PUBLISHED ON : ஜூன் 14, 2026

ஜூன் 17 - ரம்பா திரிதியை
பணம் கிடைக்க, திருமணம் நடக்க, குழந்தை பெற என, பல கோரிக்கைகளுக்காக விரதம் இருப்பது வழக்கம். ஆனால், தான் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு விரதம் உண்டா என்ன... அது தான், ரம்பா திரிதியை விரதம்!
அப்ஜ சரஸ் என்பதே, அப்சரஸ் ஆனது. அப்ஜம் என்றால், தாமரை. சரஸ் என்றால், குளம் அல்லது தண்ணீர். குளத்தில் இருக்கும் தாமரை எவ்வளவு அழகாக இருக்குமோ, அது போல பேரழகு கொண்டவர்கள் தான், அப்சரஸ்கள். இவர்கள் மொத்தம், 60 ஆயிரம் பேர்.
பாற்கடலை, தேவர்கள் மற்றும் அசுரர்கள் கடைந்த போது தோன்றிய இவர்கள், தேவலோக நாட்டிய ராணிகளாக நியமிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு தலைவி, ரம்பா. இவர்களை அடுத்து, ஊர்வசி, மேனகை, திலோத்தமை ஆகியோர் அழகிகளாக விளங்கினர்.
இவர்கள் நால்வருக்கும் இடையே, யார் அழகி என்பதில் போட்டி இருந்தது. இதுபற்றி, தேவலோக தலைவன், இந்திரனிடம் கேட்டனர். அவர்களுக்கு நாட்டிய போட்டி நடத்தி தீர்ப்பளிப்பதாக சொன்னான், இந்திரன். போட்டியின் போது, வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நோக்கத்தில், விதிகளுக்கு மாறாக ஆடினாள், ரம்பா. இதனால், கலையரசியான சரஸ்வதியின் கோபத்துக்கு ஆளானாள்...
'கலைத்திறனை வெளிப்படுத்தும் போது, மற்றவர்கள் வென்று விடுவரோ என்ற பயத்திலோ, பொறாமையிலோ விதிகளை மீறக்கூடாது. இதை, ரம்பை மீறி விட்டாள். எனவே, அவளது அழகு கெட்டு போகட்டும்...' என சாபமிட்டாள், சரஸ்வதி.
சாப விமோசனம் வேண்டி, இந்திரனை நாடினாள், ரம்பா...
'பூலோகத்தில், காத்யாயனர் என்ற முனிவரின் மகளாகப் பிறந்திருக்கிறாள், பார்வதி தேவி. அவள், காத்யாயனி என்ற பெயரில் தவம் செய்கிறாள். அவளுக்கு சேவை செய்து, வழிபட்டால், உன் சாபம் தீரும்...' என்றான், இந்திரன்.
இதையடுத்து, வைகாசி மாத வளர்பிறை துவிதியை அன்று, பூலோகம் வந்தாள், ரம்பா. மஞ்சளில், பார்வதிதேவியின் உருவத்தை வடித்து, பூஜை செய்து விரதம் அனுஷ்டித்தாள்.
மறுநாள் திரிதியை திதி அன்று காலை, அம்பாள் அவளுக்கு காட்சியளித்து, இழந்த அழகை மீண்டும் தந்தாள். அத்துடன், ரம்பையின் பெயரால் அன்றைய திதி, 'ரம்பா திரிதியை' என, அழைக்கப்படும் எனவும் அருள்பாலித்தாள்.
கார்த்திகை மாத வளர்பிறை திரிதியை திதியையும், ரம்பா திரிதியை என்பர். அன்று அம்பாள், கார்த்திகேயன் என்ற முருகனுடன் காட்சி தந்ததால், அம்பாளுக்கு கார்த்தியாயினி என்ற பெயர் வந்ததாகவும் சொல்வர்.
அழகுடன் திகழவும், அழகான மணமகன் அமையவும் பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டிப்பர். காலசுழற்சி காரணமாக, இந்த ஆண்டு சற்று தாமதமாக ஆனி மாதம் மூன்றாம் தேதி, ரம்பா திரிதியை வருகிறது.
அழகை ஆராதிக்கும் அனைவரும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம்.
தி. செல்லப்பா
