.

'என்ன செய்யணும். சொல்லுங்க?' என்றனர், முனிவர்கள்.

'நீங்க, ஒவ்வொருவரும் தனித்தனியாக போய், உங்களை விட, உயர்ந்த ஒருத்தரை தேடி கண்டுபிடித்து, அவருக்கு அதிதி பூஜை பண்ணி, ஒரு மண்டலத்துக்குள் அவரை என்னிடம் அழைச்சுக்கிட்டு வாங்க...' என்றார்.

'சரி...' என, அனைவரும் புறப்பட்டனர்.

அவர்கள் போனதும், வசிஷ்டரை வரவழைத்தார்.

'வசிஷ்டரே, இன்றிலிருந்து ஒரு மண்டலத்துக்குள், உங்களை விட தாழ்ந்தவர் ஒருவரை தேடிக் கண்டுபிடித்து, அவருக்கு, அதிதி பூஜை பண்ணி, அவரை என்னிடம் கூப்பிட்டு வாங்க...' என்றார், பரமசிவன்.

'சரி...' என,புறப்பட்டு போனார், வசிஷ்டர்.

கொஞ்ச நாள் ஆனது. முனிவர்கள் எல்லாம் திரும்பி வந்து, பரமசிவன் முன் நின்று, 'ஐயா, எவ்வளவோ தேடிப் பார்த்தோம். எங்களை விட, உயர்ந்தவர் யாருமே கிடைக்கல...' என்றனர்.

வசிஷ்டரும் வந்து சேர்ந்தார்.

'ஐயா, எவ்வளவோ தேடிப் பார்த்தேன். என்னை விட, தாழ்ந்தவர் யாருமே கிடைக்கலை. மேலும், என் மனைவி எனக்கு அடங்கினவள் தானே, அவளுக்காவது அதிதி பூஜை பண்ணி, அழைத்து வரலாம் என யோசித்து பார்த்தேன்.

'என் மனசு, அதற்கு இடம் கொடுக்கலை. ஏன்னா, அவளோட பதி விரதத்துக்கு முன், நாம எம்மாத்திரம்ன்னு யோசிச்சுப் பார்த்தேன். அதனால், அந்த எண்ணத்தையும் கை விட்டுட்டேன்...' என்று ரொம்ப வருத்தத்துடன் கூறினார், வசிஷ்டர்.

இதைக் கேட்டவுடன், மற்ற முனிவர்கள் வெட்கப்பட்டனர்.

இந்த உலகத்தில் நம்மளை விட மேலானவர்கள் யாருமே இல்லைன்னு, நாம் நினைத்தோம். வசிஷ்டரோ, தன்னை விட தாழ்வானவர்கள் யாருமே இல்லைன்னு நினைக்கிறார். பரமசிவன் ஏன் அந்த ஆசனத்தை அவருக்கு மட்டும் கொடுத்தார் என்பதை புரிந்து கொண்டனர்.

இந்த காலத்தில் இப்படியா நடக்கிறது!

பி. என். பி.,





      Our Apps Available On




      Dinamalar

      Follow us