/இணைப்பு மலர்/வாரமலர்/விசேஷம் இது வித்தியாசம்: உலகின் முதல் தாய்மை தினம்!

விசேஷம் இது வித்தியாசம்: உலகின் முதல் தாய்மை தினம்!

விசேஷம் இது வித்தியாசம்: உலகின் முதல் தாய்மை தினம்!

விசேஷம் இது வித்தியாசம்: உலகின் முதல் தாய்மை தினம்!

விசேஷம் இது வித்தியாசம்: உலகின் முதல் தாய்மை தினம்!

PUBLISHED ON : ஏப் 05, 2026


Google News
Latest Tamil News
ஏப்.,11 - தாய்மை தினம்

பாரதத்தில், தேசிய தாய்மை தினம், கடந்த, 2003 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் நோக்கம், பிரசவத்தின் போது, ஒரு தாய் கூட உயிர் இழந்து விடக்கூடாது என்பது தான். பல கஷ்டங்களைத் தாண்டி, பூமிக்கு ஒரு புதிய உயிரைத் தருவதால் தான், குழந்தை பிறத்தலை, தாய்மைப் பேறு என்கின்றனர்.

எத்தனை பேறு பெற்றால் என்ன, குழந்தை பிறத்தலுக்கு ஈடான பேறு கிடையாது. இதனால், பிரசவத்தை கிராமங்களில், பேறு காலம் என்கின்றனர். இவ்வளவு ஏன்? பிரசவ வலியில் துடித்த ஒரு பெண்ணுக்கு, சிவபெருமானே பிரசவம் பார்த்திருக்கிறார்.

திருச்சி என்றதுமே, மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் தான் நினைவுக்கு வரும். இவரது நிஜப் பெயர், செவ்வந்திநாதர்.

இவர் எப்படி, தாயுமானவர் ஆனார் தெரியுமா?

திருச்சியில் வசித்தனர், தனகுப்தன்-, ரத்னாவதி தம்பதியர். மலைக்கோட்டை செவ்வந்திநாதரை ஒருநாளும் வணங்கத் தவறியதில்லை, ரத்னாவதி. இந்நிலையில், அவள் கர்ப்பமானாள். பிரசவ காலம் நெருங்கியதால், மகளுக்கு பிரசவம் பார்க்க மகள் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாள், அவளது தாய். அவள் வருவதற்குள், அந்தப் பெண்ணுக்கு வலி ஏற்பட்டு விட்டது. கணவனும் வீட்டில் இல்லை. அவள் செவ்வந்திநாதரிடம், தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினாள்.

அப்போது, அவளது தாய் மருந்துகளுடன் வந்து சேர்ந்தாள். பிரசவம், சுகமாக நடந்தது. மருந்து அரைத்து வருவதாக சொல்லி, வெளியே சென்றாள், அந்தத் தாய். சென்ற அடுத்த கணமே திரும்பி வந்தாள்.

'அம்மா! இப்போது தானே மருந்து அரைக்க போனாய், உடனே திரும்பி விட்டாயே! மருந்து அரைக்கவில்லையா?' என கேட்ட, ரத்னாவதியிடம், 'ஆமாம்! உனக்கு எப்போது குழந்தை பிறந்தது? பிரசவம் யார் பார்த்தது? நான் காவிரி வெள்ளத்தைக் கடப்பதற்கு நேரம் அதிகமாகி விட்டது. இப்போது தானே வருகிறேன்...' என்றாள் ஆச்சரியமாக, அந்தத்தாய்.

'அம்மா! என்ன சொல்கிறாய்? நீ தானே எனக்கு பிரசவம் பார்த்தாய்...' என, குழப்பத்துடன் சொன்னாள், ரத்னாவதி. அப்போது தான் உண்மை புரிந்தது. வந்தது தன் தாய் அல்ல, தன் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து, தன் தாய் போல் வந்தது, செவ்வந்திநாதர் என்று.

உடனே, அவள் பரவசத்துடன் சொன்னாள், 'எனக்கு பேறுகாலம் பார்த்த சிவனே! நீயே, எனக்கு தாயும் ஆனாய்...' என்று.

அன்று முதல் திருச்சி சிவன், 'தாயுமான சுவாமி' எனப்பட்டார். சித்திரை பிரம்மோற்ஸவத்தின் ஐந்தாம் நாள், இந்த பிரசவ நிகழ்ச்சி விழாவாக நடத்தப்படும்.

பிரசவ வலி தாளாமல் தன் பக்தைக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என்று, சுவாமியே பிரசவம் பார்த்திருக்கிறார். தாய்மை தினத்தின் நோக்கமே, பிரசவத்தில் பெண்கள் உயிர் விட்டு விடக்கூடாது என்பது தான்.

இப்போது சொல்லுங்கள், உலகின் முதல் தாய்மை தினத்தை கொண்டாடியவர் சிவன் தானே!

தி. செல்லப்பா